2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கூஜாக்களும் ராஜாக்களும்

Johnsan Bastiampillai   / 2021 ஒக்டோபர் 06 , பி.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா 

எதனை எதிர்பார்த்து ராஜபக்‌ஷர்கள் ஆட்சிக்கு வந்தார்களோ, அந்தப் ‘பொற்காலம்’ நடைமுறையில் சாத்தியமாகவில்லை. எதிர்பார்ப்புக்கு மாற்றமாக, நெருக்கடிகளே பெருமளவில் உருவெடுத்துள்ளன. 

கொரோனா வைரஸ் பரவல் சார்ந்த சவால்களை, ஓரளவுக்கு வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்தாலும், அரசியல், பொருளாதார பின்னடைவுகள், தலைக்கு மேலால் போகின்றன. 

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை மீதான ‘பிடி’, மேலும் இறுகியுள்ளது. அளித்த வாக்குறுதிகளுக்கு முரண்நகையான செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்கின்றதாகவும் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் திருப்திகரமாக அமையவில்லை என்றும் சர்வதேசம் சுட்டிக்காட்டியுள்ளது. 

மறுபுறத்தில், பால்மா, சீனி, அரிசி தொடங்கி, வெள்ளைப்பூண்டு தொட்டு வாகனங்கள் வரை, அதிக எண்ணிக்கையிலான அத்தியாவசியம் மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களின் தட்டுப்பாடுகளும் ஊழல் சர்ச்சைகளும் நாட்டில் வெடித்துள்ளன.  

இந்தியா, சீனாவின் அதிகாரப் போட்டி, வெளிநாட்டு ஒப்பந்தங்களால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள், தேர்தலை நடத்த வேண்டுமென்ற அழுத்தங்கள், தலையெடுக்கும் ஊழல் ‘வாதங்கள்’, டொலர் நெருக்கடி எனப் வேறுபல ‘தலையிடி’களையும் எதிர்கொள்ள நேரிட்டுள்ளது; அது போதாதென்று, ‘தாக்குதல்கள்’ குறித்த அச்சமூட்டும் கதைகளை, மீண்டும் இப்போது சிலர் கூறத் தொடங்கியுள்ளனர்.    

இந்தப் பொருளாதார, அரசியல் குழப்பங்களுக்கு, ஏதாவது பரிகாரம் இருக்கின்றதா என்று அரசாங்கம் தொடர்ச்சியாகத் தேடிக் கொண்டிருக்கின்றது. ஆனால், நிலைமைகள் ‘சாண் ஏற முழம் சறுக்குவதாகவே’ இருக்கின்றன. 

இதேவேளை, ஆளும் கட்சிக்குள்ளான முரண்பாடுகள் வலுவடைந்துள்ளன. பங்காளிக் கட்சிகளும் சில அரசியல்வாதிகளும் “இதோ வெளியேறப் போகின்றோம்; தனிவழியில் செல்லப் போகின்றோம்” என்று கூறி வருகின்ற போதும், ஒரு அடிகூட அவர்கள் வெளியில் எடுத்து வைத்த மாதிரித் தெரியவில்லை. ஏனெனில், பலமான, எதிர்பார்ப்புமிக்க எதிரணி ஒன்று இல்லாத சூழ்நிலையில், ஆட்சியில் ஒட்டிக் கொண்டிருப்பதையே அவர்கள் விரும்புவர். 

எவ்வாறாயினும், தமக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டால், தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது பற்றி, ஆளும் தரப்பின் மேலிடம் மந்திராலோசனைகளை நடத்துவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. வேறு ஒரு தெரிவு இல்லாத சந்தர்ப்பத்திலேயே ஆட்சியாளர்கள், கூட்டு அரசாங்கத்தை அமைக்கும் நிலைப்பாட்டுக்கு வருவார்கள் என்பது திண்ணம்.  

இந்தப் பின்னணியில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். “எமது கட்சியைச் சேர்ந்த எம்.பிக்களை, நாம் பறிகொடுக்க விரும்பவில்லை. அவர்கள் அரசாங்கத்துக்குக் ‘கூஜா’ தூக்குவதை நிறுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார். 

ஆளும் கட்சிக்குள் முரண்பாடுகள் வலுவடைந்து, அதனால் ஏற்படுகின்ற வெற்றிடத்தை, முஸ்லிம் எம்.பிக்கள் நிரப்புவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதை மறுக்க முடியாது. 

ஆகவே, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கூறுவது நியாயமானதும் யதார்த்தமானதுமான கருத்தாகும். வெளிப்படையாகவே இதைக் கூறுகின்ற தைரியத்தைப் பாராட்ட வேண்டும்.  விளக்கமறியலில் இருப்பதாலோ என்னவோ, மக்கள் காங்கிரஸ் தலைவர் இவ்வாறான கருத்தொன்றைக் கூறவில்லை. 

பிரதான முஸ்லிம் கட்சிகளின் எம்.பிக்கள், கடந்த தேர்தல்களில் ராஜபக்‌ஷர்களை எதிர்த்தே பிரசாரம் செய்தனர். முஸ்லிம் சமூகத்தின் மீதான கோபப் பார்வைக்கு, அவர்கள் எடுத்த நிலைப்பாடும் காரணமாகியது. ஆனால், இப்போது உறவு கொண்டாட முற்படுகின்றனர். 

இது தவறு என்றில்லை; ஆனால், பேரம்பேசும் அடிப்படையில், சமூகத்தைப் பாதுகாத்துக் கொண்டு, ‘கூஜா’ தூக்குவதைச் செய்ய வேண்டும். முஸ்லிம் சமூகத்தைக் கிட்டத்தட்ட நட்டாற்றில் விட்டுவிட்டு, உறவு கொண்டாட முற்படுவதே, இங்கு ஏற்றுக் கொள்ள முடியாத விடயமாகும். 

உண்மையில், முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியலை முன்னிறுத்தி வாக்குகளைப் பெற்ற மக்கள் பிரதிநிதிகள், முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக இந்தக் ‘கூஜா’ தூக்கும் வேலையை வரலாற்றில் செய்திருக்கலாம். ஆனால், இது பெரும்பாலும் தனிப்பட்ட தேவைக்கான ‘கூஜா’க்களாகவே தெரிகின்றன. 

முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களால், முன்னைய காலங்களைப் போலவே இந்த ஆட்சியிலும், எதையும் சாதிக்க முடியவில்லை. முஸ்லிம் சமூகத்தின் குறிப்பிடத்தக்க அபிலாஷைகள், உரிமைகள் போன்றவற்றைப் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. 

குறைந்தபட்சம், முஸ்லிம்கள் இன, மத ரீதியாக, நாடாளுமன்றம் போன்ற இடங்களில் நிந்திக்கப்படுகின்ற போதுகூட, அதற்காக எழுந்து பேசவும், இந்தக் ‘கூஜா’க்கள் அவர்களை விடுவதில்லை. 

மக்கள் காங்கிரஸ் எம்.பிக்களும் இப்படித்தான் உள்ளனர். ஆனால், என்ன செய்தாலும், முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்கள் கடைசிக் கட்டம் வரை, ‘கட்சி’க்குள் நிற்பார்கள் என நம்பலாம். ஆனால், மக்கள் காங்கிரஸ் எம்.பிக்கள், இப்போதே கட்சியில் இருக்கின்றார்களா என்பதே, சந்தேகமாக உள்ளது. இருவர் ஏற்கெனவே திரைமறைவில் ‘சங்கமம்’ ஆகிவிட்டதாகவும் கூறப்படுகின்றது.

மக்கள் காங்கிரஸ் கட்சியின் எம்.பிக்கள், இந்தளவுக்கு கூஜா’ தூக்கினாலும்  அவர்களால் சமூகப் பிரச்சினைகளில் சிலவற்றைக்கூட, நிரந்தரமாகத் தீர்க்க முடியாது போயுள்ளது. ஆகக் குறைந்தபட்சம், பல மாதங்களாகச் சிறையில் இருக்கும் தமது தலைவர் ரிஷாட் பதியுதீன் மீதான பிடியைத் தளர்த்துவதற்கான காய்நகர்த்தலைக் கூடச் செய்ய முடியவில்லை என்பதே நிதர்சனமாகும். 

இதேவேளை, தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாவின் நிலையும் இதுதான். ஐ.ம.சக்தியில் அல்லது பொதுஜன பெரமுனவில் நேரடியாக தேசிய பட்டியல் மூலம் எம்.பியாக வந்தவர்களுக்கும் முஸ்லிம் தனித்துவ அடையாள கட்சிகளின் எம்.பிக்களுக்கும், செயற்பாட்டுக் களத்தில் பெரிய வித்தியாசங்களைக் காண முடியவில்லை. 

முஸ்லிம் அரசியலில் எத்தனைபேர் எம்.பிக்களாக பதவி வகித்திருந்தாலும், அவர்கள் எல்லோரும் இப்படித்தான் நிகழ்காலத்தைக் கடத்தியிருப்பார்கள் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். 

யதார்த்தபூர்வமாகச் சிந்தித்தால், முஸ்லிம் அரசியல்வாதிகள் எதிர்ப்பு அரசியலுக்கு இலாயக்கற்றவர்கள். அவர்கள் எப்போதும் அதிகாரத்தில் இருக்க வேண்டும்; ஏதேனும்  (அபிவிருத்தி) சேவையைச் செய்து கொண்டிருக்க வேண்டும் என்றுதான் முஸ்லிம் சமூகமும் நினைக்கின்றது. 

எனவேதான், இணக்க அரசியலே முஸ்லிம்களுக்கு ஒப்பீட்டளவில் மிகப் பொருத்தமானது என்ற கருத்து நீண்டகாமலாகவே இருக்கின்றது. இணக்க அரசியலில் ‘பேரம் பேசும் சக்தி’ என்ற ஒரு கருவி இருக்கின்றது. அது பெரும்பாலும் சமூகம் சார்ந்த பலாபலன்களைத் தரக் கூடியது. 

ஆனால், கடந்த இரு தசாப்தங்களாக, முஸ்லிம் தலைவர்களும் எம்.பிக்களும் முன்னெடுத்து வருகின்ற அரசியலானது, உண்மையான பேரம்பேசும் - இணக்க அரசியலல்ல! மாறாக, இது ‘சோரம்’ போன - சரணாகதி அரசியலாகும். 

ஆனால், ஒவ்வொரு காலத்திலும், தமக்கு விரும்பிய ராஜாக்களுக்கு ‘கூஜா’ தூக்கும் இந்த அணுகுமுறைக்கு, ‘சமூகத்தைப் பாதுகாப்பதற்கான சமயோசித வியூகம்’ என்றுதான், எல்லாக் காலத்திலும் முஸ்லிம் அரசியல்வாதிகள் கற்பிதம் கூறிக் கொண்டிருக்கின்றார்கள். இப்போதும் அதையே கூறுவதைக் கேட்கலாம். 

இதற்காக, சில முஸ்லிம் எம்.பிக்கள், முஸ்லிம் கட்சிகள் ஊடாகச் சென்று ‘கூஜா’ தூக்குகின்றனனர். சிலர், பெருந்தேசியக் கட்சிகளின் ஊடாகச் சென்று அதனைச் செய்கின்றனர். 

சில முஸ்லிம் அரசியல்வாதிகள், பெரிய ‘கூஜா’க்களை தூக்குகின்றனர்; சிலர் சிறிய ‘கூஜா’க்களை தூக்குகின்றனர். சிலர் திருவோடுகளை ஏந்துகின்றனர். சிலர் இதனை பகிரங்கமாகச் செய்கின்றனர்; பலர் இதனை இரகசியமாகச் செய்கின்றனர் என்பதைத் தவிர வேறு வித்தியாசங்கள்  இல்லை. 

முஸ்லிம் எம்.பிக்கள் ‘கூஜா’ தூக்குவது பற்றி, மு.கா தலைவர் ஹக்கீம் கூறியிருக்கின்ற விடயம் பொய்யல்ல. ஆனால், இந்தக் ‘கூஜா’ தூக்கும் கலாசாரம் எங்கிருந்து ஆரம்பித்தது? இதன் வரலாறு என்ன என்பதையும் கொஞ்சம் நோக்க வேண்டியுள்ளது. 

கடந்த கால் நூற்றாண்டு காலத்தில், ஒரு சதவீதமான அரசியல்வாதிகளே, அதாவது, இரண்டு அல்லது முன்று மக்கள் பிரதிநிதிகளே, ‘கூஜா’க்களை மறந்து விட்டு, மக்களுக்குச் சில சேவைகளைச் செய்திருக்கின்றார்கள். 

மீதமுள்ள 99 சதவீதமான முஸ்லிம் அரசியல்வாதிகள், அரசாங்கத்துக்கு ‘கூஜா’ தூக்குபவர்களாகவே இருந்திருக்கின்றார்கள். ஆனால், இதனால் சமூகத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. 

ஏதாவது ஒரு பெரும்பான்மைக் கட்சிக்கு, பெருந்தேசிய தலைமைக்கு ‘கூஜா’ தூக்கி, அதில் வாக்குகளைச் சேகரித்துக் கொடுத்துவிட்டு, தமக்கு கிடைக்கின்ற ‘சந்தோசங்களை’ப் பெற்றுக் கொள்கின்ற அரசியல், முஸ்லிம்களுக்கு ஒன்றும் புதிதல்ல. 

எனவே, சமூகத்தை மறந்து, தமது அரசியல் இருப்பு, பதவி, வரப்பிரசாதங்களுக்காகச் ‘சோரம்’ போகும், ‘கூஜா’ தூக்கும் கட்சி உறுப்பினர்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள், உள்ளகமாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்திருந்தால், இன்று ‘கூஜா’ தூக்கிகளே இருந்திருக்க மாட்டார்கள். 

அப்படி எதுவும் இதற்கு முன்னர் நடந்ததில்லை என்பதால், முஸ்லிம் அரசியலில் ‘கூஜா’ தூக்குவதும் சரணாகதியும் சோரம்போவதும், கடந்த 20 வருடங்களாக ஒரு ‘ட்ரெண்ட்’ போல மாறியிருக்கின்றன. 

அரசியல்வாதிகளுக்குப் பாடம் புகட்டத் தயங்காத முஸ்லிம் சமூகமொன்று உருவாகாத வரை, இந்த, ‘கூஜா’ தூக்குவதும் சரணாகதியும் சோரம்போவதும், நடந்து கொண்டுதான் இருக்கும். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .