2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஐ.எம்.எவ் கடன்: மூன்றாமுலகக் கடன் பற்றிய கதைகள்

Johnsan Bastiampillai   / 2021 ஒக்டோபர் 24 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

 

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை, இன்னும் கடனை வாங்குவதன் மூலம் தீர்த்து விடலாம் என்று பலரும் நம்புகிறார்கள். 

இலங்கையின் பொருளாதார நெருக்கடி, இரண்டு விடயங்களை அடிப்படையாகக் கொண்டது. முதலாவது, பொருளாதாரக் கொள்கை; இரண்டாவது, அதன்வழியமைந்த பொருளாதாரக் கட்டமைப்பு. 

இவை இரண்டிலும், அடிப்படையான மாற்றங்களைச் செய்யாத வரை, இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வில்லை. கடன் வாங்குவது, தற்காலிகமான ஆறுதலைத் தரும். ஆனால், வாங்கிய கடனையும் அதற்கான வட்டியையும் சேர்த்தே மீளச்செலுத்த வேண்டும் என்பதே யதார்த்தம். 

இன்று தனிமனிதர்கள் வாழ்வில், நிதிநிறுவனங்கள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதை ஆழமாக யோசித்தால், செயற்பாட்டில் சர்வதேச நிதி நிறுவனங்கள் கொஞ்சமும் சளைத்தவையல்ல என்பது புலனாகும். ஐ.எம்.எவ், ஒரு கந்துவட்டிக்காரனுக்கு எவ்வகையிலும் சளைத்ததல்ல. 

இன்று உலகெங்கும், மூன்றாமுலக நாடுகள் கடனில் அகப்பட்டுள்ளன. இயற்கை வளங்களும் மனித வளமும் கொண்ட இந்நாடுகள், ஏன் கடனாளியாகின என்ற கேள்வி, பெரும்பாலும் கேட்கப்படுவதில்லை. 

மாறாக, கடன் என்பது சமூக அசைவியக்கத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. கடன் வாங்குவதை ஊக்குவிப்பதே, இன்றைய பொருளாதார முறையின் முக்கியமான அம்சமாக உள்ளது. இது கடன் வாங்காத ஒருவரை விட, கடன் வாங்கித் தட்டுத்தடுமாறி மீளச்செலுத்துகின்ற ஒருவரை, நம்பிக்கையானவராகப் பார்க்கிறது. 

ஒருவரைத் தொடர்ச்சியாகக் கடனுக்குள் வைத்திருப்பதை, நிதிநிறுவனங்களும் அரசும் உறுதி செய்கின்றன. இதனால் கடனுக்கான வட்டி என்பது, மிகப்பெரிய இலாபமாகிறது. எனவே, இந்த விஷச் சுழலில் மக்களைச் சிக்கவைப்பதில், இந்தப் பொருளாதார முறை வெற்றிகண்டுள்ளது. இதன் நீட்சியே, சர்வதேச நிதி நிறுவனங்கள் ஆகும்.

கடந்தாண்டு தொடக்கத்தில், கொரோனா தொற்றுக்கு முன்வரை, மூன்றாமுலக நாடுகளின் வெளியகக் கடனின் மொத்தத்தொகை அண்ணளவாக 11 ரில்லியன் அமெரிக்க டொலராகும். பெருந்தொற்றும் விலைவாசி ஏற்றமும் காலநிலை மாற்றமும், இந்தத் தொகையைக் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பலமடங்கு அதிகரித்துள்ளன. ஆனால், இதற்கு முன்னர், இவ்வளவு கடனுக்கு இந்நாடுகள் எவ்வாறு ஆளாகின என்ற கதையைப் பார்க்க வேண்டியுள்ளது. 

நாடுகளின் வளர்ச்சி மாதிரிகளும் அவை மேற்கொண்ட பொருளாதாரச் சமூகத் தேர்வுகளுமே, மூன்றாமுலக நாடுகளின் கடன்களுக்கான பிரதான காரணமாகும். மூன்றாமுலக நாடொன்றின் தேசிய கடன், எவ்வாறு மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்து, அந்நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டு செல்கிறது என்பது புதிர்போல் தோன்றினாலும், அதுதான் கடந்த பல தசாப்தங்களாக மூன்றாமுலக நாடுகளின் கதையாக உள்ளது. 

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் தோற்றம்பெற்ற தாராளவாதமும் உலகமயமாக்கலும், அரசின் வகிபாகத்தைக் குறைப்பதை நோக்காகக் கொண்டிருந்தன. சோசலிச அரசுகளில் ஆழமாக ஊன்றியிருந்த ‘சமூக நல அரசுகள்’ என்ற கருத்தாக்கத்துக்கு மாறாக, திறந்த சந்தையையும் அரசுகளின் கட்டுப்பாடற்ற நிலையையும் முன்னிறுத்தின. இதன் ஒரு பகுதியாக, ‘வளர்ச்சி’ என்பது பரிந்துரைக்கப்பட்டது. அதேபோல, உலகமயமாக்கல் நுகர்வைப் பிரதானமாக்கியது.  

கொலனியாதிக்கத்துக்குப் பிந்தைய அரசுகள், இக்கொள்கைகளை நடைமுறைப்படுத்தத் தொடங்கின. இதன் விளைவால், ‘வளர்ச்சி’ பற்றிய தவறான புதிதலுக்கு ஆளாகின. வளர்ச்சி என்பது எதற்கானது, யாருக்கானது ஆகிய கேள்விகள் கேட்கப்படவேயில்லை. 

காலப்போக்கில் இது, ‘நவீனமயமாதல்’ என்ற புதிய பெயரைச் சூடிக் கொண்டது. மூன்றாமுலக நாடுகள், இந்தக் கவர்ச்சிகரமான சொல்லாடலில் வீழ்ந்தன. தங்கள் பொருளாதாரத்தின் அடிப்படைகளை, மாற்றிக் கொள்ளத் துணிந்தன. விவசாயத்தை மையமாகக் கொண்ட நாடுகள், தொழில்மயமாகின; தொழில்மயமான நாடுகள், சேவைமயமாகின.

இவ்வாறு, தங்களின் பொருளாதார பலங்களில் இருந்து விடுபட்டு, புதியவகை பொருளாதார அடிப்படைகளை நோக்கி அவை நகர்ந்தன. இதனால், அவர்களின் பொருளாதார பலம் கேள்விக்குள்ளானது. எனவே, ‘நவீனமயமாகுவதற்காக’ சர்வதேச நிதி நிறுவனங்களின் கடன் பொறிக்குள் அகப்பட்டுக் கொண்டன.  

இதன் தொடர்ச்சியாக, வட்டியுடன் கடனை மீளச் செலுத்துவது என்ற நிதி நிறுவனத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள், இந்த நாடுகள் ஆட்பட்டன. அரச நிறுவனங்களை ‘மீள்கட்டமைப்பு’ செய்வதும் ‘சீர்திருத்தங்களை’ மேற்கொள்வதும் இதன் பகுதியாகின. இவற்றின் மோசமான பலன்களை அனுபவிப்பது, இந்நாடுகளில் உள்ள ஏழை மக்களாவர். 

வளர்ச்சிக்காக வாங்கப்படும் கடனில் பெரும்பகுதி, ஆட்சியாளர்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளை நிரப்பும். எனவே, திட்டமிட்ட திட்டத்துக்குரிய பணம் அரசிடம் இருப்பதில்லை. பின்னர், அக்கடனைத் திருப்பிச் செலுத்த புதிய கடனை நாடுகள் வாங்கும்; அவையும் ஆட்சியாளர்களின் தனிப்பட்ட கஜனாக்களை நிரப்பும். அதன் பின்னர் வாங்கிய கடனுக்கான வட்டியைச் செலுத்துவதற்கு, புதிய கடன்கள் வாங்கப்படும். இது ஒரு முடிவற்ற தொடராக விரியும். 1980களில் பிலிப்பைன்ஸ், நிக்கரகுவா, ஆர்ஜென்டீனா போன்ற ஏராளமான நாடுகளின் கதை இதுதான். 

1970களின் இறுதிப்பகுதியில், சிலியில் செப்புச் சுரங்கங்களின் வருமானம் உப்பிப்பெருத்த பொருளாதாரமாக உருமாறியது. சிலியின் நாணயத்தின் (பெசோ) பெறுமதி, திட்டமிட்டு வலுவானதாகக் காட்டப்பட்டது. அமெரிக்க டொலருக்கு எதிரான பெசோவின் பெறுமதி உயர்வாக, இதனால் இறக்குமதி செய்வது மலிவானது போன்றதொரு தோற்றம் உருவாகியது. 

இதனால் சிலியின் மத்தியதர வர்க்கம், அளவற்ற நுகர்வில் இறங்கியது. பொருளாதாரம் சில ஆண்டுகளில் இறக்குமதியில் நம்பியிருக்குமாறு மாறியது. இதனால், உள்ளூர் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டனர். மெதுமெதுவாக, இறக்குமதிக்குக் கடன் வாங்கும் நிலைக்கு, சிலி தள்ளப்பட்டது. 

உள்ளூர் உற்பத்தியாளர்கள் தொழிலற்றவர்களாகினர். ஏற்றுமதி அதிகரிக்காத நிலையில், இறக்குமதி பலமடங்கு அதிகரித்தது. இதனால் தொடர்ந்தும் கடன்வாங்க வேண்டிய நிலைக்கு சிலி ஆளாகியது. அப்போது, சர்வதேச நாணய நிதியம் உதவிக்கு வந்தது. 

இதன் இன்னொரு வடிவம், நிக்கரகுவாவில் அரங்கேறியது. 1970களில் ஆட்சியில் இருந்த ‘சமோசா’ குடும்பத்தினர் சுருட்டிய பணம் அளவில்லாதது. 1972ஆம் ஆண்டு, நிக்கரகுவாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்குக் கொடுக்கப்பட்ட அனைத்து உதவித்தொகைகளையும் இக்குடும்பம் சுருட்டிக்கொண்டது. 

1979ஆம் ஆண்டு, ‘சண்டனிஸ்டா’ புரட்சியாளர்கள், இவர்களைத் துரத்தும்வரை இக்குடும்பம் ஆட்சியில் இருந்தது. இவர்கள் துரத்தப்படும் போது, அரசாங்கக் கையிருப்பு  300 மில்லியன் அமெரிக்க டொலர் மட்டுமே! ஆனால், மொத்தக் கடன் 4,000 மில்லியன் அமெரிக்க டொலராகும்.

1980களில் பிலிப்பைன்சில், மார்க்கோசின் ஊழல்களும் சுரண்டல்களும் உலகறிந்த விடயங்கள். 1986இல் பிலிப்பைன்சின் மொத்தக் கடன் 26,000 மில்லியன் டொலர். இதில் 15 சதவீதமானவை, மார்க்கோசின் மனைவி இமெல்லாடவின் ஆடம்பரச் செலவுக்கானவை. 

இன்னொருபுறம், பிலிப்பைன்ஸ் அணுசக்தித் திட்டமொன்றைத் தொடங்கியது. இதற்காக வாங்கப்பட்ட கடனுக்கு கொடுக்கப்பட்ட ஒருநாள் வட்டி 3,50,000 அமெரிக்க டொலர் ஆகும். இவ்வட்டி 1989ஆம் ஆண்டு 5,00,000 ஆக உயர்ந்தது. வாங்கிய கடன் மார்க்கோசினால் சுருட்டப்பட்டது. 

இதேபோலவே, இன்னும் பல மூன்றாமுலக நாடுகளில் வாங்கப்படும் கடன், ஆட்சியாளர்களால் சுருட்டப்படுகிறது. 1979 முதல் 1983 வரையான நான்கு ஆண்டு காலத்தில் மெக்சிக்கோவிலிருந்து வெளியேறிய மொத்தப் பணம் 9,000 பில்லியன் அமெரிக்க டொலராகும். ஆனால், மெக்சிக்கோ கடனில் தத்தளித்தது. கடனை அடைக்க மேலும் கடன் வாங்கிய வண்ணம் இருந்தது. 

ஆர்ஜென்டீனாவில் இராணுவ சர்வாதிகார ஆட்சி நடைபெற்ற வேளை, பெரும்பாலான கடன் இராணுவச் செலவீனங்களுக்காகவே பயன்படுத்தப்பட்டது. பெருவின் கதையும் இதுதான். எனவே, மூன்றாமுலக நாடுகள் எவ்வாறு கடனாளியாகின்றன என்பதற்கான ஒரு குறுக்குவெட்டுச் சித்திரமே, மேற்சொன்ன உதாரணங்கள் ஆகும்.

இதன் பின்னணியில், கடன் வழங்குனர்களாக உள்நுழையும் சர்வதேச நிதி நிறுவனங்கள் குறிப்பாக, சர்வதேச நாணய நிதியம் நிபந்தனைகளுடன் கடன்களை வழங்குகின்றது. அந்நிபந்தனைகளாக, அரச சேவைகளைத் தனியார்மயமாக்கல், சமூகநலன்களைக் குறைத்தல், தனியார்துறைக்கு வரி குறைப்பு, வரிச்சலுகைகளை அறிமுகப்படுத்தல் போன்றவற்றை வேண்டுகிறது. 

மூன்றாம் உலக நாடுகளின் அரசுகள், பெருவாரியான தருணங்களில் சமூகப் பாதுகாப்பினது காவலனும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவோனும் என்ற தனது வகிபாகத்தில் தவறி விட்டன. இதற்கு மூன்றாமுலகக் கடன் மிகவும் முக்கியமான காரணியாகும். 

மேற்சொன்ன கதைகள், பல வகைகளில் இலங்கையைப் பிரதிபலிக்கின்றன. இவ்வாறான கடன்கள் மூலம், ஏற்கெனவே மக்கள் அனுபவித்து வந்த சமூகப் பாதுகாப்புகளை, சர்வதேச நாணய நிதியத்தின் கடன்கள் மூலம், இலங்கையர்கள் இழந்து விட்டார்கள். 

இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் கையேந்திக் கடன்வாங்கிய ஒவ்வொரு தடவையும் அதற்குப் பாரிய விலையை இலங்கை கொடுத்துள்ளது. எம்மிடம் எஞ்சியிருப்பது, இலவசக் கல்வியும் இலவச மருத்துவமும் தான். அதையும் நாம் தனியாரிடம் கையளிக்கும் நாள் தூரத்தில் இல்லை. அதைச் சாத்தியமாக்கவே ஐ.எம்.எவ் கடனை இலங்கை பெறவேண்டும் என்று வற்புறுத்துவோர் நினைக்கிறார்கள். மறைமுகமாக,  இலங்கையின் ஏழைக் குடிமகனை, சுடுகாட்டுக்குச் கூட்டிச் செல்லும் வழியையே காட்ட முனைகிறார்கள்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .