2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கொரோனாவிலும் தொடரும் Great Galle Project

Johnsan Bastiampillai   / 2021 ஒக்டோபர் 25 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


 

 

மகேஸ்வரி விஜயனந்தன்

 mayurisaai@gmail.com

நாடு கொரோனாவால் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிக்கு முகம்கடுத்து வந்தாலும் நெடுஞ்சாலைகள், கட்டுமாணப் பணிகள் என அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் மறுபுறம் இடம்பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன.

இதற்கமைய,  இலங்கையின் சுற்றுலாத் தளங்களில் முக்கியமானதும் பல உலக மரபுரிமைகளை தன்னகத்தே கொண்டுள்ளதுமான காலி மாவட்டத்தில், காலி நகரம் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் காலி மாவட்ட அலுவலகமும் இணைந்து முன்னெடுக்கும் அபிவிருத்தி பணிகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக, அரசாங்கத் தகவல் திணைக்களம் கொழும்பிலிருந்து ஊடகவியலாளர்களை அழைத்துச் சென்றிருந்தது.

சுற்றுலாப் பயணிகளால் நிறைந்து காணப்படும் காலி கோட்டைப் பகுதியானது அன்றைய நாள் ஓரிருவருடன் வெறிச்சோடிக் காணப்பட்டாலும் காலி கோட்டையில் சில அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை காணக் கூடியதாக இருந்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து கொரோனா பேரழிவு என்பவற்றிலிருந்து மீள்வதற்கு எமது நாட்டுக்கு இருக்கும் ஒரே வழி சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதாகும் . அதற்காக நகர அபிவிருத்தி அதிகார சபையானது உலக வங்கியின் நிதியுதவியின் கீழ், காலி நகரில் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற கொள்கைக்கு அமைய நாட்டிலுள்ள பிரதான நகரங்களின் அபிவிருத்தியின் கீழ், காலி நகரின் அபிவிருத்தி (Great Galle Project) முன்னெடுக்கப்படுகின்றது.

காலி நகரை பிரதான நகராக தரமுயர்த்துவதற்காக காலி நகர மேம்பாட்டுத் திட்டமும் (GGCDP) அதன்கீழ் பல துணைத் திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

எனவே போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயரின் ஆட்சியின் மத்திய நிலையமாக காணப்பட்ட காலி நகரைப் பாதுகாப்பதுடன் அபிவிருத்தி திட்டங்களை மேம்படுத்தல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், புதிய முதலீட்டு கவர்ச்சியை மேம்படுத்தல், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்தல், காலி நகர சபை, போபே, போத்தல ஆகிய பிரதேசங்களில் ஒன்றிணைந்த அபிவிருத்தியை முன்னெடுத்தல் என்பன இச்செயற்றிட்டத்தின்  எதிர்பார்ப்பாகும்.

அதற்கமைய, அரசாங்கத்தால் செயற்படுத்தப்படும் 100 நகர அபிவிருத்தி திட்டங்கள் ஒரே நேரத்தில் காலி நகரில் செயற்படுத்தப்படுகின்றன. இதன் கீழ் காலி நகரை அலங்கரிக்க அரசாங்கம் 200 மில்லியன் ரூபாயை செலவிடுகிறது. இதன் விசேட அம்சம் யாதெனில் தொல்பொருள் தரத்தின் படி குறித்த கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுவதுடன் இதற்காக சீமெந்து பயன்படுத்தப்படாமை சிறப்பு அம்சமாகும். சீமெந்துக்கு பதிலாக ஒரு வகையான டைல் பவுடர் , சுண்ணாம்பு, செங்கல் என்பவை பயன்படுத்தப்படுகின்றன.

இத்திட்டங்கள் பற்றி கருத்து தெரிவித்த காலி நகரின் அபிவிருத்தி பணிகளை கண்காணிக்கும், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தென் மாகாண பணிப்பாளர் அநுர மெதிவல, “காலி நகரில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் இந்த வருடம் நிறைவடையும்” என்றார்.

பத்தேகம பஸ்தரிப்பிட திட்டத்தின் வேலைகள் 90 சதவீதம் பூர்த்தியடைந்துள்ளன. காலி கோட்டை, தபாலகம், புதிய வாகனத் தரிப்பிடம், நவீன வர்த்தக தொகுதி என்பனவும் இந்த வருடத்துக்குள் பூர்த்தி செய்யப்படும் என்றார்.

அதேபோல் வெள்ள அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வரும் காலி மாவட்டத்தில் 9 புதிய பாலங்களை அமைத்தல்,  காலி தர்பால பூங்காவை நவீனமயப்படுத்தல், உள்ளிட்ட திட்டங்கள்  2023ஆம் ஆண்டு 20 வேலைத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்படும் என்றார்.

The Star Bastion - Galle fort

தற்போது கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள காலி கோட்டை- நட்சத்திர அரண்மனையாது, ஒல்லாந்தர் காலத்தில் அமைக்கப்பட்டது. கடந்த காலத்தில் இதில் ஒரு பகுதி உடைந்து விழுந்துள்ளது.

ஒல்லாந்தர் யுகத்தின் மிகவும் பலமிக்கதாக சிறந்த பொறியியலாளர்களால் அமைக்கப்பட்ட நட்சத்திர கோட்டையின் ஒருபகுதி ஏன் உடைந்தது என முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளானது தொல்பொருள் ரீதியாக முன்னெடுக்கப்பட்டதுடன், காலநிலை உள்ளிட்ட மாற்றங்களே இது உடைந்து விழுந்தமைக்கு காரணம் என கண்டறியப்பட்டதுடன், அது மீண்டும் இடிந்து விழாமல் இருக்கும் வகையில் நவீன பொருள்கள் எதனையும் பயன்படுத்தாமல் இதனை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காலி கோட்டைப் பகுதியில் முன்னெடுக்கப்படும்  Sky Walkway திட்டமானது காலி அபிவிருத்தி திட்டத்தின் உப திட்டம் என்றும் 3 பெக்கேஜுகளின் கீழ், காலி கோட்டையின் மதில் அபிவிருத்தி திட்டம் செயற்படுத்தப்படுவதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தென்மாகாண பிரதி திட்ட பணிப்பாளர் தவிபதி தஹநாயக்க தெரிவித்தார்.

இதில் முதலாவது தொகுப்பின் கீழ், கோட்டைச் சுவர், அதன் 14 காவலரண்கள் மற்றும் பதுங்கு குழிகள், இதற்கு முன்னர் மக்களுக்கு பார்வையிட திறக்கப்படாத கண்காணிப்பு கோபுரங்கள் என்பவற்றை பார்க்கும் வாய்ப்பு பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது என்றார்.

இரண்டாம் கட்டத்தின் கீழ், அலங்காரப் பணிகளை முன்னெடுத்தல், காலி நகரிலுள்ள மணிக்கூட்டு கோபுரத்தில் மின்னலங்காரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

மூன்றாவது தொகுப்பின் கீழ், 36 பீரங்கிகளை மீள அமைக்கப்படவுள்ளது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் காலங்களை ஆராய்ந்து இந்த பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

காலி கோட்டை பழைய தபாலகத்தின் அபிவிருத்தி பணிகள் தற்போது 50 சதவீதம் நிறைவடைந்துள்ளதுடன், இலங்கையின் முதலாவது தபாலகமான இதனை மக்கள் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்துவதற்காகவும், சுற்றுலாப் பயணிகளுக்கான விடுதி, அருங்காட்சியகம், புதிய தபாலகம் என்பவற்றை இதில் நிர்மாணிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

போர்த்துக்கேயர் ஆளுநர் ஒருவரின் உத்தியோகப்பூர்வ இல்லமாக பயுன்படுத்தப்பட்ட இத் தபாலகம், 1974ஆம் ஆண்டு தொல்பொருள் அருங்காட்சியமாக பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப்  பணிகளை இராணுவத்தின் 6ஆவது பொறியியல் படையணி முன்னெடுத்து வருகின்றது.

 வோலுவாகொட பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் தியதம் உயன வோலுவாகொட விவசாயச் சுற்றாடல் பூங்காவது, கிரேட் கோல் திட்டத்தின் மற்றுமொரு செயற்றிட்டமாகும். காலி நகரிலிருந்து 7 கிலோமீற்றர் தூரத்தில் 200 ஹெக்டயருக்கு அதிகமான வயல் பிரசேத்தில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

50 வருடத்துக்கு மேலாக நெல் உற்பத்தி செய்து, வெள்ள அச்சுறுத்தலால் கைவிடப்பட்டுள்ள இடத்திலேயே இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. சுபீட்சத்தின் நோக்கு என்ற தேசிய கொள்கையை செயற்படுத்தி விவசாய பூங்கா, விவசாய விற்பனை நிலையம், நடைபாதை, தேசிய விற்பனை நிலையம் என்பன இங்கு அமைக்கப்படவுள்ளதுடன், தாய்லாந்தில் உள்ள மிதக்கும் சந்தையை மய்யப்படுத்தி மிதக்கும் விவசாய உற்பத்திகளும் முன்னெடுக்கப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .