2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சந்தர்ப்பத்தை கூட்டமைப்பு சரியாகப் பயன்படுத்த வேண்டும்

Johnsan Bastiampillai   / 2022 மார்ச் 31 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

புருஜோத்தமன் தங்கமயில்

 

 

 

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, நீண்டகால காத்திருப்புக்குப் பின்னர் நடந்து முடிந்திருக்கின்றது.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் தொடர்பில், ஆட்சியில் இருக்கும் எந்த அரசாங்கத்துடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தயாராக இருப்பதாக, கூட்டமைப்பு தொடர்ச்சியாகத் தெரிவித்து வந்திருக்கின்றது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில், சஜித் பிரேமதாஸவுக்கு கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்த தருணத்திலும், பின்னர் பொதுத் தேர்தல் காலத்திலும் கூட, “புதிய ஜனாதிபதியுடனும் அரசாங்கத்துடனும் பேசுவோம்” என்று கூட்டமைப்பு கூறியது.

அதன்போக்கில், ராஜபக்‌ஷர்கள் ஆட்சிக்கு வந்ததும் பேச்சு வார்த்தைகளுக்காக காத்திருக்கிறோம் என்கிற தொனிப்பட கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், ஜனாதிபதிக்கு கடிதமும் எழுதியிருந்தார். ஆனால், அவ்வாறானதொரு சந்திப்பை நடத்துவதற்கு ராஜபக்‌ஷர்கள் சுமார் இரண்டு ஆண்டுகள் காலம் எடுத்திருக்கிறார்கள்.

அதுவும், இலங்கையின் பொருளாதாரம் வங்குரோத்து நிலையை எட்டி, என்ன செய்வது என்று தெரியாமல் ராஜபக்‌ஷர்கள் ‘முழிபிதுங்கி’க் கொண்டிருக்கின்ற இன்றைய காலகட்டத்தில், கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையை நடத்தியிருக்கிறார்கள்.

ராஜபக்‌ஷர்களுக்கு பேச்சுவார்த்தைகளை நடத்தி, பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்பது தொடர்பில், பெரிய நம்பிக்கைகள் இல்லை. இராணுவ அணுகுமுறைதான் தாங்கள் நினைத்ததை அடைவதற்கான ஒரே வழி என்று, அவர்கள் ஆட்சிக்கு வந்த காலம் முதல் வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள்.

மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காகவும் இனவாதத்தையும் யுத்த வெற்றிவாதத்தையுமே தென் இலங்கை பூராவும் விதைத்தார்கள். கோட்டா ஜனாதிபதியாகப் பதவியேற்கும் போதுகூட, அதனைத்தான் பிரதிபலித்தார். அதனால்தான் கூட்டமைப்பின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பைக் கிட்டத்தட்ட நிராகரித்து வந்திருந்தார்.

ஏற்கெனவே இரண்டுமுறை சந்திப்புக்கான நாள்கள் தீர்மானிக்கப்பட்டு, இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டன. இரத்து செய்யப்பட்டமைக்கான காரணங்களாக, நேரப்பிரச்சினை கூறப்பட்டாலும் கூட்டமைப்பு பேச விரும்பும் விடயங்களை அறிந்து கொண்டதும், அது தொடர்பில் பேசுவதற்கு தயாரில்லை என்ற நிலைப்பாட்டிலேயே கோட்டா சந்திப்புகளைத் தவிர்த்தார். ஆனால், இம்முறை பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்திருக்கின்றமைக்கான காரணம், வெளிநாடுகளின் அழுத்தம் மற்றும் பொருளாதார நெருக்கடியாகும்.

ராஜபக்‌ஷர்கள் இன்றைக்கு ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ எனும் கட்டத்தில் வந்து நிற்கிறார்கள். ஏனெனில், நாட்டின் பொருளாதார வீழ்ச்சி என்பது, தென் இலங்கையில் ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான கிளர்ச்சியை தோற்றுவித்திருக்கின்றது.

