2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பெரியண்ணாவின் பெரிய கப்பல்

Editorial   / 2022 மார்ச் 21 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரிசைகள் இன்னும் குறையவில்லை. நாளுக்கு நாள் நீண்டுக்கொண்டே செல்கின்றது. வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில், சாரதியொருவர் மற்றுமொரு சாரதியை கத்தியால் குத்தி கொலைச் செய்துள்ளார். வரிசையில் நின்றுக்கொண்டிருந்த போது மயங்கி விழுந்து, ​இன்று (21) வரையிலும் மூவர் மரணித்துவிட்டனர்.

நமது நாட்டைப்பொறுத்தவரையில் எரிபொருள் பிரச்சினைக்கு இன்னுமே தீர்வு காணப்படவில்லை. இவற்றுக்கு, “ பிழையான தீர்மானத்தை எடுத்தல்”, “ சரியான தீர்மானத்தை உரிய நேரத்தில் எடுக்க தவறியமை”, “சர்வதேச நெருக்கடியின் மீதான புரிதல் இன்மை”,“நாடு முகங்கொடுக்கும் பிரச்சினைகளை குறைக்காமல், அதிகரித்துக்கொள்வது” இவைகள் பிரதான காரணங்களாக இருந்தன.

கொரோனா தொற்று யாவருக்கும் பொதுவானது. இதில், எமது அண்டைய நாடான இந்தியாவில் ஏற்பட்ட பாதிப்பு, இன்னுமே இருக்கிறது. எனலாம். எனினும், தங்களையும் காத்துக்கொண்டு அக்கம் பக்கத்தினருக்கு உதவியதில் இந்தியாவின் வகிபாகத்தை என்றுமே மறக்கமுடியாது. இன்றுமட்டுமல்ல என்றுமே எமது உதவி ஒத்தாசை புரிவதில், பெரியண்ணா என்றழைக்கப்படும் இந்தியா ஒருபடி முன்னிலை​யிலே​யே இருக்கின்றது.

ஒரு குடும்பத்துக்கு மூத்த அண்ணா, எவ்வளவு முக்கியமானவராக இருப்பாரோ, அதேபோலதான், இலங்கையின் பெரியண்ணாவாக இந்தியா இருப்பது. சகல விதங்களிலும் எமக்கு பாதுகாப்பாகவும் உறுதுணையாகவும் ஒத்துழைப்பாகவும் இருக்கும் என்பதில் எவ்விதமான ஐயமுமல் இல்லை.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தினால், 1 பில்லியன் அமெரிக்க டொல்களை கடனுதவியை இந்தியா வழங்கியுள்ளது. அதற்குப் பின்னர், இந்தியாவின் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவித் திட்டத்தின் கீழ், இலங்கைக்கு முதலாவது டீசல் ஏற்றிய கப்பல் கொழும்பு துறைமுகத்தை நேற்று (21) வந்தடைந்தது.

 

35,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல், கொழும்பு துறைமுகத்தை அண்மித்துள்ளது எனத் தெரிவித்துள்ள  இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம்    அந்தக்  கப்பலிலிருந்து டீசலை தரையிறக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

இலங்கையின் தற்போதைய நிலைமையை நன்கு அவதானித்தால், டொலர் பிரச்சினைக்கு அடுத்தப்படியாக எரிபொருள் பிரச்சினையே முன்னிற்கிறது. எரிபொருள்களின் விலையேற்றத்தால், ஒவ்வொரு பொருட்களின் விலைகளும் நாளுக்கு நாள் எகிறிகொண்டே ​போகின்றன. தலைதூக்க முடியாத அளவுக்கு பொருட்களின் விலைகள் தாண்டவமாடுகின்றன.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு ரூ.7,500 கோடி கடன் உதவி: அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக இந்தியா வழங்குகிறது. அதிலொரு பகுதியாக, இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில், இந்தியாவினால் முதல் கட்டமாக 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்கியுள்ளது.

எரிபொருளுக்கு அப்பால், உணவு, மருந்து மற்றும் சில அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கே, இந்த கடனுதவி வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா ​நெருக்கடியின் போது, இலங்கை கடும் பொருளாதாரச் சரிவை சந்தித்தது. அந்நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பும் வெகுவாக குறைந்தது. பிற நாட்டு நாணயத்துக்கு இணையான இலங்கை ரூபாவின் மதிப்பு  பெருமளவு சரிந்துள்ளது. இதன் காரணமாக கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அரிசி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது. மின் விநியோகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ள விலைவாசியால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். பல இடங்களில் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து, விலைவாசியை கட்டுப்படுத்த வலியுறுத்தி பல இடங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியாவுக்குச் சென்றிருந்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச்சோர்த்தை நடத்தினார். அச்சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது. “அண்டை நாடான இலங்கையின் நலனுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்றும் அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியில் இந்தியா கவனம் செலுத்தும்” என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.

 நட்பு நாடான இலங்கை மக்களின் நலனில் இந்தியா எப்போதும் அக்கறை கொண்டுள்ளது என்று அன்றையதினம் தெரிவித்திருந்த பிரதமர், இரு நாடுகளிடையே சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் புத்த சமயம் மற்றும் ராமாயண சுற்றுலாவுக்கு இரு நாடுகளிடையே வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக் காட்டினார்.

உதவி வழங்கியது மட்டுமன்றி, பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிவகைகளையும் காண்பித்து கொடுத்துள்ளார். இங்குதான் பெரியண்ணாவின் வகிபாகத்தை நாங்கள் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.

இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பை வலுப்படுத்தும் விதமாக 50 கோடி அமெரிக்க டொலரை இந்தியா வழங்கியுள்ளது. இதன்மூலம் இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு 90 கோடி டொலராக உயர்ந்துள்ளது. இந்திய அளித்துள்ள கடன் உதவியை திரும்பச் செலுத்துவதற்கு இலங்கைக்கு நீண்டகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதி உதவியானது, ஆசிய ஒப்புகை தீர்ப்பாய ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

வரலாற்று ரீதியில் பார்த்தால், ராமாயணத்தில் ராமர் பாலம் அமைத்திட அணில் உதவி செய்தது என்பது வரலாறு. அதுபோல் பாரதம் உதவி செய்துள்ளது. பாரதம் நன்றியை எதிர்பார்த்து உதவி செய்து இருக்காது. ஆனால், உதவி பெற்ற இலங்கைக்கு பொறுப்பு உண்டு.  வேறுபாடு பார்க்காமல் உதவியை பயன்படுத்தவேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .