2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஜே.வி.பி எனும் இனவாத சக்தி

Johnsan Bastiampillai   / 2022 மார்ச் 21 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

என்.கே. அஷோக்பரன்

 

 

 

ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான மக்கள் அலை, தினம்தினம் வளர்ந்து கொண்டிருக்கிறது. ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக எழுந்திருக்கும் மக்கள் எதிர்ப்பையும் அதிருப்தியையும், தமக்குச் சாதகமாக்க சஜித் பிரேமதாஸவை முன்னிறுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியும், அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி என்ற மக்கள் விடுதலை முன்னணியும் களத்தில் இறங்கியுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி, திக்குத் தெரியாத நடுக்கடலில் சிக்கிய, பல கப்டன்களைக் கொண்ட கப்பலைப் போலத்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. தான் ஒரு கட்சியா? அல்லது, கூட்டணியா என்ற குழப்பம், ஐக்கிய மக்கள் சக்திக்கு உள்ள ஆயிரம் பிரச்சினைகளில், ஒரு பிரச்சினையாகக் காணப்படுகின்றது.
ஆகவே, பிரதான எதிர்க்கட்சி வலுவிழந்திருக்கும் போது, அந்த இடத்தைத் தான் எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என ஜே.வி.பி கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியிருக்கிறது.

இலங்கை வரலாற்றில், பயங்கரவாதிகள் என்றால், தமிழ் ஆயுதக் குழுக்களை மட்டும் ஞாபகம் கொள்வது இனவாதத்தின் விளைவு. 1987இல் இலங்கை பாராளுமன்றத்துக்குள் குண்டு போட்ட பயங்கரவாதிகள், ‘தேசப்பிரேமி ஜனதா வியாபாரய’ (தேசபக்தி மக்கள் இயக்கம்) என்ற ஜே.வி.பியின் இராணுவப் பிரிவினர் ஆவர்.

இலங்கையின் தமிழீழ விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்ட முக்கியஸ்தர்கள் பலரை, பலருக்கும் ஞாபகம் இருக்கும், ஆனால், ஜே.வி.பியால் கொலை செய்யப்பட்ட முக்கியஸ்தர்களை பலரும் மறந்துவிட்டதாகவே தோன்றுகிறது.

என்ன? ஜே.வி.பி குண்டு போட்டதா? ஜே.வி.பி ஓர் ஆயுதக் குழுவா? ஜே.வி.பி முக்கியஸ்தர்களைக் கொலை செய்ததா போன்ற கேள்விகளை, அநுர குமார திஸாநாயக்கவின் ரசிகர்களாக உருவாகியிருக்கும் புதிய தலைமுறை பூர்சுவா யௌவனர்கள், கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இலங்கையின் பெயர்போன தொழிலதிபரும், முன்னணி திரைப்படத் தயாரிப்பாளருமான கனகசபை குணரட்ணம் (கே.ஜி), தொழிலதிபர்களான சண்முகம் சகோதரர்கள், சபீர் ஹூசைன் ஆகியோர் 1989இல் ஜே.வி.பியினரால் படுகொலை செய்யப்பட்டதாக அறிக்கையிடப்பட்டு உள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான ஜினதாஸ வீரசிங்ஹ, கீர்த்தி அபேவிக்கிரம, ஜீ.வி.எஸ்.டி சில்வா, லயனல் ஜயதிலக்க,  அநுர டானியல், மெரில் காரியவசம், டபிள்யூ.எம்.பி.ஜீ. பண்டா, லெஸ்லி ரணகல, தயா சேபாலி சேனாதீர ஆகியோரும், ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்களான ஹர்ஷ அபேவர்தன, நந்தலால் பெர்ணான்டோ, சரத் நாணயக்கார ஆகியோரும், உள்ளூராட்சி மன்ற உறுப்பினரான லக்‌ஷ்மன் சில்வாவும் ஜே.வி.பியால் படுகொலை செய்யப்பட்டதாக அறிக்கையிடப்பட்டு உள்ளது.

லங்கா சமசமாஜக் கட்சி உறுப்பினரான பி.டீ  விமலசேன, இலங்கை தாராளவாதக் கட்சி வேட்பாளர் ஓ. காரியவசம், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் களுத்தறை அமைப்பாளர் இந்திரபால அபேவீர, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான எல். டபிள்யூ பண்டித, இலங்கையின் முன்னணி நடிகரும், சந்திரிகா குமாரதுங்கவின் கணவரும், இலங்கை மக்கள் கட்சியின் தலைவருமான விஜய குமாரணதுங்க ஆகியோரும் ஜே.வி.பியால் படுகொலை செய்யப்பட்டதாக அறிக்கையிடப்பட்டு உள்ளது.

கொழும்புப் பல்கலைக்கழகத்தின் முதலாவது உபவேந்தரான பேராசிரியர் ஸ்ரான்லி விஜேசுந்தர, மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் உபவேந்தரான சண்ட்ரட்ன பட்டுவதவிதான ஆகியோரும் ஜே.வி.பியால் படுகொலை செய்யப்பட்டதாக அறிக்கையிடப்பட்டு உள்ளது.

இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் முதலாவது பெண் பணிப்பாளரான முனைவர் க்ளடிஸ் ஜயவர்தன ஜே.வி.பியால் படுகொலை செய்யப்பட்டதாக அறிக்கையிடப்பட்டு உள்ளது.

மேலும் பல பொலிஸ் அதிகாரிகள், அரச உத்தியோகஸ்தர்கள், தனியார் தொழிற்றுறை உத்தியோகஸ்தர்கள், பெருந்தோட்ட முகாமையாளர்கள், கல்வியியலாளர்கள், ஊடகவியலாளர்கள் என ஜே.வி.பி படுகொலை செய்தவர்களின் பட்டியல் மிக நீண்டது. இதில் வௌிநாட்டவர்களும் உள்ளடக்கம்.

இந்தப் படுகொலை பட்டியலில் பௌத்த பிக்குகளும் விதிவிலக்கல்ல. கொட்டிக்காவத்தே சத்ததிஸ்ஸ தேரோ, வல்லதொட பண்ணதர்ஸி தோரோ, பொஹொத்தரமுல்லே ப்ரேமலோக தேரோ உள்ளிட்ட பௌத்த பிக்குகளும் ஜே.வி.பியினால் படுகொலை செய்யப்பட்டதாக அறிக்கையிடப்பட்டு உள்ளது.
பல உயிர்களைப் பறித்த இரத்தக்கறை, ஜே.வி.பி மீது படிந்து கிடக்கிறது. இந்த இரத்தக்கறையை மறைக்க வேண்டிய தேவை, ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு ‘ஜனநாயக வழி’க்குத் திரும்பிய ஜே.வி.பிக்கு இருந்தது. அதற்காக ஜே.வி.பி எடுத்துக்கொண்ட ஆயுதம் ‘பேரினவாதம்’.

ராஜபக்‌ஷர்கள், ஞானசாரர்களுக்கு முன்பதாக, மிகப் பெரிய ‘சிங்கள-பௌத்த’ பேரினவாத சக்தியாக 1990களின் பிற்பகுதியிலிருந்து தன்னை முன்னிறுத்திச் செயற்பட்ட கட்சி ஜே.வி.பி ஆகும். ஜே.வி.பியின் இந்த இனவாதத்தை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ராஜபக்‌ஷர்களும் தமது அரசியல் நலன்களுக்காக, நன்றாகவே பயன்படுத்தி இருந்தார்கள்.

தன் தாயைக் கொல்ல முயன்ற, தன் கணவரைக் கொன்ற ஜே.வி.பியோடு, அரசியலுக்காக கைகோர்த்த அவலத்தையும் சந்திரிகா புரிந்திருந்தார். அன்று பேரினவாத சக்தியாக இருந்த ஜே.வி.பியின் அரசியல் ஆதரவு அவரது அரசியலுக்கு தேவையாக இருந்தது.

இலங்கை இனப்பிரச்சினைக்கு மிக குறைந்தபட்ச தீர்வாக, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் ஊடாக ஒன்றிணைக்கப்பட்ட வடக்கு-கிழக்கை, வழக்காடிப் பிரித்தது ஜே.வி.பி ஆகும். இந்த ‘இனவாத’ ஜே.வி.பியில் புடம்போடப்பட்டவர்கள்தான் விமல் வீரவன்ச வகையறாக்கள். தமிழர் விரோத இனவாதத்தை, 1990களின் பின்னர் வளர்த்து விட்டதில், ஜே.வி.பிதான் முதன்மையானதும் முக்கியமானதுமான அரசியல் சக்தியாகும்.
2009ஆம் ஆண்டில் பெற்றுக்கொள்ளப்பட்ட யுத்த வெற்றி, மஹிந்த ராஜபக்‌ஷவை ‘அடுத்த துட்டகைமுனு’ என்ற நிலைக்கு கொண்டு சென்றது. ராஜபக்‌ஷவை மீறியதொரு ‘சிங்கள-பௌத்த’ பேரினவாத தலைமை உருவாக முடியாது என்ற நிலையில், தன் நிலைப்பாட்டை மாற்ற வேண்டிய கட்டாயம் ஜே.வி.பிக்கு  ஏற்பட்டது.

பயங்கரவாதக் கறையை மறைக்க, பேரினவாத முகமூடியை அணிந்து கொண்ட ஜே.வி.பி, அரசியல் நிலைப்புக்காக அந்த முகமூடியைக் கழட்டி, கொஞ்சம் தாராளவாத ஜனநாயக முகமூடியை அணிந்துகொள்ளத் தொடங்கியது. அதற்கு உவப்பானதாக, அநுரகுமார திஸாநாயக்கவை தனது தலைவராகவும் ஆக்கிக்கொண்டது.

ஆனால், ஜே.வி.பி என்ற பெயரும், அதோடு இணைந்த பயங்கரவாத, இனவாத அடையாளமும் தாராளவாத ஜனநாயக முகமூடியை கிழித்துக்கொண்டு நின்றதால், அந்தக் கிழிசல்களை மறைக்க ‘தேசிய மக்கள் சக்தி’ என்றதொரு புதிய அமைப்பின் பெயரில், புதிய சின்னத்தில் இயங்கத் தொடங்கியுள்ளது ஜே.வி.பி. புதிய போத்தலில், பழைய இரத்தக்கறை தோய்ந்த, இனவாத வெறியேறிய அதே கள்தான் என்பதை உணர வேண்டும்.

அது தவறு, அநுர குமார திஸாநாயக்க சரியாகத்தானே பேசுகிறார்; அவர் வித்தியாசனமானவர். அவர் ஜே.வி.பியை மாற்றிவிட்டார் என்று சிலர் வாதிடுவார்கள். அநுர, பேச்சுக்கலை வல்லோன். அவரது சிங்கள மொழிப் பேச்சுகளுக்கு நான் ரசிகன். ஆனால், ஹிட்லரும் பேச்சுக்கலை வல்லோன் என்பதை மறந்துவிடக்கூடாது. பேச்சைக் கேட்பதோடு, செயலையும் அவதானிக்க வேண்டும்.

ஒரு முறையாவது, இலங்கை இனப்பிரச்சினைக்கு அதிகாரப்பகிர்வு தீர்வு பற்றி அநுரகுமார திஸாநாயக்க பேசியிருக்கிறாரா. இல்லை! இன்றுள்ள பிரச்சினைகளுக்கான மாற்றுத் தீர்வுகளை அவர் முன்வைத்திருக்கிறாரா? இல்லை! ஆட்சியிலுள்ளவர்களை விமர்சிக்கும், கேள்வி கேட்பதை மட்டுமே அவரது பேச்சுகளினூடாகச் செய்துகொண்டிருக்கிறார். அதனால் ஏற்படும் கவர்ச்சியைப் பயன்படுத்தி, தேர்தல் வெற்றிகளை அடைய எண்ணுகிறார்.

அநுர வித்தியாசமானவராக இருந்தாலும், அவரோடு உள்ளவர்களும், அந்தக் கட்சியும் அதே ஜே.வி.பிதான். அநுர என்ற முகத்தைக் காட்டி, அதே பயங்கரவாத, இனவாத சக்தியான ஜே.வி.பிதான் அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கிறது. வரலாற்றை நாம் மறந்துவிடக்கூடாது. வரலாறு முக்கியம்!


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .