2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘பழைய மொந்தையில் புதிய கள்’

Johnsan Bastiampillai   / 2022 ஏப்ரல் 05 , பி.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இலங்கையின் ஆட்சியாளர்கள், மக்கள் எதிர்பார்த்து இருந்ததும் ஆனால், இலகுவில் நடக்கும் என நம்பியிராததுமான ஒரு திருப்புமுனையில் வந்துநிற்கின்றார்கள். 

இந்தப் பின்னணியில், எது வேண்டுமென்றாலும் நடக்கலாம். ஜனாதிபதியும் பிரதமரும் அப்பதவிகளில் நீடித்திருப்பார்களா? இடைக்கால அரசாங்கம் அமையப் போகின்றதா? அல்லது, எதுவும் நடக்காத நிலைமை தொடருமா போன்ற கேள்விகளுக்கு இன்றோ நாளையோ விடை கிடைத்துவிடக்கூடும்.

மஹிந்த ராஜபக்‌ஷவின் முன்னைய அரசாங்கங்களின் வெற்றியும் ரணில்-மைத்திரி நல்லாட்சியின் தோல்வியும், கோட்டாபய ராஜபக்‌ஷ அரசாங்கம் தேர்தல்களில் வெற்றிபெற, மறைமுகமாகப் பங்களிப்புச் செய்தன. இதுதவிர, பயங்கரவாதம், இனவாதம் என்ற இரண்டு பெரும் கருவிகளை ராஜபக்‌ஷவினர் கையிலெடுத்தனர்.
2019ஆம் ஆண்டு ஏப்ரலில் நடத்தப்பட்ட அரசியல் பின்னணியுடனான பயங்கரவாதத் தாக்குதலைக் காட்டி, சிங்கள மக்களை அச்சமூட்டியும் ‘தேசப்பற்று’ என்ற தோரணையில் இனவாதம் பேசியும், சிங்கள மக்களின் பெருமளவான வாக்குகளை இவ்வரசாங்கம் பெற்றதை நாமறிவோம்.

அதன்படி, ராஜபக்‌ஷர்கள் 69 இலட்சம் மக்களின் வாக்குகளையும் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தையும் 20ஆவது திருத்தம் ஊடான அதிகாரத்தையும் கொண்டவர்கள் என்ற இறுமாப்பில் போட்ட ஆட்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
ஆனால், காலம் வேறு விதி செய்தது.  அதாவது, சிறிய சிறிய விடயங்களால், பெரிய நெருக்கடிகளை அரசாங்கம் எதிர்கொண்டு, கிட்டத்தட்ட கவிழும் நிலைக்கு வந்து நிற்கின்றது எனலாம்.

கேஸ் சிலிண்டர் வெடிப்பு தொடங்கி, எரிபொருள், எரிவாயு, மின்சார நெருக்கடிகள், அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு-விலையேற்றம் என்பன, அரசியல் கண்ணோட்டத்தில் சிறியதாகத் தோன்றினாலும்,  இன்று அரசாங்கத்தை ஆட்டம் காணச் செய்திருக்கின்றன.

அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் புவிசார் அரசியல் எதிர்பார்ப்புகளும் இதற்குப் பின்னால் இருப்பதாக விடயமறிந்தவர்கள் கூறுகின்றனர். ஆனாலும், மக்கள் வாழ முடியாத அளவுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளே, அரசாங்கத்தை ஆட்டங்காணச் செய்வதற்கான பிரதான காரணிகளாக அமைந்துள்ளன.
கொரோனா வைரஸின் இரண்டாம் அலைக்குப் பிறகு, கோட்டாபய அரசாங்கம், ஆக்கபூர்வமான நகர்வுகளையோ, தீர்மானங்களையோ எடுக்கவில்லை.

பொருளாதார ரீதியாக ஏற்படப் போகின்ற சவாலை, நிதியமைச்சர் பசிலும் மத்திய வங்கி ஆளுநர் கப்ராலும் பார்த்துக் கொள்வார்கள் என்ற தோரணையில் இருந்துவிட்டு, டொலர் நெருக்கடி தலைக்கு மேலால் போன பிறகு, அதன் பாரத்தை மக்கள் மீது சுமத்த முற்பட்டதால், ராஜபக்‌ஷர்கள் எதிர்பார்த்திராத ஓர் எதிர்வினையை மக்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.

எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்காக, நாள்கணக்காக காத்துநின்ற மக்கள், அதற்குக் காரணமான அரசாங்கத்துக்கு எதிராக வீதிகளில் இறங்கியுள்ளனர். இது இலங்கை வரலாற்றில் எந்த ஆட்சியாளரும் எதிர்பார்த்திராத ஓர் எதிர்வினையாகும்.

அரசாங்கத்துக்கு எதிரான இந்தப் போராட்டங்கள், எதிர்க்கட்சியாலோ அல்லது குறிப்பிட்ட ஒரு குழுவாலோ ஒழுங்கமைக்கப்பட்டதல்ல. ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு எல்லா வாய்ப்புகளும் களநிலைமைகளும் சாதகமாக உள்ள நிலையில் கூட, ஆட்சியைப் புரட்டிப் போடத் திராணியற்ற சஜித் பிரேமதாஸ, ரணில் விக்கிரமசிங்க அல்லது, வேறு அரசியல் தரப்பாலோ ஏற்பாடு செய்யப்பட்டவையும் அல்ல.

இது, ஒவ்வொரு குடும்பத்திலும் இருந்து எழுந்துள்ள அரசாங்கம் மீதான அதிருப்தியின் வெளிப்பாடாகும். இந்த மக்கள் எழுச்சியில், அரசியல் கலப்பு இல்லை என்பதே, மிக முக்கிய பலமாக அமைந்தது எனலாம்.

அரசாங்கம் ஆரம்பத்திலிருந்தே பொருளாதார நெருக்கடியை சரியாகக் கையாளாதது தவறாகும். ஆனால், அதற்கு அரசாங்கமும் அமைச்சர்களும் மத்திய வங்கி ஆளுநர் போன்றவர்களும் அளித்த வியாக்கியானங்கள், மக்களை மேலும் விசனத்துக்கு உள்ளாக்கும் வகையில், சிறுபிள்ளைத் தனமானவையாக இருந்தன.

இது இவ்வாறிருக்க, மக்களது எதிர்ப்பைக் கையாளும் விடயத்தில், அரசாங்கம் ஓர் இடத்தில் மிகப் பெரிய தவறைச் செய்தது. அது, மிரிஹானவில் ஜனாதிபதியின் வீட்டுக்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை, கையாண்ட விதமாகும்.

ஜனாதிபதியை வீட்டுக்கு போகுமாறு கோசமிட்ட மக்களில் ஒரு பகுதியினர், மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் வீட்டுக் கதவடி வரை சென்று, தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர். அவர்கள் தெளிவாகத் தமது நிலைப்பாட்டை, கோரிக்கையை முன்வைத்திருந்தார்கள்.

இருப்பினும். ஆர்ப்பாட்டக்காரர்களோ அல்லது இப்போது பாதுகாப்புத் தரப்பு சந்தேகிப்பது போல ‘வெளியில் இருந்து’ வந்தவர்களோ, யாராயினும், அரச சொத்துக்கு சேதம் விளைவித்தமையும் கலவர பூமியாக அதனை மாற்றியமையும் ஏற்றுக் கொள்ள முடியாத குற்றங்களாகும்.

ஆர்ப்பாட்டத்தை ஆதரித்த, மனச்சாட்சியுடன் சிந்திக்கக்கூடிய   யாரும் இந்த வன்முறையையோ, அரச சொத்தழிப்பையோ சரி எனச் சொல்லவில்லை. ஆனால், ஆரம்பத்தில் அவ்விடத்திற்கு வந்து கோசம் எழுப்பியர்வர்கள், ஒவ்வோர் இலங்கை பிரஜையின் குரலாகவே ஒலித்தனர் என்பதை மறுக்க முடியாது.

இதையும் தாண்டி, அரசாங்கம் அவர்களைக் கைது செய்ததைக் காட்டிலும், கைதானவர்களை விட அதிக எண்ணிக்கையில் சட்டத்தரணிகள், அவர்களுக்காக ஆஜரானது மக்களுக்கு ஒருபுதுவித உத்வேகத்தைக் கொடுத்தது.

இது இவ்வாறிருக்க, ஜனாதிபதி செயலகம் மறுநாள் விடியற்காலையில் ஓர்  அறிக்கையை வெளியிட்டிருந்தது. ‘இது ஒரு தீவிரபோக்குடைய குழுவின் நடவடிக்கை; அரபு வசந்தத்தை ஏற்படுத்தும் முயற்சி’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது வேறுவிதமான விமர்சனத்துக்கு வித்திட்டது எனலாம்.  
ராஜபக்‌ஷ குடும்பத்தின் கடைநிலை அரசியல்வாதியைக் கூட, விமர்சிக்க அஞ்சுகின்ற மக்கள், இன்று ஜனாதிபதி கோட்டாபயவின் வீட்டுக்கு முன்னாலேயே வந்திருக்கின்றார்கள் என்றால், பிரச்சினையும் மக்களின் மனஅழுத்தமும் எந்தளவுக்கு கடுமையானதாக மாறியிருக்கின்றது என்பதை, அரசாங்கத்தின் மேலிடம் விளங்கிக் கொண்டு, அதன்படி செயற்பட்டிருக்க வேண்டும்.

அதற்கு மாற்றமாக, இந்த ஆர்ப்பாட்டத்தை ஒரு தீவிரபோக்குடைய குழுவின் நடவடிக்கையாக வகைப்படுத்தியமை, பரவலாக நாட்டு மக்களிடையே அரசாங்கத்துக்கு எதிரான உணர்வுகளை மேலும் தூண்டிவிடுவதாகவே அமைந்தது.
இதன் பிறகு, அரசாங்கம் என்னசெய்வதென்று தெரியாத தடுமாற்றத்தில், அடுத்தடுத்து பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளை, தவறான முடிவுகளின்  அடிப்படையில்  எடுத்தது.

மக்கள் போராட்டங்களைக் கட்டுப்படுத்த வழியின்றி, அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியமை, ஞாயிற்றுக்கிழமை (03) ஆர்ப்பாட்டம் நடைபெறவிருந்த நிலையில் அன்றையதினம் ஊரடங்கை அறிவித்தமை, சமூக வலைத்தளங்களை சில மணிநேரம் முடக்கியமை போன்றவற்றை அந்த முட்டாள்தனமான நடவடிக்கைகளாகக் கருதலாம். 

இந்த நடவடிக்கைகள் உண்மையிலேயே, மக்களைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, அவர்களது விசனத்தை மேலும் அதிகரிக்கவே வழிகோலின. அத்துடன், மக்கள் எதிர்ப்பைக் கண்டு ஆட்சியாளர்கள் அச்சப்படுகின்றார்கள் என்பதும் வெளிப்பட்டதெனலாம்.

அதன்காரணமாக, ஊரடங்கையும் மீறி கொழும்பு, கண்டி உட்பட நாட்டின் பல பாகங்களிலும் அதிகளவிலான மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தொடர்ந்தும் மக்கள் போராட்டங்கள் இடம்பெறுகின்றன. சமகாலத்தில், 11 சிறுகட்சிகள் உட்பட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் தமது நிலைப்பாட்டை அரசாங்கத்தின் மேலிடத்துக்கு அறிவித்துள்ளது.

எனவே, எதுவும் செய்யாமல் இப்படியே காலத்தை இழுத்தடித்துக் கொண்டு செல்ல முடியாது என்ற நிலைப்பாட்டுக்கு ஆட்சியாளர்கள் வந்திருக்கின்றார்கள்.
தற்போதைய நிலையில், அரசாங்கத்தின் முன்னால் சில தெரிவுகள் உள்ளன. அதையும் தாண்டி, இராணுவ ஆட்சி பற்றிய கதைகளும் உள்ளன. இத்தெரிவுகளில்  ஒன்றான, இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான சமிக்ஞையை பிரதமர் உள்ளிட்ட அநேக எம்.பிக்கள் வெளிக்காட்டியுள்ளனர். 

அதேநேரம், இப்போது நாடு இருக்கின்ற நிலையில் சஜித்தோ, ரணிலோ துணிந்து நாட்டைப் பொறுப்பேற்கவும் தயாரில்லை. 

இந்தப் பின்னணியில், அமைச்சரவை அமைச்சர்கள் தமது இராஜினாமாக் கடிதங்களை, ஞாயிற்றுக்கி​ழமை (03) இரவு பிரதமரிடம் கொடுத்துள்ளனர். அப்போது சிலர் முரண்டு பிடித்துள்ளனர். இக்கடிதங்களை பிரதமர், ஜனாதிபதியிடம் கொடுத்ததும் அவர், அவற்றை ஏற்றுக் கொள்வார் என்று சொல்லப்பட்டது. அத்துடன், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக சுமார் 50 எம்.பிக்கள் வரையில் அறிவித்துள்ளனர்.

முழுமையான ஆட்சி மாற்றத்துக்கான வாய்ப்புகள் இல்லை என்றே கருத முடிகின்றது. அத்துடன், ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகவும் மாட்டர்கள் என்றே தோன்றுகிறது. எனவே, அமைச்சரவை கலைந்தால், இடைக்கால  அரசு உருவாவதற்கான சாத்தியங்கள் அதிகரிக்கும் என்ற நிலை உள்ளது. 

ராஜபக்‌ஷர்களின் அரசாங்கம், கூண்டோடு பதவி விலக வேண்டும் என்றே மக்கள் கோருகின்றனர். இந்நிலையிலேயே, நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் தோரணையில் அமைச்சர்கள் இராஜினாமாவும் புதிய அமைச்சர்கள் நியமனமும் நடந்தேறியுள்ளது. எனவே, ஜனாதிபதியும் பிரமரும் பதவி விலகப் போவதில்லை என்பதையே இந்நிகழ்வுகள், மறைமுகமாகச் சொல்லி இருக்கின்றன எனலாம்.

அதாவது, அமைச்சர்கள் இராஜினாமா செய்தமையும் புதிய அமைச்சர்கள் நியமனம் செய்தமையையும் பார்க்கும்போது, ‘பழைய மொந்தையில் புதிய கள்’  என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.

வீதியில் இறங்கிப் போராடும் மக்களைப் பொறுத்தமட்டில், இதுவும் பத்தோடு பதினோராவது அரசியல் நாடாகமாகத்தான் வந்து முடிகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X