2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கட்டைபறிச்சான்: இனிப்பும் கசப்பும்

Johnsan Bastiampillai   / 2021 ஒக்டோபர் 20 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

அ . அச்சுதன்

 

 

 

திருகோணமலை மாவட்டத்தில் மூதூரையும் மூதூர் கிழக்கையும் எல்லைப்படுத்தும் வகையில் சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் கட்டைபறிச்சான் ஆறு, பல தனித்துவங்களைக் கொண்டதாகும். மகாவலி கங்கையின் கிளை ஆறாக, அல்லைக்குளத்தில் இருந்து மேலதிக நீர் வெளியேறி, இறையாற்று வழி ஆற்றின் ஊடாக கட்டைபறிச்சான் பாலத்தைக் கடந்து, கடலுடன் சங்கமிக்கின்றது.

இப்பகுதி, இயற்கையின் ரம்மியங்கள் நிறைந்த பல ஆச்சரியங்களைக் கொண்டமைந்து உள்ளது. கட்டைபறிச்சான் பாலத்தை அண்டிய ஆற்றுப் பகுதியில் நிறைந்திருக்கும் கண்டல் தாவரங்களின் அழகு, பாலத்தைக் கடந்து செல்வோரை ஒருமுறை இறங்​கவைத்து, ‘செல்பி’ ஒன்றைப் படம்பிடிக்காமல் முன்நகர மனம் இடம்கொடுக்காது. அதுமட்டுமல்லாமல் அவை மூதூர் கிழக்குக்கும் மூதூர் நகருக்கும் அழகுக்கு அழகு சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளன.  

இவ்வாறு, கட்டைபறிச்சான் பாலத்தை அண்டிய பகுதிகளில் நிறைந்திருக்கும் கண்டல் தாவரங்கள், தான் செழித்து வளர்ந்திருக்கும் இடத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் பங்காற்றி வருகின்றன. இதில் முக்கிய பங்கு, இதன் இலை குழைகள் கீழ்விழுந்து, நீர்மூலம் கடத்தப்பட்டு, அங்குள்ள களப்பு, கழிமுகம் பகுதிகளில் மீன் இனங்கள் தமது இனப்பெருக்க இடமாகப் பயன்படுத்திக் கொள்ள உதவுகின்றன. குறிப்பாக, நண்டு, மீன் இனங்களின் இனப்பெருக்கம், இளம் குஞ்சுகளின் வளர்ச்சி போன்றவற்றுக்கு ஏற்ற சிறந்த சூழல் இங்கு காணப்படுகின்றது.

சுழல் காற்று, சூறாவளி போன்றவற்றால் ஏற்படும் அழிவுகளையும் கண்டல் தாவரங்கள் தடுக்கின்றன. பொதுவாக கண்டல்தாவரங்கள், இயற்கையின் சீற்றங்களைத் தணித்து, அவற்றின் வீரியத்தைத் தானே தாங்கிப் பாதுகாக்கின்றது. அதாவது, சக்தியை உறிஞ்சுகின்ற தன்மையைக் கொண்டுள்ளன. 

இயற்கை அருளிய அழகும் அவற்றின் தனித்துவ அம்சங்களும் இவ்வாறு இருக்கும் நிலையில், கட்டைபறிச்சான் பாலத்தையும் அதன் தனித்துவங்களையும் அடகுவைப்பதுபோன்ற கைங்கரியங்கள் அரங்கேறிவருவது மனத்தைக் கனக்கவைத்து, முகம்சுழிக்க வைக்கின்றன.  

கட்டைபறிச்சான் பாலம், தனக்கென்று ஒரு வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டு விளங்குகின்றது. பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்தின்போது, அதாவது 1900 ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர், இந்த ஆற்றைக் கடப்பதென்பது, பெரும் சவாலானதும் ஆபத்தானதுமாகக் காணப்பட்டது. அக்காலப்பகுதியில், ‘இடிமண் துறை’ என்று அழைக்கப்பட்ட இத்துறையைக் கடக்க  சிறிய வள்ளங்கள் பயன்பட்டன.  

1929 இல் பிரிட்டிஸ் அரசால் இரும்பிலான மிதவைப் பாலம் போடப்பட்டிருந்தது. இந்த மிதவைப் பாலமும் பலசவால்கள் நிறைந்ததாக இருந்ததால், தற்போதுள்ள பாலம், 1976 தை மாதம் 31 ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டு,  1978 இல் மக்கள் போக்குவரத்துக்காக திறந்து வைக்கப்பட்டது. இந்த வரலாற்றுப் பணியை, அப்போதைய தகவல் ஒலிபரப்பு பிரதியமைச்சரும், திருகோணமலை மாவட்ட அரசியல்வாதியுமான ஏ.எல்.அப்துல் மஜீத் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இரவு-பகல், மழை-வெயில் என்று பாராது, 43  ஆண்டுகளாக மக்களின் சுமையைத் தாங்கிநின்ற இந்தப் பாலம், இன்று உடைந்தும் வெடித்தும் காணப்படுகின்றது. கட்டைபறிச்சான் பாலமானது, தற்போதைய நிலையில் மக்கள் பாவனைக்கு பொருத்தமற்றே உள்ளது. மூதூர் கிழக்கு பிரதேசத்துக்குள் பிரவேசிப்பதற்கான பிரதான பாலம் இதுதான். இப்பாலம் உடைந்துவிடுமாயின் அப்பகுதிக்கான தரைப்போக்குவரத்து தடைப்படும் அபாயம் உள்ளது. இவ்வாறு இதன் முக்கியத்துவம் இருக்கும் பொழுதிலும், இதுவரை புனரமைப்புக்கான வேலைகள் இடம் பெறவில்லை என்பது, மூதூர் கிழக்குப் பகுதி மக்களை அச்சம்கொள்ள வைத்துள்ளது. 

விரைவில் இப்பாலத்தைப் புனரமைக்காதுவிடின்,  மூதூர் கிழக்கில் உள்ள கட்டைபறிச்சான், சேனையூர், கடற்கரைச்சேனை, சந்தோசபுரம், சம்பூர், கூனித்தீவு, சூடைக்குடா, பாட்டாளிபுரம், இளக்கந்தை, பள்ளிக்குடியிருப்பு உட்பட சுமார் 13 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 8,000 இற்கும் மேற்பட்ட மக்களின் ஜீவனோபாயம், சுகாதாரம், கல்வி, தொடர்பாடல் என்பன முற்றுமுழுதாகப் பாதிக்கப்பட்டுவிடும் என்பதால், அவசரமாகவும் அவசியமாகவும் அக்கறை செலுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.   

இதற்குக் காரணம், மூதூர் கிழக்குப் பிரிவிலுள்ள கிராம மக்கள், தமது தேவைகளை நிறைவு செய்வதற்கும் தாம் உற்பத்தி செய்யும் விவசாயப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கும் கட்டைபறிச்சான் பாலத்தை கடந்துதான் மூதூர் நகருக்கு செல்ல வேண்டும். 

மூதூர் கிழக்கில் சம்பூர்,  சேனையூர், பாட்டாளிபுரம் பகுதிகளில் பிரதேச,  கிராமிய வைத்தியசாலைகள் இயங்குகின்ற போதிலும் மேலதிக சிகிச்சைகளுக்கு இப்பகுதி மக்கள், மூதூர் நகருக்குத்தான் செல்ல வேண்டும். சம்பூர் - மூதூருக்கான பிரதான போக்குவரத்துக்கும் இப்பாலம் முக்கியத்துவம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். 

இவ்வாறு, மக்களின் வாழ்வாதாரத்துக்கும் வாழ்வியலுக்கும் முக்கியத்துவம் மிக்க இந்தப் பாலம், இராணுவ ரீதியிலும் முக்கியத்துவம் பெற்றதாக இருந்துள்ளது. அதன்காரணமாக, 1985 இல் திருகோணமலை மாவட்டத்தில் முதலாவது கண்ணிவெடி தாக்குதல், இப்பாலத்தின் மீதுதான் மேற்கொள்ளப்பட்டிருந்தது.  இராணுவ ஜீப், இப்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது, தமிழீழ விடுதலைப் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலுக்கு இலக்காகி இருந்தமையும், இந்தப் பாலத்தின் முக்கியத்துவம் கருதி இங்கு நினைவுபடுத்திக் கொள்ளத்தக்கது. 

இராணுவ நடவடிக்கைகளின் போதும், மூதூர் கிழக்கு மீள் குடியேற்ற நடவடிக்கைகளின் போதும் கனரக வாகனங்களின் போக்குவரத்து காரணமாக, இந்தப்பாலம் தற்போது தனது உறுதியான தன்மையை இழந்து காணப்படுகின்றது. 

பாலம் சேதமடைந்த விடயம் பலராலும் அறியப்பட்டிருந்தாலும் பாலம் புனரமைப்புக்கான எந்த நடவடிக்கையும் எவராலும் மேற்கொள்ளப்படாத நிலையில், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தெளபீக், கடந்த 02, 03-07-2021 ஆகிய இரண்டு தினங்கள்,  பாலத்தைப் புனரமைப்புச் செய்யும் நோக்கத்துடன் கள விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மூதூர் பிரதேச சபையின் கட்டைபறிச்சான் வட்டார உறுப்பினர் திருமதி த. ஜெயமாலாவின் கோரிக்கையை ஏற்று, மூதூர் பிரதேச சபை தவிசாளர் எம்.எம்.ஏ.அரூஸின் அழைப்பின் பேரில் வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர், பாலத்தின் சேதங்களையும்  சுற்றாடலையும் பார்வையிட்டிருந்தார்.  

பாலத்தின் நிலை இவ்வாறு இருக்க, பாலத்தை அண்டிய வீதிக்கு அருகில்,  சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரதேச சபையால் பயன்படுத்தப்பட்ட குப்பை மேடு, பல முறைப்பாடுகளின் பின்னர் அகற்றப்பட்டதுடன் சுற்று வேலியும் அமைக்கப்பட்டு, சுற்றாடல் பாதுகாக்கப்பட்டது. 

ஆயினும், தற்போது மீண்டும் அப்பகுதியில் குப்பைகள், கழிவுகள்  கொட்டப்பட்டு வருகின்றன. இவ்விடயம் குறித்து, மூதூர் பிரதேச சபை சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அழகான இயற்கை வனப்புமிக்க இப்பகுதியையும் இதன் தனித்துவங்களையும்  பாதுகாப்துடன், இந்தச் சூழலின் ரம்மியமான காரணிகளை, உல்லாசப் பயணமாக வரும் மக்கள் கண்டுகளித்து, மனம்மகிழ்ந்து திருப்தியுடன் செல்லும் வழிவகைகளை மூதூர் பிரதேச சபை மேற்கொள்வதுடன், பாலத்தின் தனித்துவம் கெடாமல் புனரமைத்தும் பாதுகாக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .