2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

நல்லிணக்கத்துக்கான சம்பந்தனின் இருமுனைப் போராட்டம்

Thipaan   / 2015 டிசெம்பர் 15 , பி.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் சில காலமாக நிலவி வரும் கருத்து முரண்பாடுகள், சில வெளிநாடுகளின், குறிப்பாக இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.

மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த 10ஆம் திகதி வட மாகாணத்துக்குச் சென்ற இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா, இந்த விடயத்தைப் பற்றி வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுடன் கலந்துரையாடி இருக்கிறார்.

 அந்த அளவுக்கு அது இந்தியாவுக்கு முக்கியமாக இருக்கிறது. இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான சிறந்ததோர் நிலைமை உருவாகியிருக்கும் இந்தத் தருணத்தில், பிரதான தமிழ் அரசியல் சக்தியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கும் பிணக்குகளைப் பாவித்து, தமிழர்களுக்கு உரிமை வழங்குவதை பெரும்பான்மைச் சமூகம் மறுக்கலாம் என உயர்ஸ்தானிகர் -அந்த சந்திப்பின் போது எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

பெரும்பான்மைச் சமூகம் என அவர் இங்கு குறிப்பிட்டாலும் அரசாங்கத்தையே அவர் இதன் மூலம் குறிப்பிடுகிறார் என்பது புலனாகிறது. ஓர் இராஜதந்திரி என்ற முறையில், அரசாங்கம் என்ற சொல்லை அவர் பாவிப்பது முறையல்ல. எனவே, தான் அவர் பல்வேறுபட்டவர்கள் இருக்கும் பெரும்பான்மைச் சமூகம் என்ற பதத்தைப் பாவித்திருக்கிறார்.

அதனையடுத்து, கூட்டமைப்பின் தலைமையோடு இணக்கப்பாட்டுடன் செயற்படுமாறு உயர்ஸ்தானிகர், முதலமைச்சருக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறார். கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் இருப்பதை விக்னேஸ்வரனும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

தமிழ் மக்களின் பிரச்சினை விடயத்தில், கூட்டமைப்புக்குள் இருக்கும், யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்ட தலைவர்களும் கொழும்பைத் தளமாகக் கொண்ட தலைவர்களும் வித்தியாசமான அணுகுமுறைகளைக் கொண்டிருப்பதாக அவர் கூறியிருக்கிறார். யாழ்பாணத்தைத் தளமாகக் கொண்ட தாம் பிரச்சினையைப் பார்ப்பதை விட வித்தியாசமாக, கொழும்பைத் தளமாகக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பார்ப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

இங்கு விக்னேஸ்வரனும் இராஜதந்திர முறையில் சில கருத்துக்களைச் சூட்சுமமாக முன் வைத்திருக்கிறார். கூட்டமைப்புக்குள் இருக்கும் முரண்பாட்டின் போது சுமந்திரனும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கவில்லை. ஆனால், சம்பந்தரை இந்த விடயத்தில் முதலமைச்சர் சம்பந்தப்படுத்திக் கொள்ளவில்லை. அதனை விடுத்து சுமந்திரனின் பெயரைக் குறிப்பிட்டு இருக்கிறார்.

கூட்டமைப்பின் தலைமைக்கும் தற்போதைய அரசாங்கத்துக்கும் இடையில், குறிப்பிடத்தக்க மோதல் எதுவும் தற்போது இல்லை. எனவே, சம்பந்தன் சில விடங்களில் அரசாங்கத்தைக் காரசாரமாக விமர்சிக்காமல் பொறுமையோடு செயற்படுகிறார்.

குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையின் போது, கூட்மைப்புக்குள்ளேயே ஏனைய சில தமிழ் அரசியல்வாதிகள் அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடும் போது, சம்பந்தனோ, சுமந்திரனோ தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவோ அவ்வாறு அரசாங்கத்தோடு மோதலுக்குச் செல்லவில்லை. தமிழ் அரசியலில் மரபாக இருந்து வரும் முரண்பாட்டு அணுகுமுறைiயிலிருந்து விடுபட சம்பந்தன் தற்போது முயற்சி செய்கிறார் போல் தெரிகிறது.

 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் புதிய அரசாங்கம், மஹிந்த ராஜபக்ஷ வின் அரசாங்கத்தைப் போல், சிறுபான்மை மக்கள் விடயத்தில் கடும் போக்கைக் கையாளாததால் இந்த அரசாங்கத்துடன் ஒத்துழைத்து, தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீரத்துக் கொள்ளலாம் என அவர் நினைக்கிறார் போலும்.

 அதேவேளை, கடந்த ஜனாதிபதித் தேர்தலை அடுத்து, ஜனாதிபதியுடனும் பிரதமருடனும், கூட்டமைப்பு உருவாக்கிக் கொண்டுள்ள சுமுக உறவும் சமபந்தனின் இந்த சிநேகபூர்வ அணுகுமுறைக்குக் காரணமாக இருக்கலாம். இந்த நிலையில் தான், நாடாளுமன்றத்தில் 2016ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பை அடுத்து இடம்பெற்ற வாக்கெடுப்பின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கத்துடன் சேர்ந்து வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறது.

 தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் தமிழ் மக்கள் உணர்ச்சி வசப்பட்டிருக்கும் நிலையில், குறிப்பாக அந்தப் பிரச்சினை காரணமாக கடந்த நவம்பர் 26ஆம் திகதி, கொக்குவில் இந்துக் கல்லூரியின் மாணவன் செந்தூரன் தற்கொலை செய்து கொண்டுள்ள பின்னணியில், நாட்டின் பிரதான தமிழ்க் கூட்டணி- அரசாங்கத்தின் இருப்பைத் தீர்மானிக்கும் வரவு- செலவுத் திட்டத்தை ஆதரிப்பதாக இருந்தால், அதற்கு ஒரு வகையில் அசாதாரணத் துணிவு இருக்க வேண்டும்.

வரவு- செலவுத் திட்டத்தை ஆதரிக்கும் முடிவோடு, கூட்டமைப்பின் தலைமை இரு முனைகளில் தமக்கு எதிரான போராட்டங்களுக்கு புத்துயிர் கொடுத்துள்ளது. அதில் ஒரு போராட்டம், நாடாளுமன்ற மட்டத்திலும் மற்றையது கூட்டமைப்புக்குள்ளேயும் நடைபெற்று வருகிறது.

சம்பந்தன், எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகரால் ஏற்றுக் கொள்ளப்பட்டதை தொடர்ந்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மஹிந்த ராஜபக்ஷவின் அணி, ஏற்கெனவே அவரைத் தமது பிரதான எதிரிகளில் ஒருவராக கருதுகிறது. தமது அணிக்கே எதிர்க் கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என அக் குழுவினர் கூறுகின்றனர்.

 போர் நடைபெற்ற காலத்தில் சிங்களவர்களே எதிர்க் கட்சித் தலைவர் பதவியை வகித்தனர். ஆனால், அவர்களில் எந்தவொரு எதிர்க் கட்சித் தலைவரும், அவர்களது காலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததில்லை. கூட்டமைப்பானது, இம்முறை வரவு- செலவுத் திட்டத்தை ஆதரிக்க முடிவு செய்ததையடுத்து, நாடாளுமன்றத்தில் மஹிந்தவின் அணி கொதித்தெழுந்தது. எதிர்க் கட்சித் தலைமைப் பதவிக்கான தமது கோரிக்கையையும் அந்த அணி புதுப்பித்துள்ளது. மறுபுறம், இந்த முடிவானது தமிழ் அரசியல் களத்தில் கூட்டமைப்புக்குள்ளேயும் வெளியேயும் கூட்டமைப்பின் தலைமைக்கு எதிரான சக்திகளுக்குத் தீனி போட்டுள்ளது.

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) கூட்டமைப்புத் தலைமையின் இந்த முடிவுக்கு இணங்கவில்லை. அதன் இரண்டு உறுப்பினர்களும் வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பை அடுத்த நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. பின்னர், இதற்கான காரணத்தை விளக்கிய ஈ.பி.ஆர். ஏல்.எப்.இன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையையும் குறிப்பிட்டு இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு எதனையுமே செய்யவில்லை எனக் கூறியிருந்தார்.

நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவராகவிருக்கும் செல்வம் அடைக்கலநாதனின் தலைமையில் இயங்கும் கூட்டமைப்பின் மற்றொரு கட்சியான டெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கமும் வரவு- செலவுத் திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு அல்லது குழு நிலை விவாதத்தை அடுத்து நாடாளுமன்றத்தில் நடைபெறும் இறுதி வாக்கெப்பின் போது ஆதரவாக வாக்களிக்க நிபந்தனை விதித்திருக்கிறது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதே அந்த நிபந்தனையாகும். கூட்டமைப்பின் இந்த இரண்டு கட்சிகளும் குழு நிலை விவாதத்தை அடுத்து அரசாங்கத்துக்கு எதிராகவே வாக்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இரண்டாவது வாசிப்பை அடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பின் போது, வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக மூன்றில் இரண்டுக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்ததனால், இவ்விரண்டு கட்சிகள் எதிராக வாக்களிப்பதால் எதிர்ப்பை மட்டுமே தெரிவிக்க முடியும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக தேர்தல் செயலகத்தில் பதிவு செய்வது தொடர்பான சர்ச்சையின் காரணமாக, கூட்டமைப்பின் உறுப்புக் கட்சிகளிடையே நீண்டகாலமாக ஒரு பிணக்கு நிலவி வருவது தெரிந்ததே. கூட்டமைப்பு பதிவு செய்யப்படாததன் காரணமாக, அதன் மிகப் பெரிய கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெயரிலேயே அது தொடர்ந்து தேர்தல்களில் போட்டியிடுகிறது.

தமிழரசுக் கட்சியின் செயலாளரே கூட்டமைப்பின் செயலாளராக தொடர்ந்தும் தேர்தல் ஆணையாளருடன் தொடர்பு கொண்டு வந்துள்ளார். இதனை ஏனைய கட்சிகள் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால், அந்த ஏனைய கட்சிகள், கூட்டமைப்பை விட்டு வெளியேறவும் தயாரில்லை.

ஏனெனில், அக் கட்சிகளின் சில தலைவர்கள் தனிப்பட்ட ரீதியில் ஜனரஞ்சகமாக இருந்த போதிலும் அக் கட்சிகள் பாரியளவில் தமிழ் வாக்குகளை ஈர்க்கக்கூடியவையா என்ற சந்தேகம் அக் கட்சிகளின் தலைவர்களிடையே இருக்கிறது போலும். 2004ஆம் ஆண்டு கூட்டமைப்பின் கீழ் போட்டியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஒரு இலட்சத்துக்கு மேலாக வாக்குகளைப் பெற்ற போதிலும் 2010ஆம் ஆண்டு அவரது கட்சி தனித்துப் போட்டியிட்டு படுதோல்வியடைந்தது.

 தெற்கிலும் இந்த நிலைமை சிலவேளைகளில் காணப்பட்டது. 2004ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை உருவாக்கி, அதன் கீழ் போட்டியிட்ட மக்கள் விடுதலை முன்னணி, 41 ஆசனங்களை வென்றது. சகல மாவட்டங்களிலும் அதன் உறுப்பினர்களே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களையும் விஞ்சி விருப்பு வாக்குகளைப் பெற்று முதலிடத்துக்கு வந்தனர்.

ஆனால், அவர்கள் தனித்து போட்டியிட்ட போது, மாவட்டத்துக்கு ஓர் ஆசனத்தைப் பெறுவதும் பெரும் போராட்டமாகியது. எனவே, கூட்டமைப்பைப் பதிவு செய்வது தொடர்பான பிரச்சினையை முன்னிட்டோ அல்லது வேறு காரணங்களினாலோ, தாமும் கூட்டமைப்பை விட்டு வெளியேறினால், தமக்கும் கஜேந்திரகுமாருக்கு நடந்த கதியே நடக்கும் என கூட்டமைப்பிலுள்ள சிறிய கட்சிகளின் தலைவர்கள் அச்சப்படுகிறார்கள். சகல கட்சிகளும் வீராப்புப் பேசிய போதிலும் உண்மை இது தான்.

 கூட்டமைப்பின் உறுப்புக் கட்சிகளிடையிலான இந்தப் பிணக்கு இவ்வாறு வளரும் நிலையில் கூட்டமைப்பின் தலைமைக்கும் வட மாகாண முதலமைச்சருக்கும் இடையிலான பிணக்கு நிச்சயமாக சம்பந்தனுக்கு பெரும் தலையிடியாகவே இருக்கும். முதலமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என சுமந்திரன் பகிரங்கமாகவே கருத்து வெளியிட்டு இருந்தமை பிரச்சினையின் பாரதூரத்தன்மையை வெளி உலகுக்கு எடுத்துக் காட்டியது.

 கடந்த தேர்தலுக்கு முன்னர் தேர்தலுக்காக நிதி திரட்ட கனடாவுக்கு செல்ல வருமாறு கூட்டமைப்பின் தலைமை விடுத்த அழைப்பை முழங்கால் வலியை காரணங்காட்டி விக்னேஸ்வரன் நிராகரித்தமையை சுமந்திரன் அதற்கு ஒரு காரணமாக எடுத்துக் கூறியிருந்தார். போதாக்குறைக்கு, கூட்டமைப்புக்குள்ளேயும் வெளியிலும் உள்ள சிலர், அந்தப் பிணக்கை பாவித்து அரசியல் இலாபமடையும் நோக்கில் அந்த நெருப்பில் எண்ணெய் வார்க்கிறார்கள்.

 தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீரசிங்கம் ஆனந்தசங்கரி, விக்னேஸ்வரனின் நிலைப்பாடுகளையும் பாராட்டி, தமது கட்சியின் தலைமையை ஏற்க வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தமை இதற்கு சிறந்த உதாரணமாகும். விக்னேஸ்வரன தமது கட்சித் தலைமையை ஏற்பதாக இருந்தால், அவர் தமக்கு வேண்டிய ஒருவரை கட்சியின் செயலாளராகவும் நியமித்துக் கொள்ளலாம் எனவும் ஆனந்தசங்கரி குறிப்பிட்டிருந்தார்.

இது விக்னேஸ்வரனைத் தூண்டிவிட்டு கூட்டமைப்பின் உள் முரண்பாட்டை தீவிரமடையச் செய்வதற்கு எடுத்த ஒரு முயற்சியாகக் கருதலாம். விக்னேஸ்வரன் அந்த அழைப்பை ஏற்காவிட்டாலும் பகிரங்கமாக அதனை நிராகரிக்கவும் இல்லை. அதுவும் அவர் எந்த அளவுக்குக் கூட்டமைப்புடன் இருக்கிறார் என்பதற்குச் சான்றாகும். விக்னேஸ்வரன் கூட்டமைப்பின் தலைவராக வந்தால், தாமும் மீண்டும் கூட்டமைப்பில் சேர்வதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கூறியிருந்தார்.

அத்தோடு, கூட்டமைப்பின் உறுப்புக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் - கடந்த வாரம் கூட்மைப்பின் தலைமையை விமர்சித்து முதலமைச்சரைப் பாராட்டியிருந்தார்.

முதலமைச்சர், வட மாகாண சபையில் இனப் படுகொலை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றிய போதும் போர்க் காலத்தில் படையினர் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களை விசாரிக்க சர்வதேச விசாரணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் எனக் கூறிய போதும் கூட்டமைப்பின் தலைமை அதற்கு ஆதரவு வழங்கவில்லை என பிரேமச்சந்திரன் கூறியிருந்தார்.

 எனவே, இந்த எல்லோருக்கும் பதிலளிக்கும் வகையில், அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற கூட்டமைப்பின் கூட்டம் ஒன்றின் போது, 'விக்னேஸ்வரன் விரும்பினால் அவரும் கூட்டமைப்பின் தலைவராகலாம். ஆனால், அதனை கட்சியும் மக்களும் தான் தீர்மானிக்க வேண்டும்' என சம்பந்தன் கூறியிருந்தார். இது, அவர் தமது விமர்சகர்களுக்கு விடுத்த பலத்த சவாலாகும். அதாவது, மக்கள் ஆதரவைப் பெற்று, முடியுமானால் தலைமை பதவியை கைப்பற்றிக் காட்டட்டும் என்பதே அவரது சவாலாகும்.

 அந்தக் கூட்டத்தின் போது, தாம் ஏன் அரசாங்கத்துடன் கடும்போக்கை கையாளவில்லை என்பதையும் அவர் விளக்கினார். மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தையும் தற்போதைய அரசாங்கத்தையும் ஒப்பிட்டுக் காட்டிய சம்பந்தன், இந்த அரசாங்கம் அடுத்த வருடம் புதிய அரசியலமைப்பொன்றை நிறைவேற்ற உத்தேசித்துள்ளதால், இந்தத் தருணத்தில் கூட்டமைப்பு பக்குவமாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் விளக்கினார். சம்பந்தன் நல்லிணக்கத்தை எதிர்பார்க்கிறார்.

ஆனால், அதற்காக வடக்கிலும் தெற்கிலும் என இரு முனைகளில் தீவிரவாதிகளுடன் போராடி வேண்டியிருக்கிறது. அத்தோடு, அவர் அரசாங்கத்தின் மீது பெரும் நம்பிக்கையை வைத்தே இந்த இருமுனைப் போராட்டத்தை நடத்தி வருகிறார் என்பதும் தெளிவாகிறது. அரசாங்கம் தம்மைக் கைவிட்டால் தாம் பெரும் பிரச்சினையை எதிர்நோக்க நேரிடும் என்பதையும் அது தீவிரவாதிகளின் கையை ஓங்கச் செய்யும் என்பதையும் புரிந்து கொண்டு தான், அவர் அந்த 'ரிஸ்கை' எடுக்கிறாரா என்பது தெளிவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X