2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தரப்படுத்தலும் தரந்தாழ்ந்த அரசியலும்

Johnsan Bastiampillai   / 2022 மார்ச் 29 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

 

 

ஸ்ரீ லங்கா முதல் சிங்கலே வரை - 12

1970ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள், தமிழ்த் தேசியவாத அரசியலில் மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தியிருந்தன. அந்தப் பின்னடைவைச் சரிக்கட்டும் முகமாக, அப்போதிருந்த ஆட்சியாளரின் நடவடிக்கைகள் இருந்தன.

இலங்கையின் இனமுரண்பாட்டின் முக்கியமான திருப்புமுனைகளில் ஒன்றாகச் சொல்லப்படுவது, 1971ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பல்கலைக்கழகத் தரப்படுத்தல்; இதைச் சுற்றி நிகழ்ந்த நிகழ்வுகள், தரம் தாழ்ந்த அரசியலின் பக்கங்களை எமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

தரப்படுத்தலை நியாயப்படுத்தி, சிங்கள சமூகத்தினர் முன்வைக்கின்ற வாதங்கள் ஒருபுறம் இருக்க, இதற்கு ஆதரவாகத் தமிழர் குரல்களும் எழுந்துள்ளன. அவை அரசியலின் பாற்பட்டு, சமூக அங்கிகாரத்துக்கான குரலாக, அனைவருக்குமான வாய்ப்பான குரலாக அமைந்தது.

இலங்கை பல்கலைக்கழகங்களில், பேராதனை பல்கலைக்கழகத்தில் மட்டுமே பொறியியல் பீடம் இருந்தது. அந்தப் பொறியியல் பீடத்தில், ஆண்டுதோறும் 150 மாணவர்கள் உள்ளீர்க்கப்படுவதும் அதில் 30 - 50 சதவீதமானோர் தமிழ் மொழி மூல மாணவர்களாக இருப்பதும் தொடர்ந்தது.

1970ஆம் ஆண்டு, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி, பொறியியல் பீடத்துக்குத் தகுதிபெற்றோரில் 80 சதவீதமானவர்கள் தமிழ் மொழி மூல மாணவர்களாக இருந்தமை, மிகப்பெரிய விவாதப் பொருளானது.

இதில் கவனிப்புக்குரியது யாதெனில், 80சதவீதமான தமிழ் மாணவர்கள் தகுதிபெறுவது சாத்தியமற்ற ஒன்றல்ல. அதேவேளை, யாழ்ப்பாணத்தில் டியூசன் கலாசாரம் வேர்விடத் தொடங்கியிருந்தது. பல்கலைக்கழகத்துக்குள் உள்நுழைவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், இந்த டியூசன்கள் பெரியவில் நடத்தப்பட்டதோடு, அவை பரீட்சைப் பெறுபேறுகளில் கணிசமாகப் பங்காற்றின.

எனினும், சிங்கள மக்கள் நடுவே நியாயமான ஐயங்கள் எழுந்தன. அதை ஊதிப்பெருப்பிக்கும் பேரினவாத விஷமத்தனத்தை, ஐக்கிய தேசிய கட்சியும் ஜே.வி.பியும் முன்னெடுத்தன. தனது ஆதரவுத்தளத்தை, இளையோர் மத்தியில் அதிகரிப்பதற்கான வாய்ப்பாக, இதை ஜே.வி.பி பயன்படுத்தியது.

இவ்விடயத்தின் உண்மைத் தன்மையை அறியத் தடையாகவும் திசைதிருப்பல் முயற்சியாகவும், பரீட்சை முடிவுகள் சார்ந்து இரண்டு அடிப்படையான ஊகங்கள் திட்டமிட்டுப் பரப்பப்பட்டன.

முதலாவது, தமிழ் பரீட்சகர்கள் வேண்டுமென்றே தமிழ் மாணவர்களுக்கு அதிகளவு புள்ளிகளை வழங்கியுள்ளனர். இரண்டாவது, பரீட்சை வினாத்தாள்கள் முற்கூட்டியே வெளியாகியுள்ளன.

இவ்விரு குற்றச்சாட்டுகளையும் விசாரிக்க அரசாங்கம் முடிவெடுத்தது. விசாரணைகளின் முடிவில், இக்குற்றச்சாட்டுகள் பொய்யானவை; எதுவித ஆதாரமுமற்றவை என்பது புலனானது. ஆனால், அரசாங்கம் பாரிய தவறொன்றை இழைத்தது.

விசாரணை முடிவுகள் வெளிவர முன்னரே, மொழி அடிப்படையில் தரப்படுத்தலை நடைமுறைப்படுத்த அரசாங்கம் முடிவெடுத்தது. இது, இலங்கையின் வரலாற்றில் எடுக்கப்பட்ட, நீண்டகாலப் பாதிப்புகளை உருவாக்கிய மோசமான முடிவானது.

அரசாங்கத்தின் இந்தமுடிவு, விசாரணை முடிவுகளின் பயன்களையும் அதன் உண்மையையும் பயனற்றதாக்கியது. இதன்மூலம் பேரினவாத விஷமத்தனம் நியாயமானது போன்றதொரு தோற்றத்தை உருவாக்கியது. இதை ஜே.வி.பி சிங்கள சமூகத்தில் தீவிரமாகப் பிரசாரம் செய்தது. இது 1972இல் ஜே.வி.பி கிளர்ச்சிக்குப் பகுதிக் காரணியானது.

அரசாங்கம், மொழிவாரித் தரப்படுத்தல் முறையைப் புகுத்தியதால், தமிழ்மொழிமூல மாணவர்களின் தொகை 30 சதவீத அளவுக்குக் குறைக்கப்பட்டது. இது தமிழ் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய கோபத்தை உண்டுபண்ணியது. அரசாங்கத்தின் இந்த முறைமை, மிகவும் அநீதியானதாக இருந்தபோதும், எந்தப் பிரதான கட்சியும் இதை எதிர்க்கவில்லை. குறிப்பாக, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி ஆகியவற்றின் மௌனம் குறித்து நோக்கப்பட வேண்டியது.

சிங்கள சமூகத்தில், பல்கலைக்கழக அனுமதியில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்ற வாதத்துக்கு எதிர்வாதமாக, 1956 முதல் தமிழர்கள் அரச உத்தியோகங்களில் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள் என்ற உண்மை சொல்லப்படுவதில்லை.

1956இல் தனிச் சிங்களச் சட்டத்தின் உருவாக்கத்தின் வழியிலும் திட்டமிட்ட இனஒதுக்கல் நடவடிக்கைகளின் வழியிலும், இலங்கை அரசாங்கங்கள் தொடர்ச்சியாக அரசபணிகளில் தமிழரை ஓரம்கட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன. இதற்கு எந்த அரசும் விலக்கல்ல. தமிழரசுக் கட்சி ஆதரவு கொடுத்த 1965 ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி உட்பட என்பது குறிப்பிடத்தக்கது.

1956ஆம் ஆண்டு, இலங்கை நிர்வாக சேவையில் 30 சதவீதமாக இருந்த தமிழர்களின் எண்ணிக்கை, 1970இல் வெறும் ஐந்து சதவீதமாகக் குறைந்தது. அதேபோல, 1956இல் எழுதுவினைஞர் பணியிடங்களில் 50 சதவீதமாக நிரம்பியிருந்த தமிழர்கள் 1970இல் ஐந்து சதவீதமாகினர். 1956இல் இருந்த தொழில்வல்லுநர்கள் (மருத்துவர்கள், பொறியியலாளர்கள், விரிவுரையாளர்கள்) தொகையில் 60 சதவீதமானோர் தமிழர்களாக இருந்தனர். இத்தொகை 1970இல் 10 சதவீதமானது. அதேபோல, இராணுவத்தில் 40 சதவீதமாகவும் பிறஅரச தொழிற்றுறைகளில் 40 சதவீதமாகவும் இருந்த தமிழர்கள், 1970இல் இராணுவத்தில் ஒரு சதவீதமாகவும் பிறதொழிற்றுறைகளில் ஐந்து சதவீதமாகவும் குறைந்தனர்.  

வடக்கில் தரப்படுத்தலால் பாதிக்கப்பட்டோர் ஒரு சிறுதொகையினரே ஆவார். இது படித்த யாழ்ப்பாண நடுத்தர வர்க்கத்தின் பிரச்சினையாகவே இருந்தது. ஆனால், இது மாணவர்களின் பிரச்சினையாதலால், இதற்கு ஒரு பரந்துபட்ட சமூக ஆதரவு, தமிழ் மக்கள் மத்தியில் இருந்தது.

தேர்தலில் துவண்டுபோயிருந்த தமிழரசுக் கட்சிக்கும் ஏனைய தமிழ்த் தேசியவாதிகளுக்கும் தரப்படுத்தல் வாய்ப்பான ஆயுதமானது. இக்காலத்தில், பதியூதின் மஹ்மூத் கல்வி அமைச்சராக இருந்தார். தரப்படுத்தலையும் பதியூதினையும் இணைத்து, சிங்கள முஸ்லிம் விரோதமாகக் கட்டமைக்க முனைந்தார்கள். இது, தமிழரோடு ஒன்றாக வாழ்ந்த முஸ்லிம்களும் சங்கடத்தை உண்டுபண்ணியது.

இந்நிலையில், இதற்கெதிராகப் போராடிய இளையோர் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டனர். தமிழரசுக் கட்சியும் பிற தமிழ் தேசியவாதிகளும், அதற்கு ஒரு தமிழின உணர்வுப் பரிமாணத்தை வழங்கியதோடு நில்லாது, கல்வி அமைச்சராக இருந்தவர் ஒரு முஸ்லிம் என்பதைப் பயன்படுத்தி, அதற்கு முஸ்லிம் விரோத பரிமாணத்தையும் வழங்க முற்பட்டனர். அந்த முயற்சி வெற்றி அளிக்காவிடினும், அது ஏற்படுத்திய கசப்புணர்வு புறக்கணிக்கத்தக்கதல்ல.

தரப்படுத்தல் முறையின் தவறுகளை எல்லோரும் அறிந்திருந்தனர். ஆனால், அதற்கான மாற்றுகளை முன்வைக்க எவரும் முன்வரவில்லை. இம்முறையைக் கடுமையாக எதிர்த்த தமிழரசுக் கட்சியால், எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறையொன்றை முன்மொழியவோ பல்கலைக்கழக அனுமதி தொடர்பில் சிங்கள சமூகத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஐயங்களைக் களையவோ முடியவில்லை.

தரப்படுத்தல் முறையில் இருந்த தவறுகளைச் சரிக்கட்ட, மாவட்ட அடிப்படையிலான விகிதாசார அனுமதி முறை புகுத்தப்பட்டது. இதனால் யாழ்ப்பாணத்துக்கு வெளியே வடக்கு-கிழக்கில் இருந்த மாணவர்கள் பயனடைந்தனர். இதனால், தரப்படுத்தலை ஓர் அரசியல் கருவியாக்க இயலாமல் போயிற்று.

இந்த மாவட்ட அடிப்படையிலான முறையை உருவாக்கியதில், அமைச்சராக இருந்த பீட்டர் கெனமனுக்கு முக்கிய பங்குண்டு. இந்தமுறை நகர்மயமான பிரதேசங்களில் இருந்த மாணவர்கள் மட்டுமே பல்கலைக்கழகத்துக்குள் நுழையவியலும் என்ற நிலையை மாற்றியது. அதேவேளை, இது பல்கலைக்கழகத்துக்குள் ஒரு பிரதேசவாதத்தை குறிப்பாக தமிழ் மாணவர்களிடையே உருவாக்கியது என்பதையும் மறுப்பதற்கில்லை.

ஒருபுறம் தரப்படுத்தல் மூலம், ஒருதொகுதி தமிழர்களுக்குப் பல்கலைக்கழகக் கல்வி மறுக்கப்பட்டது. அதேவேளை, ஈழத்தமிழரின் வரலாற்றை எடுத்து நோக்கினால் கல்வி என்பது, அனைவருக்குமானதாக மாறுவதற்கு நீண்டகாலம் எடுத்தது.

அவ்வகையில், தரப்படுத்தலின் விளைவால், யாழ்ப்பாணம் தவிர்ந்த வடக்கு-கிழக்கு பகுதிகளில் இருந்தான பல்கலைக்கழக நுழைவானது, புதிய நம்பிக்கைகளையும் வாய்ப்புகளையும் கொடுத்து. மறுபுறம், 1970ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளை மையமாகக் கொண்டு எழுந்த நெருக்கடி, ஜே.வி.பி போன்ற தோற்றத்தில் இடதுசாரியான அடிப்படையில் இனவாதமான ஓர் அமைப்பின் எழுச்சிக்கும் அதன் தொடர்ச்சியான கிளர்ச்சிக்கும் வழிகோலியது.

இலவசக் கல்வியின் விளைவாக, 1960களின் பிற்பகுதியில், இலங்கை கிட்டத்தட்ட முழுமையான கல்வியறிவை அடைந்தது. வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்காக, 1959ஆம் ஆண்டு தொடக்கம் சிங்களம், தமிழ் மொழிகளில் பல்கலைக்கழகக் கல்வி கிடைக்கப்பெற்றது. இருப்பினும் ஏற்றத்தாழ்வுகள் மறையவில்லை.

1970ஆம் ஆண்டில் ஒரு சதவீதமான இளைஞர்கள் மட்டுமே பல்கலைக்கழகங்களுக்குள் நுழைந்தனர். பல்கலைக்கழக அனுமதி  தேர்வுக்கான முடிவுகள், வர்க்கரீதியான வேறுபாடுகள் வியாபித்திருப்பதைத் தெளிவாகக் காட்டியது. இவற்றின் விளைவுகளையே, இலங்கை இளைஞர் கிளர்ச்சிகளின் வழி சந்திக்க நேர்ந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .