2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இராகலை சம்பவம்: நடந்தது என்ன?

Johnsan Bastiampillai   / 2021 ஒக்டோபர் 17 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆறுமுகம் ரமேஸ்

ramesarumukam@gmail.com

என்னதான் கோபகாரர்களாக இருந்தாலும் ஆபத்து ஏற்படும் போது ஓடோடி வந்துவிடுவர். ஆனால், ஓடோடிவந்தவர்கள் விரட்டிவிட்டு, தீயில் ஒருவர் குளிர்காய்ந்த சம்பவத்தால், ஐவர் கருகி மாண்ட சம்பவம் இன்னும் கண்களுக்குள் நிழலாய் ஆடுகிறது. 

பச்சை குழந்தையும் 12 வயதான சிறுவனும் இவ்வாறு கருகி போவார்கள் என யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். கண்களை கண்ணீரால் குளம் கட்டசெய்திருக்கும் இந்தச் சம்பவம் இராகலை தோட்டம் மத்திய பிரிவு  ஒக்டோபர் 07 ஆம் திகதி வியாழன் இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மண் சுவராலும்,பொலித்தின் ரெட்டுகளாலும், மறைக்கப்பட்டு தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த வீடே தீ பிடித்து எரிந்துகொண்டிருந்த போது, அதனை அணைக்க ஓடோடி வந்தவர்களை விரட்டியடித்து விட்டு, வீட்டின் முற்றத்தில் போதையில் கிடந்த, மகன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

அந்த வீட்டில் அறுவர் வசித்து வந்துள்ளனர். சம்பவம் தினத்தன்று 27 வயதுடைய தங்கையா இரவீந்திரன் என்பவர் மாத்திரம்  உயிர் தப்பியிருந்தார்.
உயிர் தப்பியவரின் தந்தை இராமையா தங்கையா (வயது 61) முழுமையாக எரியுண்டு வீட்டின் முன் அறையில் கிடந்தார். 

 அவரின் மனைவி செவனமுத்து லெட்சுமி (வயது 57),  நதியா (வயது 34),  நதியாவின் முதல் கணவருக்கு பிறந்த துவாரகன் (13), அவரது இரண்டாவது கணவரான மோகனதாஸ் என்பவருக்கு பிறந்த ஹெரோசன் (வயது 01) ஆகியோர் வீட்டின் பின் அறையில் ஒரே இடத்தில் கருகி கிடந்தனர். 

மலையக பெருந்தோட்ட பிரதேசங்களில் எத்தனையோ உயிரிழப்பு சம்பவங்கள் இடம்பெற்றிருக்கிறது. ஆனால் இராகலை சம்பவமானது மக்களுக்கு பாரிய சோகத்தை ஏற்படுத்தியதுடன், பாரிய சந்தேகத்தையும் கிளப்பியிருந்தது.

நதியாவின் கணவர் மோகனதாஸ், இராகலை நகரில் ஐசிங் கேக், நெக்டோ பானம்  ஆகியவற்றை வாங்கி கொண்டு, தனது மகனின் பிறந்தநாளை கொண்டாட அன்றைய தினம் காலை 10 மணியளவில் வருகை தந்துள்ளார்.

தேநீர் வேண்டாமென சொல்லிவிட்டு      மகனை கொஞ்சிக் கொண்டு வீட்டு வாசலிலேயே இருந்துள்ளார் கணவன். சிறிது நேரத்தில் கேக் வெட்டப்பட்டது. அதிலிருந்து பூவை எடுத்து, பிள்ளைக்கு ஊட்டிவிட்டு முகங்களிலும் தடவியுள்ளார்.

அதன்பின்னர், தான் வாசிக்கும் இராகலை சூரியகாந்தி வீட்டுக்கு வரும்படி மனைவியை அழைத்துள்ளார். மறுநாள் காலையில் வருவதாக மனைவி தெரிவித்ததை அடுத்து, சுமார் ஒரு மணிநேரத்தில் அங்கியிருந்து கிளம்பிவிட்டார். 

மாலை பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக, தம்பியான தங்கையா இரவிச்சந்திரனிடம் கேக் ஒன்றை வாங்கிவருமாறு நதியா கேட்டுள்ளார். உறவினர்களின் பங்குபற்றலும் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. 

பின்னர் அன்றைய தினம் மாலை பிறந்த நாள் வைபவத்தை கொண்டாட நதியா தயாராகியுள்ளார். சற்று மதுபோதையில் இருந்த தங்கையா இரவிச்சந்திரன், ஓட்டோவொன்றின் மூலம் இராகலைக்கு மீண்டும் சென்றுள்ளார். வரும்போது தள்ளாடியே வந்துள்ளார். வீட்டுக்குள் வந்து வெளியே சென்ற சிறிது நேரத்திலேயே வீடு தீப்பற்றி எரிந்துள்ளது. 

சம்பவத்தை அறிந்த அயலவர்கள் கூச்சலிட்டு சம்பவ இடத்திற்கு வருகை தந்தவர்கள், “பிள்ளைகள் எங்கே”, “லெச்சிமி அக்கா எங்கே”? எனக் கேட்க, மதுபோதையில் தள்ளாடிகொண்டிருந்த  இரவீந்திரன் (மகன்)    “வீட்டில் யாரும் இல்லை; எல்லாம் சூரியகாந்திக்கு போய் விட்டார்கள்” எனச் சொல்லிக்கொண்டு அவ்விடத்திலேயே மல்லாக்க விழுந்துள்ளார். 

 அயலவர்கள் தீயை கட்டுப்படுத்த முயசித்தும் பயனளிக்கவில்லை. வீடு நொடியில் முழுமையாக எரிந்துவிட்டது. வீட்டின் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மீட்டர் பெட்டியும் வெடித்துச் சிதறியுள்ளது. 

வீட்டில் எரிவாயு சிலிண்டர் வயர்களும் எரிந்துவிட்டன. எனினும், சிலிண்டர் வெடிக்கவில்லை. உள்ளிருந்தவர்களை மீட்க மண்சுவரை உடைத்துள்ளனர். எனினும், எந்த முயற்சியும் பயனளிக்கவில்லை. 

அவ்வீட்டில் வளர்க்கப்பட்ட குட்டி எனும் பெயருடைய நாய், கண்ணீர் விட்ட நிலையில்  சோகத்துடன் இருந்ததையும் அவதானிக்கமுடிந்தது. 

சம்பவம் தொடர்பில் சட்ட விசாரணைகள் (08.10.2021) காலை ஆரம்பமானது.அங்கு  நுவரெலியா பொலிஸ் நிலைய இரசாயன தடயவியல் பொலிஸார், குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து, அவர்களின் கடமையை ஆரம்பித்ததுடன்,கொழும்பிலிருந்தும் இரசாயன பகுப்பாய்வு பிரிவினர்கள் வரவழைக்கப்பட்டனர்.

இதன்போது, உடலங்களை பொதுமக்கள் பார்வையிடக்கூடாது பாதுகாப்பாக ஒரே சவக்குழியில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டதுடன்,தேவைப்படின் மீண்டும் சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படும் என திறந்த உத்தரவை எழுத்து மூலம் சட்ட வைத்தியர் வழங்கியிருந்தார்.

இராகலை தோட்ட அதிகாரி,  ஐந்து சவப்பெட்டிகள் பெறுவதற்கு  பணம் வழங்கியிருந்தார். தோட்ட மக்கள் அஞ்சலி செலுத்த தோட்ட மையானத்தில் மாலை   7.30 மணியளவில் உடலங்கள் அடக்கம் செய்யப்பட்டன.

  

இரவீந்திரன் இராகல பொலிஸார் மயானத்திலிருந்து அழைத்து சென்றனர்.நதியாவின் கணவர் விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து பொலிஸாரின் பாதுகாப்பில் தடுத்துவைக்கப்பட்ட இரவீந்திரன்  (12.10.2021) பிற்பகல் வரை மூன்று நாள்கள் விசாரிக்கப்பட்டார்.

 தங்கையாவின் மகனான கெம்பா என்றழைக்கப்படும் இரவீந்திரன் சம்பவ தினத்துக்கு முதல் நாள் இராகலை எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பெற்றோல் வாங்கியதாக  தகவல் கிடைத்துள்ளது. 

இராகலை நகரில் பல கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கமெராக்களில் பதிவான காட்சிகளும் ஆராயப்பட்டன.   தீ பற்றியெறிந்த போது, வீட்டுக்குள் யாரும் இல்லையென இரவீந்திரன் மக்களிடம் கூறியமையும் வீடியோவில் ஆதாரமாக உள்ளது.

 அதன்பின்னர், இரவீந்திரனை 12ஆம் திகதி கைது செய்த பொலிஸார். 
  வலப்பனை நீதிமன்ற நீதவான் டி.ஆர்.எஸ்.குணதாச முன்னிலையில் அன்று மாலையே ஆஜர்செய்தனர். நீதவானின் உத்தரவின் பிரகாரம், அவர், இம்மாதம் 25ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

 எவ்வாறியினும் இந்த உயிரிழப்புகள் ஏற்றுக்கொள்ள முடியாத துக்கத்தை தந்துள்ளது. இந்தச சம்்பவத்தில் வீட்டார் வளர்த்த நாய், கடிநாய் என தெரிவந்தது. அந்நாள், மூன்று நாள்களுக்கு மேலாக சோகமாகவே இருந்துள்ளது. 

 இந்த நிலையில் இராகலை பரிச்சகாடு மண்ணில் பக்குவமாய் அடக்கம் செய்யப்பட்ட ஐந்து உயிர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென  இராகலை மத்திய பிரிவு தோட்ட மக்கள் மட்டுமின்றி  அனைவருமே பிரார்த்தனை செய்துவருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .