2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தேசப்பற்றின் பெயரில் இருப்புக்கான போராட்டம்

Johnsan Bastiampillai   / 2021 நவம்பர் 07 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

எம்.எஸ்.எம். ஐயூப்

 

 

 

அரசாங்கத்தின் சிறிய 10 பங்காளிக் கட்சிகளும், உண்மையிலேயே அரசாங்கத்தின் தலைவர்களிடம் ஏமாந்துவிட்டார்களா?  அல்லது, மக்களை அவர்கள் மற்றொரு சுற்று, ஏமாற்ற முயல்கிறார்களா? தற்போது அரசாங்கத்துக்கும் அந்தக் கட்சிகளுக்கும் இடையில் தோன்றி இருப்பதைப் போல் தெரியும் பிணக்கைப் பார்த்தால், இவ்வாறு தான் கேள்விகள் கேட்கத் தோன்றுகிறது.

 ‘யுகதனவி’ என்ற பெயரில் அழைக்கப்படும் கெரவலபிட்டியவில் அமைந்துள்ள மின்சார உற்பத்தி நிலையத்தின் பங்குகளில் 40 சதவீதத்தை, அமெரிக்காவின் ‘நியூ போட்ரஸ் எனர்ஜி’ என்ற நிறுவனத்திடம் கையளிப்பதற்காக, அரசாங்கம் அண்மையில் ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திட்டது. அந்த ஒப்பந்தத்துக்கு, இந்தச் சிறிய கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. 

ஆனால், அந்த எதிர்ப்பு உண்மையானதா? அல்லது, தற்போது அரசாங்கத்துக்கு எதிராக, நாட்டில் மேலோங்கி வரும் எதிர்ப்பைத் திசைதிருப்புவதற்காக, அச்சிறு கட்சிகளின் தலைவர்கள் முயல்கிறார்களா என்று, பலர் இப்போது கேள்வி எழுப்பி வருகின்றனர். அவர்கள், அவ்வாறு செய்யக்கூடியவர்கள் தான்!

அமைச்சரவையின் அனுமதி பெறாமலே, ‘யுகதனவி’ மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகள் தொடர்பில், அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாக, இச்சிறு கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. ஆனால், அதற்கு அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்ததாக, நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். 

இந்த ஒப்பந்தத்துக்கு, அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைக்கவில்லை என்றும் ஆனால், அண்மையில் ஒருநாள் நள்ளிரவில், ‘நியூ போட்ரஸ் எனர்ஜி’ நிறுவனத்தின் அதிகாரிகள், இலங்கைக்கு வந்து, அன்று இரவே ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுவிட்டு, விடியும்முன்னர் திரும்பிச் சென்றுள்ளனர் என்று, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க அண்மையில் கூறியிருந்தார். 

இந்தச் சர்ச்சையைப் பற்றிக் கலந்துரையாட, நேரத்தை ஒதுக்கித் தருமாறு, இந்தச் சிறு கட்சிகள், ஜனதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அமைச்சரவைக் கூட்டத்திலோ, ஆளும் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்திலோ, அதைப் பற்றிப் பேசலாம் என, அந்தக் கோரிக்கைக்கான பதிலில் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் ஆராயப்பட்ட போது, அமைச்சரவை அங்கிகாரம் இல்லாமலே, இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு உள்ளதாக விமல் கூறினார். 

கைச்சாத்திடப்பட்டது முடிவானதோர் ஒப்பந்தமல்ல என்றும் இந்த விடயத்துக்காக, மேலும் இரண்டு ஒப்பந்தங்களை கைச்சாத்திட வேண்டியுள்ளது என்றும் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ கூறி இருக்கிறார். 

கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை இரத்துச் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதையறிந்த சிறு கட்சிகளின் தவைர்கள், வெளியே வந்து பகிரங்கமாக, அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை விமர்சித்தனர்.

அமைச்சரவைக் கூட்டமொன்றின் முடிவில், நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ, இந்த ஒப்பந்தத்தைப் பற்றி பிரஸ்தாபித்ததாகவும், ஆனால், மறுநாள் அமைச்சரவைக் கூட்டத்தின் அறிக்கையில், அந்த ஒப்பந்தம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்துக்கு, அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்ததாகக் குறிப்பிடப்பட்டு இருந்ததாகவும் கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச இந்தக் கூட்டத்தில் தெரிவித்தார். 

மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிராகச் செயற்படுவோரின் பின்புறத்துக்கு உதைத்து விரட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்த அரசாங்கம், இதற்கு முன்னர் இருந்த எந்தவோர் அரசாங்கத்தைப் பார்க்கிலும், ஊழல் மலிந்த அரசாங்கமாக இருப்பதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். 

தேசிய சொத்துகளை வெளிநாட்டவரிடம் கையளிப்பதைத் தாம் எதிர்ப்பதாகவும் தேசிய பாதுகாப்புக்கு குந்தகமான திட்டங்களைத் தாம் எதிர்ப்பதாகவும் இக்கட்சிகள் கூறுகின்றன.  

அரசாங்கம், கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு முனையத்தின் 49 சதவீத பங்குகளை, இந்தியாவின் அதானி குழுமத்திடம் வழங்க முடிவு செய்த போது, கடந்த ஜனவரி மாதமும் இக்கட்சிகள் இவ்வாறே கூறின. 

எதிர்க்கட்சிகள் அதற்கு முன்னரே அத்திட்டத்துக்கு எதிரான போராட்டங்களை ஆரம்பித்து இருந்தன. இந்த நிலையில், கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்திடம் கையளிப்பதில்லை எனவும் அதற்குப் பதிலாக மேற்கு முனையத்தை வழங்குவதாகவும் அரசாங்கம் அறிவித்தது. அதனை, இக்கட்சிகள் ஏற்றுக் கொண்டன. கிழக்கு முனையம் தேசிய சொத்தாவதும் மேற்கு முனையம் தேசிய சொத்தாகாததும் எவ்வாறு என்பதை அக்கட்சிகள் கூறவில்லை. 

இக்கட்சிகளின் தலைவர்கள், பறைசாற்றிக் கொள்ளும் அவர்களது தேசப்பற்றின் நிலைமையையே இது காட்டுகிறது. கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் விடயத்திலும், அவர்கள் தொடர்ந்தும் உறுதியாகத் தமது நிலைப்பாட்டில் இருப்பார்களா என்பது சந்தேகமே. அதேவேளை, ராஜபக்‌ஷர்களின் தேசப்பற்றும் அவர்கள் நாட்டுக்கு வழங்கிய உத்தரவாதங்களும், தற்போது காற்றோடு பறந்துள்ளன. 

கடந்த அரசாங்கம், கிழக்கு முனையம் தொடர்பான ஒப்பந்தத்தை கைச்சாத்திட்ட போது, “தேசிய சொத்துகளை விற்பனை செய்கிறது” என்றும் “தேசத்துரோகம்” என்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் கூறினார்கள். 

ஆனால், தாம் பதவிக்கு வந்து, அதையே செய்ய முற்பட்டார்கள். பின்னர், கிழக்கு முனையத்தைக் கொடுக்காது, மேற்கு முனையத்தைக் கொடுத்தார்கள். எங்கே அவர்கள் கூறிய தேசப்பற்று? 

கடந்த அரசாங்கம், ஹம்பாற்தோட்டை துறைமுகத்தை அண்டிய பிரதேசத்தை, சீனாவுடன் சேர்ந்து தொழில் பேட்டையாக்க ஒப்பந்தம் செய்து கொண்ட போது, அது தேசிய சொத்துகளை விற்பனை செய்தலாகும் என்றும் தாம் பதவிக்கு வந்து அதை மீளப் பெறுவதாகவும் கூறினார்கள். அவர்கள் பதவிக்கு வந்து, அதனை மீளப்பெறவும் இல்லை. மாறாக, சீனாவுக்கு துறைமுக நகரத்தை ஏறத்தாழ விற்றுவிட்டார்கள்.

‘மிலேனியம் சலேன்ஜ்’ ஒப்பந்தம், அமெரிக்காவுக்கு நாட்டின் காணிகளின் நிர்வாக அதிகாரத்தை கையளிப்பதாகும் என்றார்கள். ஆனால், அதே தலைவர்கள் பதவிக்கு வந்து, அதே ஒப்பந்தத்தை நிறைவேற்ற முயன்றார்கள். இச்சிறு கட்சிகள், அதனை எதிர்த்தன. நாட்டில் எதிர்ப்பு அதிகரிக்கவே, அத்திட்டம் கைவிடப்பட்டது. 

இவ்வாறு அடிக்கடி எதிர்ப்புகளைத் தெரிவித்தாலும், சில நாள்களுக்குப் பின்னர், அதைக் கைவிட்டு, எதுவும் நடைபெறாததைப் போல் இருக்கிறார்கள். ஹம்பாந்தோட்டை விவகாரம், துறைமுக நகர விவகாரம் கிழக்கு - மேற்கு முனையங்கள் விவகாரம் ஆகியவற்றின் போது, அவ்வாறு தான் நடந்து கொண்டார்கள். 

விமலுக்கும் பசிலுக்கும் இடையிலான பிணக்கு, முன்னைய மஹிந்த ஆட்சி காலத்தில் இருந்தே உள்ளதொன்றாகும். எனவே, 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில், மஹிந்த தோல்வியுற்ற போது, பசிலே அதற்கக் காரணமென, விமல் கூறினார். 

அதன் பின்னர் பசில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையிலான கூட்டணியிலுள்ள பெரும்பாலான சிறு கட்சிகளைப் பகைத்துக் கொண்டார். அவர் அவற்றை கணக்கிலெடுக்காமையே அதற்கக் காரணமாகும். 

கடந்த ஜூலை மாதம், எண்ணெய் விலை ஏற்றத்தை அடுத்து, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில் இராஜினாமாச் செய்ய வேண்டும் என, பசில் ஆதரவாளரான பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் கூறினார். அதுவும் பெரும் சர்ச்சையாக மாறியது. 

இச்சிறு கட்சிகளுக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான பிணக்கு, அரசாங்கம் செல்வாக்கை இழந்து வருவதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கான நாடகம் என பலர் கருதுகின்றனர். 

ஆனால், “உதைத்து விரட்ட வேண்டும்”; “இந்த அரசாங்கமே மிகவும் ஊழல் மலிந்த அரசாங்கம்” போன்ற வசைபாடல்கள், போலியானவையாக இருக்குமா என்ற கேள்வியையும் எழுப்ப வேண்டியுள்ளது. 

விமல் முன்நின்று, ‘மஹிந்தவோடு எழுவோம்’ என்ற சுலோகத்துடன், சிறு கட்சிகளால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களே, பொதுஜன பெரமுன பதவிக்கு வருவதற்கு பிரதான காரணங்களில் ஒன்றாகியது. ஆனால், மஹிந்தவின் பெயர் பாவிக்கப்படாதிருந்தால், சிறு கட்சிகளால் அவ்வாறானதோர் அலையை உருவாக்கியிருக்க முடியாது. 

அதேவேளை, பொதுஜன பெரமுனவின் தலைவர்கள், இச்சிறு கட்சிகளைக் கூட்டணியிலிருந்து வெளியேற்றினால், அக்கட்சிகளால் தனியே எதையும் செய்யவும் முடியாது. தனித்தால் அக்கட்சிகளுக்கு மிகச் சிலரே ஆதரவளிப்பார்கள். 

அதேவேளை, இவர்களும் ஊழல்களில் ஈடுபட்டுள்ளதால், வெளியே சென்று மக்கள் விடுதலை முன்னணியைப் போல், அரசாங்கத்தின் ஊழல்களைப் பற்றிப் பேசுவது ஆபத்தானதாகும். 

ராஜபக்‌ஷர்களை எதிர்த்துச் செயற்படாத போதிலும், 52 நாள் அரசாங்கத்தை ஆதரிக்க வர மறுத்தமைக்காக, ரிஷாட் பதியுதீன் படும் பாட்டைப் பார்த்துவிட்டு, இவர்கள் ராஜபக்‌ஷர்களுக்கு எதிராகப் பெரிதாக வாய் திறப்பார்களா என்பது சந்தேகமே.

தாமே முன்நின்று, 20 ஆவது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கிய அதிகாரத்தைப் பற்றி அவர்களுக்குத் தெரியும். எனவே இந்த ஆட்டம் சில நாள்களுக்குத்  தான்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X