தற்போதுள்ள நிலை தொடர்ந்தால், ராஜபக்‌ஷர்களால் மக்கள் மத்தியில் செல்லவே முடியாமல் போய்விடும். அதனால், எப்படியாவது நிலைமைகளைச் சமாளித்தாக வேண்டும்; அதற்காக யாரின் காலைப்பிடிக்கவும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.
அதன் ஒரு வெளிப்பாடுதான், கூட்டமைப்புடனான பேச்சுகளின் போது, புலம்பெயர் தமிழ் மக்களை இலங்கையில் முதலிடக்கோரும் ராஜபக்‌ஷர்களின் அழைப்பாகும்.

புலம்பெயர் தமிழ் அமைப்புகள், தனிநபர்கள் மீதான தடை என்பன நல்லாட்சிக் காலத்தில் நீக்கப்பட்டது. ஆனால், ராராஜபக்‌ஷர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் மீதான தடையை விதித்தார்கள். அத்தோடு கண்காணிப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தினார்கள்.

ஆனால், இன்றைக்கு புலம்பெயர் தமிழ் மக்களை முதலிடக் கோருகிறார்கள். தமிழ் அமைப்புகள் மீதான  தடையை நீக்காது புலம்பெயர் தமிழ் மக்கள், இலங்கையில் முதலிடுவதற்கு தயாராக மாட்டார்கள். ஏனெனில், ராஜபக்‌ஷர்களின் கடந்தகால வரலாறு அப்படியானது.

கூட்டமைப்புடனான பேச்சுகளின் போது, வடக்கு - கிழக்கு மாகாணங்களை பிரதானப்படுத்திய முதலீடுகளை வெளிநாடுகளில் இருந்து ஈர்ப்பது தொடர்பிலான நடவடிக்கைகளுக்கு, விசேட ஏற்பாடுகளைச் செய்வது தொடர்பில், ராஜபக்‌ஷர்களால் வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கின்றது.

முப்பது ஆண்டுகளுக்கு மேலாகவும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு -கிழக்கு மாகாணங்களைப் பிரதானப்படுத்தி, நிதியங்களை அமைத்து செயற்படுவதற்கான அனுமதியை, வடக்கு மாகாண சபை உள்ளிட்ட பல தரப்புகளும் வேண்டி நின்றன. எனினும், அதனை ராஜபக்‌ஷர்களோ அதன் பின்னர் வந்த நல்லாட்சிக்காரர்களோ அனுமதிக்கவில்லை.

ஆனால், இன்றைக்கு அவை பற்றியெல்லாம் பேசுவதற்கும் வாக்குறுதி அளிப்பதற்குமான கட்டத்தில் ராஜபக்‌ஷர்கள் வந்து நிற்கிறார்கள். இதுதான், ராஜபக்‌ஷர்களோடு பேசுவதற்கான முக்கிய தருணங்களில் ஒன்று!

இப்படியான நெருக்கடியான தருணத்தைப் பயன்படுத்தி கூட்டமைப்பு, எவ்வாறான அடைவுகளை அடையப்போகின்றது என்பதுதான் இப்போதைய கேள்வி. ஏனெனில், ராஜபக்‌ஷர்களில் நம்பிக்கை வைத்து பேச்சுவார்த்தைக்கு செல்லவில்லை. மாறாக, ஆட்சியில் யார் இருக்கிறார்களோ அவர்களோடு எமது பிரச்சினைகளைப் பேச வேண்டியது கூட்டமைப்பின் கடமை என்று சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும் கூறியிருக்கிறார்கள்.

தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்புகளில் கூட்டமைப்புத்தான் இன்றைக்கும் பிரதான தரப்பு. அது மக்களின் எதிர்பார்ப்புகளின் படி செயற்பட வேண்டியது அவசியம். அதுவும், கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை எல்லாம் சமயோசிதமாகக் கையாளும் வல்லமையோடும் இருந்தாக வேண்டும்.

அதனைவிடுத்து, ‘எடுத்தோம் கவிழ்த்தோம்’ என்று விடயங்களை அணுக முடியாது. கூட்டமைப்புக்குள் டெலோ மாற்று முடிவை எடுத்து, பேச்சுவார்த்தையைப் புறக்கணித்து செயற்பட்ட போதிலும், கூட்டமைப்பு என்பது இன்னமும் சம்பந்தனின் தலைமைத்துவத்தின் கீழேயே இருக்கின்றது என்பதை அவர் தெளிவாகவே வெளிப்படுத்துகிறார். இராஜதந்திர சந்திப்புகளின் போதும் அதுவே பேணப்படுகின்றது.
ஜனாதிபதியின் அழைப்பில் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்தைத் தமிழ்த் தேசிய கட்சிகள் பல புறக்கணித்த போதும் கூட, அதிலும் கூட்டமைப்பு பங்குபற்றியது. அப்போதும் டெலோ தனித்து முடிவெடுத்துச் செயற்பட்டது.

ஆனால், கூட்டமைப்பின் தலைமை, ஜனாதிபதியுடனான பேச்சுவார்தையையோ, சர்வகட்சி மாநாட்டில் பங்குபற்றியமையோ மக்களால் விமர்சிக்கப்படவில்லை. சில தமிழ்த் தேசிய கட்சிகள் ஊடாக, சந்திப்புகளை நடத்தி, எதிர்ப்பை வெளியிட்டதோடு அவை முடிவுக்கு வந்துவிட்டன.

தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகளை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் தரப்பாக கூட்டமைப்பையே இன்னமும் மக்கள் கருதுகிறார்கள்.

ஏனெனில், ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்று விடயங்களை அணுகும் தரப்பாக தமிழ்த் தேசிய கட்சிகள் பலவும் தொடர்ச்சியாகத் தங்களை முன்னிறுத்தி வந்ததன் விளைவு அது.

இந்திய வெளிவிவகார அமைச்சரின் அண்மைய விஜயத்தின் போதும், அவர் சந்தித்த ஒரே தமிழ்த் தேசிய அரசியல் தரப்பு என்றால் அது கூட்டமைப்புத்தான். அதுவும் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான பேச்சுகளில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் கோட்டாவும் கூட்டமைப்பும் ஒரே மாதிரியான கருத்துகளை தெரிவித்திருப்பதாக கூறியிருப்பது முக்கியமான விடயமாகும்.

ஏனெனில், வழக்கமாக தமிழ்த் தரப்புகளுடன் பேச்சுகளில் ஈடுபடும் தென் இலங்கை ஆட்சியாளர்கள், அவற்றைப் பெரிதாகக் காண்பிப்பதில்லை. அதுபோல, பேச்சுகளில் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் வெளிப்படுத்துவதில்லை. அவை அப்படியே மறக்கப்பட்டுவிடும்.

ஆனால், இம்முறை கூட்டமைப்புடன் பேசிய விடயங்கள் தொடர்பில், இந்திய வெளிவிவகார அமைச்சரிடமே கோட்டா விபரித்திருப்பது முக்கிய கட்டமாகும்.
இதற்கு ராஜபக்‌ஷர்கள் இன்றைக்கு சந்தித்து நிற்கும் நெருக்கடியே காரணமாகும். இந்த நெருக்கடி, எவ்வளவுக்கு வந்திருக்கின்றது என்றால், இந்திய வெளிவிகார அமைச்சர் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விஜயம் செய்து, நிலைமைகளைப் பார்வையிடும் அளவுக்கானது.

எந்தவொரு நாடும், இவ்வாறான நிலையொன்றைப் பேண விருப்பாது. ஆனால், இன்றைக்கு ராஜபக்‌ஷர்கள் இந்திய வெளிவிவகார அமைச்சர் எங்கு செல்ல முடியும், எங்கு செல்ல முடியாது என்று தீர்மானிக்கும் இடத்தில் இல்லை.

மாறாக, ‘கடன்’ என்கிற ஒற்றைச் சொல்வோடு காத்திருக்கின்றது. இவ்வாறான தருணத்தில் கூட்டமைப்பு தன்னுடைய கைகளை இன்னும் உயர்த்திக் கொண்டு, விடயங்களை அணுக வேண்டும். அப்போதுதான் தென் இலங்கையிடம் இருந்து பெற வேண்டிய விடயங்களைப் பெற முடியும். ஏனெனில், அரசியல் என்பது சந்தர்ப்பங்களை கையாளும் உத்தியாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .