2025 மே 17, சனிக்கிழமை

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சை பறிகொடுத்தல்

Thipaan   / 2015 ஒக்டோபர் 24 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு இன்னும் நிரப்பப்படாமலிருக்கின்றமை பல்வேறு கருத்தாடல்களுக்கு இட்டுச் சென்றுள்ளது. ஒரு முக்கியமான அமைச்சுப் பதவியை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக யாரைக் கொண்டும் நிரப்பாமல் தொடர்ந்து இழுத்தடிப்புச் செய்து வருகின்றமையால், மாகாண அதிகாரத்தில் ஓர் அங்கமான இந்த அமைச்சை மு.காவானது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடம் இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம் எனத் தோன்றுகின்றது.

கடந்த முறை நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சு பதவி வழங்கப்பட்டமையால், ஒரேயொரு மாகாண அமைச்சு மாத்திரமே கிடைக்கப் பெற்றது. இந்த அமைச்சு தமக்கு கிடைக்குமென பலர் மனப்பால் குடித்தனர். ஆயினும் கட்சித் தலைமை, எம்.ஐ.எம். மன்சூருக்கே முன்னுரிமை அளித்தது. அதன்படி அவர் மாகாண அமைச்சரானார்.

பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் வந்தபோது மன்சூருக்கு எம்.பி.ஆசை வந்தது. கட்சியின் செயலாளர் நாயகமான எம்.ரி.ஹசனலி, அம்பாறை (திகாமடுல்ல) மாவட்டத்தில் போட்டியிட முன்வந்த போதும் அதை மறுதலித்துவிட்டு அவருக்கு தேசியப்பட்டியல் தருவதாகச் சொன்ன தலைவர் ஹக்கீம், மன்சூரை வேட்பாளராக்கினார். பின்னர் மன்சூரின் செயற்பாட்டைக் கண்ணுற்ற ஹக்கீம் தேர்தலுக்கு நான்கைந்து தினங்களுக்கு முன்னர் மன்சூரை கடுமையான தொனியில் பேசியதாகவும் 'இது உங்களுக்கு கடைசி வாய்ப்பு' என்று கூறியதாகவும் சொல்லப்படுகின்றது. எப்படியோ மன்சூர் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகி விட்டார்.

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று 2 மாதங்கள் கடந்து விட்டன. ஆனால், அதற்கு கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு முன்னர் மன்சூரினால் இராஜினாமாச் செய்யப்பட்ட சுகாதார அமைச்சைக் கட்சித் தலைமை இன்னும் யாருக்கும் வழங்கவில்லை.

தனது சகோதரருக்கு தேசியப் பட்டியல் கொடுத்து இரசிக்கின்ற ஹக்கீம், அதேகாலப்பகுதியில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சையும் யாராவது 'எக்ஸ்' க்கோ அல்லது 'வை' க்கோ கொடுத்து அவர்களைச் சந்தோசப்படுத்தியிருக்கலாம். இருப்பினும் தேசியப் பட்டியல் மற்றும் மாகாண அமைச்சு ஆகிய இரு பதவிகளுக்கும் நிரந்தரமாகப் பொருத்தமான ஒருவரை நியமிக்காமல் இருப்பது அவருடைய சாணக்கியத்தைச் சவாலுக்கு உட்படுத்தியிருக்கின்றது.

இரண்டு பதவிகளுக்கு ஆட்களை நியமிப்பதற்கு கூட இரண்டரை மாதங்களாக தீர்மானம் எடுக்க முடியாத ஒரு தலைமைத்துவம், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்த்து வைக்கப் போகின்றது என்ற கேள்வி மக்களிடையே எழுந்திருக்கின்றது. இரண்டு மாதங்கள் என்பது சொற்ப காலம் என்று சொல்லி விட முடியாது.

அரசியலில் பல மாற்றங்கள் நிகழ்வதற்கு போதுமான காலப்பகுதியாகும். இக்காலப்பகுதியில் ஒரு மாகாண சபை உறுப்பினர் சில நாட்களே மாகாண அமைச்சராக பதவி வகிக்க வாய்ப்பு கிடைத்தாலும் அவர் அதன் பின்னர் முன்னாள் அமைச்சர் என்றே அழைக்கப்படுவார். ஆனால், அந்த வாய்ப்பை ஹக்கீம் யாருக்கும் வழங்க முன்வரவில்லை.

முன்னதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவத்துக்கு இந்தச் சுகாதார அமைச்சு வழங்கப்படலாம் என்று பேச்சடிபட்டது. அதன்பிற்பாடு அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் போன்ற சிலரின் பெயர்களும் பேசப்பட்டது. வேறு சிலரும் தமக்கு அப்பதவி தமக்கு கிடைக்குமென எண்ணியிருந்தனர். எவ்வாறிருப்பினும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற பிற்பாடு, கிழக்கு சுகாதார அமைச்சு நியமனத்தை மறு அறிவித்தல் வரை பிற்போடுவதற்கு கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் தீர்மானித்திருக்கலாம் என்று கருத வேண்டியுள்ளது.

ஏனென்றால், தேசியப் பட்டியலுக்கு ஏற்பட்டுள்ள கிராக்கியின் காரணமாக இரு தேசியப் பட்டியல்களை எள்ளை விட அதிகமான துண்டுகளாகப் பிரிக்க வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டிருக்கின்றது.

யார் யாருக்கு தேசியப் பட்டியல் எம்.பி.களை வழங்குவது என்பது குறித்தான இறுதித் தீர்மானத்தை தலைமை இன்னும் எடுக்கவில்லை. இவ்வாறிருக்கையில், தேசியப் பட்டியலை முதலில் ஒரு பிரதேசத்துக்கு வழங்கிவிட்டு இன்னுமொரு பிரதேசத்துக்கு சுழற்சி முறையில் வழங்குவதற்கு தலைமை எண்ணலாம். அதேபோல் இன்னுமொரு பிரதேச மக்களை திருப்திப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சை ஹக்கீம் பயன்படுத்துவார். அதாவது தேசியப் பட்டியலை ஒரு பிரதான பரிசாகவும், கிழக்கு சுகாதார அமைச்சை ஆறுதல் பரிசாகவும் வழங்குவதற்காக வைத்திருக்கின்றார் மு.கா.தலைவர்.

ஆனால், மாகாண ஆட்சி ஒன்றின் முக்கிய அமைச்சுப் பொறுப்பொன்றை நியாயமான காரணம் எதுவும் இன்றி இட்டுநிரப்பாமல் வைத்திருப்பது மாகாண மற்றும் மத்திய ஆட்சியில் பங்கேற்கும் ஏனைய கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றது. குறிப்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இது விடயத்தில் அதிக அரசியல்சார் கரிசனையைக் கொண்டிருக்கின்றது.

கடந்த இரண்டரை மாதங்களாக மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரே அமைச்சின் பொறுப்பை முன்னின்று மேற்கொண்டு வருகின்றார். நிதி ஒதுக்கீடு போன்ற விடயங்கள் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டு விட்டமையால், அமைச்சின் நாளாந்த செயன்முறையில் பாரிய தடங்கல்கள் ஏற்படவில்லை என்று கூறப்படுகின்ற போதிலும் அமைச்சர் ஒருவரின் பிரசன்னம் அங்கு உணரப்படாமல் இல்லை. இதனையே ஐ.ம.சு.கூ தனக்கு சாதகமாகப் பயன்படுத்த எத்தனிக்கின்றது.

இந்நிலையில், கொழும்பில் கடந்தவாரம் இடம்பெற்ற ஐ.ம.சு.கூவில் அங்கம்வகிக்கும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கிழக்கு சுகாதார அமைச்சராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் ஒரு மாகாண சபை உறுப்பினரை நியமிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை கவனத்தில் எடுத்த ஜனாதிபதி, இது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோவுக்கு பணிப்புரை விடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் மாகாண அமைச்சரான எம்.எஸ். உதுமாலெப்பையின் பெயர் இதற்கென பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

மத்தியிலும் மாநிலத்திலும் தேசிய அரசாங்கங்கள் ஆட்சி செய்வதால் இவ்வாறு நியமிப்பதற்கான சாத்தியம் அதிகமிருக்கின்றது. 11 உறுப்பினர்களைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 2 அமைச்சுக்களும் பிரதி சபாநாயகர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. 7 உறுப்பினர்களைக் கொண்டுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சுப் பதவியும் (வெற்றிடமாகவுள்ள) சுகாதார அமைச்சும் வழங்கப்பட்டுள்ளது. மாகாண ஆட்சியமைப்பின் அடிப்படையில், கிழக்கு மாகாண சபையில் 12 உறுப்பினர்களைக் கொண்டுள்ள ஐ.ம.சு.கூ சார்பில் ஆரியவதி கலப்பதி மட்டுமே அமைச்சு பொறுப்பை கொண்டிருக்கின்றார். எனவே, கூட்டாட்சி என்ற அடிப்படையில் நோக்குமிடத்து யாருக்கும் பயன்படாமல் இருக்கும் சுகாதார அமைச்சு தமக்கு தந்தால் சேவை செய்யலாம் என்ற கோரிக்கையையே ஐ.ம.சு.கூ முக்கியஸ்தர்கள் ஜனாதிபதியிடம் முன்வைத்திருக்கின்றனர்.

இதற்கிடையில் கிழக்கு மாகாண சபையில் எதிர்க்கட்சிப் பக்கம் அங்கம் வகித்த இரு உறுப்பினர்கள் இரு நாட்களுக்கு முன்னர் ஆளும் தரப்புக்கு மாறியிருக்கின்றனர். இப்போதிருக்கும் நிலைவரப்படி முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் மாகாண அமைச்சர்களான உதுமாலெப்பை, சுபைர் உள்ளிட்ட சிலர் எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கின்றனர். இந்நிலையில் ஒருவேளை உதுமாலெப்பைக்கு சுகாதார அமைச்சு வழங்கப்பட்டால் அவர் ஆளும்தரப்பு ஆசனங்களில் அமர வேண்டிய நிலை ஏற்படுமாயின், எதிர்த்தரப்பின் பலம் மேலும் குறைவடையும்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனக்கு கிடைத்த சுகாதார அமைச்சுப் பதவியை தானும் அனுபவிக்காமல், அனுபவிப்பவனையும் விடாமல். பல மாதங்களாக வெற்றிடமாக வைத்திருக்கின்றது. இப்பதவி உடனடியாக மு.காவின் பொருத்தமான, சேவை செய்யக் கூடிய ஓர் உறுப்பினருக்கு வழங்கப்படுமாயின் அப்பதவியை தக்க வைத்துக் கொள்ளலாம். அவ்வாறில்லாதவிடத்து மு.கா. இப்பதவியை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடம் பறிகொடுக்க வேண்டி ஏற்படும். அவ்வாறு ஐ.ம.சு.கூ காய்நகர்த்தல்களை மேற்கொண்டது கிழக்கு சுகாதார அமைச்சை பெற்றால் அப்பதவி உதுமாலெப்பைக்கு கிடைப்பதற்கான சாத்தியங்களே அதிகமுள்ளன.

முன்னர் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சராக இருந்த உதுமாலெப்பை பல சேவைகளை ஆற்றியுள்ளார். அவர் அங்கம் வகித்த கட்சியும் வெற்றிலைச் சின்னமுமே ஒரு தொகுதி மக்கள் அவரை ஆதரிப்பதற்கு தடையாக இருந்தனவேயொழிய, அவரது செயற்பாடுகள் அல்ல. அதற்கப்பால் அவர் கொஞ்சம் வேகமாக வேலைசெய்யக்கூடிய அரசியல்வாதி என்பது முஸ்லிம் காங்கிரஸில் இருப்போருக்கும் தெரியும் (ஆனால் வெளியில் சொல்ல மாட்டார்கள்). இவர், மர்ஹூம் அஷ்ர‡ப் காலத்தில் அரசியல் ஈடுபாடு காட்டினாலும் தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அதாவுல்லாவையே தனக்கு அரசியல் முகவரி தந்தவராக கருதுகின்றார்.

எனவே, ஏதேனும் அடிப்படையில் உதுமாலெப்பைக்கு கிழக்கு மாகாண அமைச்சு பதவி வழங்கப்பட்டால் இப்போது மக்களால் தோற்கடிக்கப்பட்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடைமொழியோடு முடங்கியிருக்கும் அதாவுல்லாவுக்கு புதுத் தெம்பு பிறக்கும். அதை வைத்து அவர் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை திட்டமிட்டு விடுவார். இது மு.காவின் தலையிடியை அதிகரிக்கும்.

இதேவேளை, முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது ஏற்கெனவே தேசியப் பட்டியல் சர்ச்சைகளை எதிர்கொண்டுள்ள சூழ்நிலையில், ஏதாவது அடிப்படையில் மாகாண அமைச்சையும் இழக்குமாயின் கட்சிக்குள் பெரிய சிக்கல்கள் உருவெடுக்கும். தமக்கு ஏதாவது ஒரு பதவி கிடைக்கும் என்பதற்காகவே அநேகமான உறுப்பினர்கள் இன்று தலைவருக்கு சாதகமான கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், தமக்கோ அல்லது தன்னால் ஏற்றுக் கொள்ளக்கூடிய இன்னுமொரு உறுப்பினருக்கோ பதவிகள் குறிப்பாக மாகாண சுகாதார அமைச்சு வழங்கப்படாமல், வேறொரு கட்சியிடம் பறிகொடுக்கப்படுமாயின், இவ்வாறான உறுப்பினர்களின் மறுபக்கத்தை தலைவர் ஹக்கீம் காண வேண்டிய நிலை ஏற்படக் கூடும். நாடாளுமன்ற உறுப்புரிமையைப் போலவே, மாகாண அமைச்சு என்பதும் பெறுமதியானதே. தாமதித்தால் தவிக்க நேரிடலாம்.

ஆனாலொன்று, முஸ்லிம் மக்களையும் கட்சி உறுப்பினர்களையும் எப்படி சமாளிப்பது என்பது மு.கா. தலைமைக்கு தெரியும். அதேபோல் மு.கா தலைமையை எவ்வாறு வழிக்கு கொண்டு வரலாம் என்பதை சிங்கள ஆட்சியாளர்கள் அறிவர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .