2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

தமிழக சட்டமன்றத் தேர்தல்: புதிய 'ஹீரோவும்' புதிய 'ஹீரோயினும்'

Thipaan   / 2016 ஏப்ரல் 11 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அ.தி.மு.கவின் தேர்தல் பிரசாரத்தை, சென்னை தீவுத்திடலில் தொடங்கினார் முதலமைச்சர் ஜெயலலிதா. அவருக்குப் போட்டியாக, தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் 'திண்ணைப் பிரசாரத்தை' தொடங்கி வைத்தார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் 'இன்னும் கூட்டணி எது' என்பது புரியாமல் தவிக்கிறார். தங்களுக்குள் உள்ள தொகுதிப் பங்கீட்டில் இறுதி நிலை எட்டுவதற்காக மக்கள் நலக்கூட்டணியும் தே.மு.தி.கவும் போராடிக் கொண்டிருக்கின்றன.

'முதல் வேட்பாளர் பட்டியலை' வெளியிட்டு விட்டு, அடுத்த வேட்பாளர் பட்டியலை வெளியிடாமல் வாசன் வருவாரா, அல்லது பாட்டாளி மக்கள் கட்சி வருமா என்ற எதிர்பார்ப்புடன் இன்னும் பாரதிய ஜனதாக் கட்சி பவ்யமாக காத்திருக்கிறது. ஊருக்கு முன்னால் 'தனித்துப் போட்டி' என்று அறிவித்த பா.ம.க இன்னும் வேட்பாளர் பட்டியலைக் கூட வெளியிடாமல், 'உங்கள் ஊர். உங்கள் அன்புமணி' என்று இன்னும் அன்புமணியை முன்னிறுத்துவதில் மட்டுமே அக்கறை காட்டி வருகிறது.

இந்த பரபரப்புகள் இன்னும் ஓயாத நிலையில், தேர்தல் சீசனில் வழக்கமாக புறப்படும் 'கட்சி தாவல்' 'கட்சிப் பிளவு' எல்லாம் ஒவ்வொன்றாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அ.தி.மு.க தன் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட 227 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு 7 தொகுதிகளை விட்டுக் கொடுத்துள்ளது. ஆனால், தமிழக தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக அ.தி.மு.க 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 'இரட்டை இலைச் சின்னத்தில்' தானும், தன் கூட்டணிக் கட்சிகளும் போட்டியிடும் நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

அ.தி.மு.கவுக்கு எம்.ஜி.ஆர் தலைமை தாங்கிய போது கூட, 234 தொகுதிகளில் இரட்டை இலை போட்டியிடவில்லை. சென்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் இரட்டை இலைச் சின்னம். அதே போல் இந்த முறை சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் இரட்டை இலைச் சின்னம்.

தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆரின் இரட்டை இலைச் சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தினால் 'எம்.ஜி.ஆருக்கு இருக்கும் பாப்புலாரிட்டியில்' அ.தி.மு.கவை வெற்றி பெற வைத்து விட முடியும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா நினைக்கிறார். எம்.ஜி.ஆரின் இரட்டை இலைக்கு இன்னும் தமிழகத்தில் மவுசு இருப்பதாகக் கருதும் அவர், தனித்துப் போட்டியிடும் இந்த நேரத்தில் அதை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கருதுகிறார். அது மட்டுமின்றி எம்.ஜி.ஆர் காலத்தில் தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க சார்பாக வாய்ப்பு கொடுத்து போட்டியிட வைத்துள்ளார்.

இப்படி, அ.தி.மு.க களத்துக்குப் புறப்பட்டுள்ள நிலையில், திடீரென்று தே.மு.தி.கவில் புயல் வீசி, தேர்தல் பாதையை திசை திருப்பியிருக்கிறது. அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த சந்திரகுமார் வெளியேறி 'விஜயகாந்த், தி.மு.க கூட்டணியில் சேர வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார்.

தி.மு.கவை 'தில்லுமுல்லுக் கட்சி' என்று பெயரிட்டு அழைத்த தே.மு.தி.க மகளிர் அணித் தலைவி பிரேமலதாவுக்குப் பதிலடி கொடுக்கும் நிகழ்வு இது என்றே அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. தி.மு.கவுக்கும், அ.தி.மு.கவுக்கும் மாற்று என்று தொடங்கிய 'மக்கள் நலக்கூட்டணி' குழப்பத்தில் மூழ்கியது. சந்திரகுமார் பிரிந்து வந்து கச்சேரி நடத்தியது தே.மு.தி.கவை கலக்கியது என்றால், அதை முன்னிட்டு 'கலைஞர் கருணாநிதியின் ஜாதியைப் பற்றி வைகோ பேசியது' மக்கள் நலக்கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

மக்கள் நலக்கூட்டணியில் உள்ள திருமாவளவனும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனுமே வைகோவை கண்டித்து விட்டார்கள். 'நாம் மக்களுக்கு மாற்று என்று களத்தில் நிற்கிறோம். இப்படி மூத்த தலைவர் ஒருவரை மரியாதை குறைவாக ஜாதியைக் குறிப்பிட்டு பேசுவது, நாம் முன் வைக்கும் மாற்றம் என்ற பிரசாரத்தின் முனையை மழுங்க வைக்கிறது' என்று வைகோ தவிர மற்ற மக்கள் நலக்கூட்டணித் தலைவர்கள் குரல் எழுப்பினார்கள்.

தி.மு.கவினர், ஆங்காங்கே வைகோவின் உருவப் பொம்மைகளை கொளுத்தி, திடீர் ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் இறங்கினார்கள். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் நலக்கூட்டணி உடைந்து விடுமோ என்ற பதறினார் வைகோ. அதன் விளைவாக 'கலைஞரை அப்படிப் பேசியது என் வாழ்நாளில் நான் செய்த தவறு' என்றும் 'தாயுள்ளத்துடன் கலைஞர் மன்னிக்க வேண்டும்' என்றும் வேண்டுகோள் விடுத்து உடனடியாக அறிக்கை விடுத்தார்.

வைகோவின் அந்த வேண்டுகோளை கருணாநிதி ஏற்றாரா இல்லையா என்பது பற்றி தனியாக அவர் ஏதும் அறிக்கை விடவில்லை. ஆனால், தி.மு.கவின் அதிகார பூர்வநாளேடான முரசொலியில், வைகோவின் அறிக்கை வெளிவந்தது. இதுவே கலைஞர் கருணாநிதி வைகோவின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டார் என்றே அர்த்தம் காண வேண்டும். 2016 சட்டமன்ற தேர்தலில் நடைபெற்ற முதல் 'வெறுப்புப் பேச்சு' என்பதோடு மட்டமல்ல, 'கண்ணியமற்ற பேச்சு' என்று அனைத்து அரசியல் தலைவர்களாலும் கண்டனம் செய்யப்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸே '50 வருடம் பொதுவாழ்வில் உள்ள வைகோவிடமிருந்து இப்படியொரு அநாகரிகமான பேச்சை நான் எதிர்பார்க்கவில்லை' என்று சாடி விட்டார்.

தே.மு.தி.கவில் ஏற்பட்டுள்ள பிளவு, கலைஞர் கருணாநிதியை வைகோ அவதூறு பேசியது எல்லாம் தி.மு.கவுக்குச் சாதகமாக மாறிவிட்டது. அதற்கு தகுந்தாற்போல் ஏப்ரல் 4ஆம் திகதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அ.தி.மு.க, இன்றுவரை அதில் அதிரடி மாற்றங்களை செய்து கொண்டே இருக்கிறது. இதுவரை ஆறு முறை அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை மாற்றியோ, அல்லது அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் இடையே தொகுதியை மாற்றியோ அக்கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

அ.தி.மு.கவில் ஏற்பட்டுள்ள குழப்பமும் தி.மு.கவுக்குச் சாதகமான சூழலை உருவாக்குகிறது. அதே போல் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி உருவான அன்று இருந்த பாதகமான சூழல், இன்றைக்கு தி.மு.க திண்ணைப் பிரசாரத்தைத் தொடங்கும் அன்று சாதகமான சூழலாக மாறியிருக்கிறது.

முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே. நகர் தொகுதியில், தி.மு.கவின் திண்ணைப் பிரசாரத்தை மு.க. ஸ்டாலின் ஆரம்பித்திருப்பதற்கு அரசியல் காரணங்கள் உண்டு. முதலில் அ.தி.மு.கவுக்;கு தி.மு.கதான் போட்டி என்பதை தி.மு.கவின் முதல் பிரசாரத்திலேயே மீண்டும் அறிவித்துள்ளார். 'தி.மு.கவுக்கும், அ.தி.மு.கவுக்கும் போட்டி' என்பதை இனி வரும் காலங்களில் வேகமாக களத்துக்கு எடுத்துச் செல்லும் பணியில் தி.மு.கவும் இறங்கும். அ.தி.மு.கவும் களமிறங்கும். இரு கட்சிகளும் களத்தில் நிற்கும் போது மற்ற எந்த கட்சியும் அங்கு தென்படாமல் போகும் சூழ்நிலை ஏற்படும்.

தேர்தலில் 'பிரசாரம்' ஹீரோ என்றால் அக்கட்சிகள் வெளியிடும் 'தேர்தல் அறிக்கையே' ஹீரோயின் என்று வைத்துக் கொள்ளலாம். இந்த ஹீரோவும், ஹீரோயினும் சேர்ந்துதான் மக்கள் மனதில் தி.மு.கவையோ, அ.தி.மு.கவையோ இடம்பெற வைக்க வேண்டும். அதனால் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள விடயங்களை இரு கட்சிகளுமே தேர்தல் களத்துக்குத் தீவிரமாக எடுத்துச் செல்லும்.

93 வயதான தி.மு.க தலைவர் கருணாநிதியும் தேர்தல் களத்துக்கு வருகிறார். 1957இல் முதல் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று சட்டமன்றததுக்குச் சென்ற கருணாநிதி, இப்போது 2016ல் சட்டமன்ற தேர்தல் வேட்பாளராகவும், கட்சி பிரசார நாயகராகவும் இருக்கிறார். முதலமைச்சராக இருக்கும் ஜெயலலிதாவும் தேர்தல் களத்துக்குள் நுழைகிறார். இவர் முதலில் 1989 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எதிர்கட்சி தலைவியானார்.

அவரும் 2016 சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறார். இவர்களுக்குப் போட்டியாக விஜயகாந்த், 2006 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று இப்போது பத்தாவது வருடமாக மீண்டும் சட்டமன்ற தேர்தலுக்கு நிற்கிறார். அன்புமணி முதன் முதலாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவிருக்கிறார். அதே போல் சீமானும் இப்போதுதான் போட்டியிடுகிறார்.

தமிழகத்தில் உள்ள பல ஐ.பி.எஸ். மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது தி.மு.க உள்ளிட்ட எதிர்கட்சிகள் புகார் கொடுத்துள்ளன. அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கவில்லை என்பது அரசியல் கட்சிகளுக்கு குறையாக இருக்கிறது. 'நேர்மையான, சுதந்திரமான' தேர்தலை நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராகேஷ் லகானியும் கூறி வருகிறார். ஆனால், தேர்தல் களம் சூடுபிடிக்கும் போதுதான், இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்பு எப்படி நேர்மையான தேர்தல் நடைபெறுவதற்கு துணை நிற்கும் என்பது தெரிய வரும்.

ஏனென்றால் கடந்த காலத்தில், குறிப்பாக 2014இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 'அ.தி.மு.கவுடன் தேர்தல் ஆணையமும் கூட்டணி வைத்துக் கொண்டது' என்றே பகிரங்கமாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த சூழ்நிலையில்தான் 2016 சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது என்பதும், அரசியல் கட்சிகள்- குறிப்பாக ஆளும் அ.தி.மு.கவுக்கு வேண்டிய அதிகாரிகள் எப்படி தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை மதிக்கப் போகிறார்கள் என்பதுமே வரும் வாரங்களில் தேர்தலின் 'தலைப்புச் செய்தியாக' இருக்கும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X