Thipaan / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகலிங்கம் கோபிகிருஷ்ணா
சமூகங்களில் பிரபலங்களின் பொறுப்பு என்ன, கடமை என்ன என்பது தொடர்பான விவாதங்கள், எப்போதுமே உருவாகி வந்திருக்கின்றன. ஆனால், பேரழிவுகள் அல்லது அதைப் போன்ற சம்பவங்களின்போது, இது தொடர்பான விவாதங்கள் அதிகம் எழுவதுண்டு.
அதேபோலவே, சென்னையில் ஏற்பட்ட கடும் வெள்ளம், அதைத் தொடர்ந்தான குழப்ப, பதற்ற, அழிவு நிலைமைகளின்போது, இந்தியப் பிரபலங்களின் பங்களிப்புத் தொடர்பாக அதிகம் கவனஞ்செலுத்தப்பட்டது.
அதைப் போன்றே, அண்மையில் கசிந்த அனிருத் - சிம்பு கூட்டணியின் பாடலின் போதும், இதே கேள்வி எழுப்பப்பட்டது. உண்மையிலேயே, பிரபலங்களின் சமூகப் பொறுப்பும் கடமையும், எந்தளவில் தான் இருக்க வேண்டும்? அதேபோல், சமூகப் பொறுப்பென்பது, சாதாரண மனிதர்களை விடப் பிரபலங்களுக்கு அதிகமாக இருக்க வேண்டுமா?
இந்திய, இலங்கைச் சூழலைப் பொறுத்தவரை, திரைப்படக் கதாநாயகர்களைப் பிரபலங்களாக மாத்திரமன்றி, தலைவர்கள் போன்று ஏற்றுக் கொள்கின்ற நிலை இருக்கின்ற நிலையில், பிரபலங்களுக்குச் சமூகப் பொறுப்பு இருக்க வேண்டுமென்பது, எழுதப்படாத ஒரு விதிபோல் இருந்து வந்திருக்கிறது. அது, சாதாரண அறக்கட்டளைப் பணிகளிலிருந்து, அரசியலில் ஈடுபட்டு, முதலமைச்சர் ஆகுவது வரை நீண்டிருக்கிறது.
இந்த எதிர்பார்ப்புத் தான், சென்னை வெள்ளத்தைத் தொடர்ந்து, 'விஜய் 10 கோடி கொடுத்தார்', 'அஜீத் 15 கோடி கொடுத்தார்', 'அவர் இத்தனை கோடி', 'இவர் அத்தனை கோடி' என, சமூக ஊடகச் செய்திகள் பரப்பப்படக் காரணம். இச்செய்திகள் உறுதிப்படுத்தப்படாத நிலையிலும் கூட, அவற்றைத் தொடர்ந்து பகிர்ந்தமைக்கு, தங்களின் நாயகனுக்கும் சமூகப் பொறுப்பு இருக்கிறது என்பதை வெளிக்காட்டவே ஆகும்.
பொதுவாகவே, பிரபலங்கள் என்றால் வசதியானவர்களாக இருக்கும் நிலையில், அதிக வசதியுடையவர்கள், இவ்வாறான அனர்த்தங்களின்போது, அதிகமான பணப் பங்களிப்பை வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு உண்டு. நடிகர்கள் போன்றோர், மக்களின் ஆதரவில் தான் முழுமையாகக் காணப்படுகிறார்கள். மக்கள் அவர்களை நிராகரித்தால், அவர்களது எதிர்காலத் திரைப்படங்களுக்கான வெற்றிவாய்ப்பு, இல்லாது போக வாய்ப்புகளுண்டு.
அதனால் தான், மக்கள் தொடர்புப் பணிகள் (Public relations) என்ற பெயரில், அறக்கட்டளைப் பணிகளில் ஈடுபடுவது வழக்கம். இதில் சிலருக்கு, சமூகத்துக்குப் பங்களிப்பதற்கான ஆர்வம் இருக்கக்கூடும், ஆனால், எல்லாவற்றின் பின்னாலும், மக்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டுமென்ற எண்ணமுண்டு. ஆனால், அதைக் கட்டாயமான கடமையாக மாற்ற முடியுமா என்றதொரு கேள்வி உண்டு.
ஏனென்றால், சென்னை வெள்ளத்தில் நடிகர்கள் ஒன்றும் செய்யவில்லை, அவர்கள் போலிக் கதாநாயகர்கள் என்று சத்தமிட்ட பலரும், அவ்வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டதில்லை. நடிகர்கள் கோடிகளில் கொட்ட வேண்டுமென்று எதிர்பார்த்தவர்களில் பலர், ஆயிரங்களில் கூடத் தங்களது பங்களிப்பை வழங்கியிருக்கவில்லை.
ஆக, கோடிகளில் வாழும் நடிகர்கள், கோடிகளை வழங்க வேண்டுமென்று எதிர்பார்க்கும் மக்கள், தங்களது குறைந்தபட்ச பங்களிப்பையாவது வழங்கியிருக்க வேண்டாமா?
எதற்காக, இவ்வாறான எதிர்பார்ப்புகளை நடிகர்களிடம் மாத்திரம் எதிர்பார்க்கின்றோம் என்பது, நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வியில்லையா?
சமூக ஊடகத் தளங்களில் தீவிரமான கருத்துக்களைத் தெரிவிப்பதையும் 'லைக்' போடுவதையும் கூட்டம் சேர்ப்பதையும் மாத்திரம் சமூகப் பொறுப்பாக மாற்றிக் கொண்டு வருகிறோமோ என்றொரு கேள்வி இருக்கின்றதில்லையா?
நாம் விரும்புகிறோமோ, இல்லையோ, நடிகர்களில் பலர் கொண்டிருக்கும் பணம், அவர்களாகக் கஷ்டப்பட்டு உழைத்தது தான். நாம் படம் பார்த்துத் தான் அவர்கள் உழைத்தார்கள் என்றால், அவர்களுக்கு நாம், தானமாகக் கொடுத்திருக்கவில்லை. எமக்கான களிப்பாக, திரைப்படங்களைப் பார்வையிட்ட கூலிக்காகவே அவர்களுக்குப் பணம் வழங்கியிருக்கிறோம். ஆகவே, அவர்களை மாத்திரம் ஏதோ சமூகத்துக் கடன் பட்டவர்கள் என்ற ரீதியில் நோக்குவது, சமூகம் நோக்கி எமக்கிருக்கின்ற பொறுப்புக்களைத் தட்டிக்கழிப்பது போன்ற சூழலை ஏற்படுத்துகிறது.
இது இவ்வாறிருக்க, தமிழகத்தில் சர்ச்சைகளுக்குக் குறைவில்லாத நடிகரான சிம்புவும் இளம் இசையமைப்பாளர் அனிருத்தும் இணைந்து இசையமைத்து, உத்தியோகபூர்வமாக வெளியிடப்படாமல் கசிந்திருக்கின்ற 'பீப் பாடல்', சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. துர்வார்த்தையாக தற்போது மாறியிருக்கின்ற பெண்களின் பாலுறுப்பின் தூய தமிழ்ச் சொல்லை வைத்து, சிம்புவால் பாடப்பட்டிருக்கின்ற இந்தப் பாடல், ஓரளவு எதிர்ப்பைச் சம்பாதித்திருக்கிறது.
'பெண்களை இழிவுபடுத்துகிறது', 'மோசமான வார்த்தைப் பிரயோகங்கள் உள்ளன', 'இதை உங்கள் குடும்பத்தினருடன் இருந்து கேட்க முடியுமா?', 'சிறுவர்கள் இதைக் கேட்டால் என்ன நடக்கும்?' போன்றன, இப்பாடலுக்கெதிராக வைக்கப்படும் விமர்சனங்கள். அத்தோடு, பிரபலங்களான சிம்புவுக்கும் அனிருத்துக்கும், சமூகப் பொறுப்பென்பது இருந்திருக்க வேண்டும், அதைவிடுத்து, இவ்வாறான பாடல்களைத் தருவது, அவர்களை வெளிப்படுத்துவதாக உள்ளது என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.
அந்தப் பாடலைக் கேட்டவர்களுக்கு, மேற்கூறிய விமர்சனங்கள் எவ்வளவுக்குச் சரியானவை என்பது விளங்கும். மட்டரகமான எண்ணத்துடன், குறிப்பிட்டதொரு இரசனை வட்டத்தை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்ற இந்தப் பாடல், இன்னும் அதிகமான விமர்சனங்களைச் சந்திக்க வேண்டும். அப்போது தான், இவ்வாறான 'முயற்சிகள்', எதிர்காலத்திலும் எடுக்கப்படமாட்டாது.
ஆனால், இந்தப் பாடலைத் தடை செய்ய வேண்டிய தேவையோ அல்லது காரணங்களோ இருப்பதாகத் தெரியவில்லை. இப்பாடல், இணையத்திலேயே வெளியாகியிருக்கிறது, இணையத்தில் வெளியாகும் பாடலைத் தடை செய்வதென்பது பிரயோசனம் தராது என்பது ஒருபுறமிருக்க, நாம் விரும்பியோ, விரும்பாமலோ, கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராகச் செயற்படுகிறோம். ஆகவே, பாடலுக்கான எதிர்ப்பு ஒருபுறமிருக்க, அதைத் தடை செய்வதென்பது, பொருத்தமற்றது.
ஆனால், இந்தப் பாடலுக்காக எழுப்பப்பட்டிருக்கும் எதிர்ப்புத் தான், சாதாரண மக்களின் சமூகப் பொறுப்புப் பற்றிய கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது.
இதுவரை காலமும், தமிழ் சினிவாவைப் பொறுத்தவரை, விரல்விட்டு எண்ணக்கூடிய சில திரைப்படங்களைத் தவிர்த்து, ஏனைய எல்லாத் திரைப்படங்களிலும், பெண்களைத் தரம்தாழ்த்தியே அல்லது போகப் பொருளாகப் பயன்படுத்தியே காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதை, நாமும் வரவேற்றுத் தான் வந்திருக்கிறோம்.
'மொத்தத்தில, பொம்பிளை, பொம்பிளையாத் தான் இருக்கணும்', 'இந்தக் காலப் பொம்பிளைங்களுக்கு சமைக்கவெல்லாம் தெரியாது சார்', 'சப்பை ‡பிகர்' தொடக்கம், இன்னும் கேவலமான வார்த்தைப் பிரயோகங்களுக்கெல்லாம் பலமாகக் கைதட்டி, அவற்றுக்கு அங்கிகாரமளித்திருக்கிறோம். 'இந்தப் பொண்ணுங்களே இப்படித் தான் தெரிஞ்சு போச்சுடா', 'அடிடா அவள, உதடா அவள', 'அடியே அடியே, இவளே' உட்பட, அண்மையில் வெளிவந்த காதல் தோல்விப் பாடல்களில் எல்லாமே, பெண்களை மாத்திரம் குற்றம் சொல்வதாக அமைந்தபோதும், கதையின் முக்கிய கருவாக காதலைக் கொண்டு வெளிவந்த திரைப்படங்களில் 95 சதவீதத்துக்கும் மேற்பட்டவற்றில், அக்காதல் முறிவுக்குப் பெண்களே காரணம் எனக் காட்டப்பட்டபோதும், அவற்றை ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.
ஆக, 'பீப் பாடல்' போன்ற அபத்தங்கள் வெளியாகுவதற்கான களத்தையும் சூழலையும் உருவாக்கிய பொறுப்பு, தமிழ் சினிமா இரசிகர்களுக்கே உண்டு.
தூய தமிழ்ச் சொல்லொன்று, துர்வார்த்தையாக அல்லது வசைச் சொல்லாக மாற்றப்பட்டபோது, அதற்கான எதிர்ப்பைக் கொஞ்சம் கூட வெளிப்படுத்தாமல், அதையும் எமது நாளாந்த வாழ்க்கையில் பயன்படுத்தி வந்திருக்கிறோம். ஒருவனை அவமானப்படுத்த வேண்டுமானால், அவனது தாயின் அல்லது சகோதரியின் அல்லது மனைவியின் பாலியல் ஒழுக்கத்தைக் கேள்விக்குட்படுத்தும் போதும், இந்தளவுக்கான எதிர்ப்புகளையோ அல்லது கோபத்தையோ வெளிப்படுத்தியிருக்கிறோமா? இல்லை, மாறாக, தவறான அந்தச் செயலில், எம்மில் பெரும்பாலானவர்களும் ஈடுபட்டிருக்கிறோம்.
சாதாரண மக்களான நாம், சமூகப் பொறுப்புடன் செயற்பட்டு, மேற்கூறப்பட்ட ஆபாசங்களையும் அபத்தங்களையும் நிராகரித்திருந்தால், 'பீப் பாடல்' போன்ற மோசமான விளைவுகள் ஏற்பட்டிருக்காது. ஆனால் நாமோ, பிரபலங்களுடன் மாத்திரம் சமூகப் பொறுப்பை எதிர்பார்த்துவிட்டு, சமூக அபத்தங்களுடன் எம்மை, சிலவேளைகளில் எம்மையறியாமலேயே, இணைத்துக் கொண்டமையால், 'பீப் பாடல்' போன்ற அபத்தங்களும், சென்னை வெள்ளம் போன்ற அனர்த்தங்களில குறைந்தளவு மக்கள் பங்களிப்பும் கிடைத்திருக்கிறது என்பது தான் உண்மை.
2 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago