2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நிதானம் இழக்கும் அரசியல்

Johnsan Bastiampillai   / 2022 ஏப்ரல் 05 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

லக்ஸ்மன்

மக்கள் கிளர்ச்சி ஒன்றே  தீர்வுக்கான வழி  என்ற நிலை தோன்றியிருப்பதாகவே உணரமுடிகிறது. ஆனால் ஆட்சி மாற்றம் நிச்சயமான தீர்வலல்ல என்பது மாத்திரம் உண்மை. இதனை மக்கள் உணரத் தலைப்படவேண்டும். இப்போது நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையானது, நிதானமும் அதனுடன் இணைந்த தீர்மானமுமேயாகும். 

போராட்டங்கள் வெடிக்கின்றன. அவற்றினை அடக்குவதற்கான வழிகளும் கண்டுபிடிக்கப்படுகின்றன. இந்த வழிமுறைகள் புதியவையல்ல. தமிழர்களின் உணர்வுகளையும் போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் அடக்குவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட முறைகளே அவை.

அவை இப்போது சிங்கள முஸ்லிம் மக்களையும் அடையாளப்படுத்துகின்றன. அதனால்தான்,  மக்கள் கிளர்ச்சியை அடிப்படைவாதத்தின் பெயரை கொண்டு அடக்க அரசாங்கம் முயற்சிப்பதாக கருத்துகள் வெளிவரத் தொடங்குகின்றன.  நேற்று முன்தினம் (31)  வியாழக்கிழமை மிரிகானையில்  இடம்பெற்ற போராட்டத்தின் பின்னால்,  அடிப்படைவாதிகள் இருப்பதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்தமை இதற்கு நல்ல உதாரணமாகும்.

தொழில்நுட்பங்கள் வளரும் போதும் மேம்படும் போதும் உண்மையிலேயே நாம் சோம்பேறிகளாக மாற்றப்பட்டுவிடுகிறோம். ஊதாரணமாக மின்சாரம்; மின்சாரம் இல்லாது நாம் வாழ்ந்திருக்கிறோம். ஆனால், இப்போது முடியவில்லை. உணவு விடுதிகள் இன்றி நாம் சமைத்தே அனைத்து உணவுகளையும் உண்டிருக்கிறோம். தொலைபேசி இல்லாத உலகம் இருந்திருக்கிறது. இணையவசதி இல்லாதிருந்திருக்கிறோம். சமையல் எரிவாயு இல்லாமல் விறகு அடுப்பை மாத்திரம் நம்பி வாழ்க்கை நடத்தியிருக்கிறோம். இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகமுடியும்.

ஆனால், எரிபொருள், மின்சாரம், கேஸ், உணவு பொருட்கள் என அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை பொறுக்கமுடியாமல் மக்கள் அனைவரும் வீதிக்கு இறங்கும் நிலை வந்துவிட்டது. இது அடிப்படைப் பிரச்சினையாக இருக்கிறது. இதனைத் தீர்த்து வைக்க வேண்டியது அரசாங்கமே. ஆனால், மக்களும் சிலவற்றை அனுசரித்தே தீரவேண்டும். இவற்றிற்கான தீர்வு எதனையும் முன்வைப்பதற்கு முடியாது என்றால் அரசாங்கம் எதற்கு, ஜனாதிபதி ஏன் என்பதே மக்களுடைய கேள்வியாக இருக்கிறது.

இந்தக் கேள்விக்கான பதில் நியாயமானதாகவும் நிதானமானதாகும் இருந்தால் போதுமே தவிர வேறு ஒன்றுமில்லை. விலை அதிகரித்திருக்கிறது. என்றாலும் பொருட்கள் இல்லை என்றால் அதன் நியாயம் என்ன என்பதே பிரச்சினையாகும். 

இதன்மூலமாக மக்களிடம் ஏற்பட்டிருக்கின்ற அச்சம் அவர்களை வீதிக்கு இறங்கச் செய்துவிட்டது. அதிகமான பொருட்களை சேமிக்கச் செய்துவிட்டது, இன்று இருக்கும் எந்தப்பொருளுக்கு நாளை விலை அதிகரிக்கும் என்று தெரியாமலும் வேறு வழியில்லாமலும் பெரும்பாலான மக்கள் தமக்குத் தேவையான பொருட்களை சேமிக்க முயலுகின்றனர். விலை அதிகரித்தாலும் பொருட்கள் தட்டுப்பாடின்றிக் கிடைக்குமானால் அது ஒரு தீர்வாக இருக்கலாம். ஆனால் மக்களுடைய போராட்டங்களுக்கு தேசியப் பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி வேறு பெயர்கள் கொடுக்க முயல்வது நிதானமின்மையின் ஒரு வடிவமே.

கடந்த இரண்டு வருடங்களில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி, அரசாங்கம் கொண்டிருந்த இறுமாப்பு இப்போது வீழ்ச்சியைக் கண்டிருக்கிறது. அந்தவகையில் கடந்த மாதம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் முக்கியமானதொன்றாகப் பார்க்கப்படுகிறது. தான் எதையும் வெல்வேன். எதற்கும் யாருடனும் கலந்துரையாடமாட்டேன். இராணுவம் ஒன்றே போதும் என்றிருந்த நிலைமைக்கு மாற்றம் ஏற்பட்டு கடந்த மாதத்திலேயே அவசர அவசரமாக சர்வகட்சி மாநாட்டை பலருடைய பகிஸ்கரிப்புகளுக்கு மத்தியில் நடத்தினார்.

மற்றையது தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரைச் சந்தித்தார். இந்தச் சந்திப்புகள் அவருடைய இயலாமையை வெளிப்படுத்திவிட்டன. இருந்தாலும் இவை இரண்டும் நடத்தப்பட்டேஆகவேண்டிய நிலை தோன்றியிருக்கிறது என்பது மாத்திரம் ஜதார்த்தம். ஆனாலும் மக்களை ஆசுவாசப்படுத்துவதற்கு எந்தவழியும் இன்றி அரசாங்கம் தவித்துக் கொண்டிருக்கிறது.

இன்றைய அன்றாடப் பிரச்சினைகளும் அவற்றினை எதிர்கொள்ளலும் அரசாங்கத்தினை அல்லது நாட்டை நடத்துதலும் என்ற விடயம்  பிரச்சினையாக,  இலங்கை அரசாங்கத்தினைக் கையில் வைத்துக் கொண்டிருக்கின்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு முன்னே விசுவரூபம் எடுத்து நின்று கொண்டிருக்கிறது.

எந்த அரசியல் கட்சியாலும் இன்னும் 10 வருடங்களுக்கேனும்  நாட்டின் ஆட்சியை அசைக்கமுடியாது. இந்த நாட்டை கொண்டு நடத்தக்கூடிய சக்தி, மஹிந்த ராஜபக்‌ஷ குடும்பத்திற்கே உள்ளது என்றுதான் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளர்கள் நினைத்துக் கொண்டிருக்கையிலேயே நாடு சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது.

இந்த இடியப்பச் சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வை முன்வைக்க பலரும் முயன்றுகொண்டிருக்கிறார்கள். அந்த முயற்சிகள் பயனற்றே போகின்றன.
இருப்பினும் நம்பிக்கையும் நிதானமும் அரசியலுக்கு மாத்திரமல்ல அனைத்துக்குமே முக்கியமானது.  இதில் மக்களின் பங்கும் இருக்கிறது. இந்த இடத்தில்தான், கலந்துரையாடவேண்டிய தருணங்கள் பல இலங்கையின் வரலாற்றில் உருவாகியிருந்தாலும் அந்தத் தருணங்களை யாரெல்லாம் திறமையாக கையாண்டிருக்கிறார்கள் என்பதுதான் கேள்வி.

அன்றாட வாழ்வாதாரம் முதல் கல்வி வரை நாட்டின் அனைத்துத் துறைகளிலும் மக்களுக்குப் பிரச்சினைகள் உருவாகிவிட்டன. பொதுப்பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதா என்பதுதான் இலங்கை அரசாங்கத்தின் நிலை. அதற்குள் அரசியலும் பொறாமையும் இருப்பதால் தீர்வைக் காண்பதில் பிரச்சினை ஏற்படுகிறது.

இந்த இடத்தில்தான் சர்வகட்சி மாநாட்டைக் கூட்டி எழுந்துவரும் எதிர்ப்பலையை சற்றுச் சமாளிக்கலாம் என்று ஜனாதிபதி சிந்தித்திருக்கிறார். அது நல்ல முடிவுதான். ஆனால் அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் நிறைவேறுமா, அந்த முடிவுகளால் உருவாகும் சூழல் மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்துமா என்பது தெரியாததே.

இது ஒருபக்கமிருக்க, நீண்டகால பிரச்சினையாக இருந்து கொண்டிருக்கின்ற நாட்டின் எதிர்காலத்துக்கு முக்கியமான துறையான அரசியல் பக்கம் ஜனாதிபதி கவனத்தினைச் செலுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

அதன் படிநிலைதான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருடனான சந்திப்பு. அது  ஆரோக்கியமான முடிவுதான் இருந்தாலும் இதுவும் ஓர் ஏமாற்று வேலைதானா என்று சந்தேகம் கொள்ளவேண்டியுமிருக்கிறது. ஆனால், ஒரு நிரந்தரமான தீர்வை தமிழர்களுடைய நீண்டகாலப் பிரச்சினைக்கு ஏற்படுத்தாதவரையில் இலங்கையில் அரசியல் குழப்பகரமானதாகவே இருக்கும்.

நாட்டிலுள்ள அனைத்து இனங்களுக்கும் முன்னுரிமையளிக்கின்ற மாற்றங்கள் இல்லாத அனைத்து மக்களையும் கௌரவமானவர்களாகக் கொள்கின்ற சிறந்ததோர் அரசியலமைப்பு, மக்களைச் சிரமப்படுத்தாத சிறந்த பொருளாதாரக் கொள்கை, சிறப்பான வெளியுறவுக் கொள்கை, கல்விக் கொள்கை  என எதையும் வைத்திருக்காத நாடாகத்தான் இலங்கை இருக்கிறது. 

ஒரு பிரச்சினையை மறைப்பதற்கு இன்னுமொரு பிரச்சினை; அதனையும் மறைப்பதற்கு மேலும் பல என்பது மாறி, சமாளிப்புகளும் நடந்தேறுகின்றன. அதிலொன்றாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சந்திப்பு இருந்துவிடக்கூடாது. அதனை விடவும் இப்போது உருவாகியிருக்கின்ற தேசிய அரசாங்கம் என்ற சலசலப்பும் குழப்பமே.

நாட்டில் இதுவரை உருவான அரசாங்கங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்துவிடவேண்டும் என்ற இதய சுத்தியான மனதுடன் முயற்சித்த வரலாறுகள் இல்லை. காலம் கடத்தல்களே அவர்களது இலக்காகும்.

தமிழத் தேசிய கூட்டமைப்புக்கும்  ஜனாதிபதிக்கும் சந்திப்பு நடந்து முடிந்து விட்டது என்றாலும்,  எந்தவிதமான நல்லெண்ணத்தையும் கடந்த இரண்டு வருடங்களில் காட்டாத ஜனாதிபதியுடன் முன்னெச்சரிக்கையும் முன்யோசனையும் ஜனாதிபதியைக் கையாள்வது ஆபத்து என்ற விடயம் முன்னிற்கிறது.

எது எவ்வாறிருந்தாலும், நாட்டில் இப்போது தலைவலி, மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற பொருளாதாரச் சுமையை, பொருள்களுக்கான தட்டுப்பாட்டை எவ்வாறு குறைப்பது, இல்லாமல் செய்வது மக்களுக்கு அன்றாட வாழ்வாதாரமம் தொடர்பில் ஏற்பட்டிருக்கின்ற அச்சத்தினை நீக்குவது என்பவைகள்தான். இதற்கான அரசியலைச் செய்வதற்கு இந்த அரசாங்கத்தினால் முடியுமா அல்லது புதிய அரசாங்கமான என்பது கேள்விதான். புதிய அரசாங்கம் என்றால், அதனைத் தேர்தல் மூலமாக நடத்துவது அடிமுட்டாள் தனமாக இருக்கும் என்றவகையில் நிதானமான கைமாற்றம், இசைந்த, அனுசரித்த, இணைந்த செயற்பாடு ஒன்றே சாத்தியமான தீர்வு. எவ்வாறானாலும் குழப்பங்கள் இல்லாத அமைதியான மகிழ்ச்சியுடனான வாழ்க்கையே மக்களின் எதிர்பார்ப்பு.

இந்த இடத்தில், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் கருத்து கவனத்திலெடுக்கப்பட வேண்டும். “இன்று அரசாங்கம் தோல்வியைடந்துள்ளது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. நாட்டை பின்னடை யச் செய்துள்ளனர். அதை உடனடியாக நிறுத்த வேண்டும். அதற்கு இந்த நாட்டில் உள்ள அனைத்து அரசியல் சக்திகளும் ஒருமித்த இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும். ஒவ்வோர் அரசியல் கட்சியும் தனித்தனியாக அரசியல் செய்வது எமக்குப் பிரச்சினை அல்ல. ஆனால், நாடு விழுந்துள்ள இந்தப் படுகுழியிலிருந்து நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமானால் அனைத்து அரசியல் கட்சிகளும் தலைவர்களும் ஒருமித்த பொது உடன்பாட்டுடன் செயற்பட வேண்டும். இன்று நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி தீர்க்க முடியாத பிரச்சினையல்ல. ஒரு கட்டத்தில் இந்தியாவும் இதே போன்ற நெருக்கடியை சந்தித்தது. ஆனால், இந்தியா அதை மிகத் துல்லியமான கூட்டு முயற்சியால் தீர்த்து வைத்தது. நாம் அனைவரும் அத்தகைய அணுகுமுறையை எடுக்க வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .