2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மாடு மேய்க்க எங்கே செல்வது?

Johnsan Bastiampillai   / 2021 ஒக்டோபர் 21 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

 

 

வன்னியை பொறுத்த வரையில், கால்நடை வளர்ப்பும் விவசாயமும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த வாழ்வாதாரத் தொழில்களாகக்  காணப்படுகின்றபோதும், கால்நடைகளுக்கான மேச்சல் தரவைகள் இன்மையால் பண்ணையாளர்கள், விவசாயிகள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

தற்போது காலபோக பயிர்ச் செய்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், அவற்றைக் கட்டாக்காலி கால்நடைகளிடமிருந்து பாதுகாத்தல் என்பது விவசாயிகளுக்கு பாரிய பிரச்சினையாகவுள்ளது.

  அதேபோன்று, கால்நடைப் பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை பயிர்ச்செய்கை காலங்களில் வீதிகளிலும்  பிறஇடங்களிலும் வைத்துப்  பராமரிப்பதில்  பாரியநெருக்கடிகளை எதிர்கொள்ளவேண்டிய நிலையும் காணப்படுகின்றது.

தற்போது நவீன முறையில், உள்ளக முறைகளில் கால்நடைகளை வளர்ப்பதற்கான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்ற போதும், அந்த முறைமைக்குள் பண்ணையாளர்கள் உடனடியாக செல்லமுடியாத நிலை காணப்படுகின்றது. அதாவது, கால்நடை வளர்ப்பில், பாரம்பரிய திறந்த வெளி வளர்ப்பு முறையையே பண்ணையாளர்கள் விரும்புகின்றனர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தற்போது இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான கால்நடைகள் உள்ளன. ஆனால், அதற்கான மேச்சல் தரவைகள் என்பது, இதுவரை உருவாக்கப்படவில்லை. இதனை அமைப்பதற்கு அதிகாரிகள் பல முயற்சிகளை எடுத்து வருகின்றபோதும், அது கை கூடுவதாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் காலபோகச் செய்கையின்போது, சுமார் 59 ஏக்கர் வரையான நிலப்பரப்பில் காலநெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள், இவற்றைவிட ஆயிரத்துக்கும் மேற்பட்ட எருமை மாடுகளும் உள்ளன. 

இவ்வாறு பயிர் செய்கை காலங்களில், இவற்றை வைத்து பராமரிக்கக்கூடிய மேச்சல் தரவைகள் எவையும் கிளிநொச்சி மாவட்டத்தில இல்லை என்பது வேதனை அளிக்கக்கூடிய செய்தியாகும். இவற்றுக்கான மேச்சல்தரவைகளை அமைப்பதிலும் பாரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன.

கடந்த காலங்களில், கால்நடைகளின் மேச்சல் தரவைகளுக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள், பல குடியிருப்பு நிலங்களாகவும் பயிர் செய்கை நிலங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன.

இதனால் கால்நடை பண்ணையாளர்கள் பயிர்செய்கை காலங்கள் தவிர்ந்த ஏனைய காலங்களிலும் சிறுபோக செய்கை காலங்களிலும் பயிர்செய்கை மேற்கொள்ளப்படாத வயல் நிலங்களில் வைத்து தமது கால்நடைகளை பராமரித்து வருகின்றனர். ஆனால், காலபோக செய்கை காலங்களில் அவ்வாறு பராமரிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.

இவ்வாறான காலப்பகுதிகளில், கால்நடைகளை பெரும் சிரமங்களின் மத்தியில் இடத்துக்கு இடம் மாற்றிமாற்றிப் பராமரித்து வருகின்றனர். இதனால் பல சட்டரீதியான பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது.

மேச்சல் தரவைகள் இன்மையால், பயிர்ச்செய்கை காலங்களில் குளங்களின் அலைகரைப்பகுதிகளில் வைத்து, பண்ணையாளர்கள் பராமரித்து வருகின்றபோது, குளங்களின் நீர் மட்டம் அதிகரிக்கும் போது, அவற்றை அங்கிருந்து வெளியேற்றி காடுகளிலும் ஏனைய இடங்களிலும் வைத்து பராமரித்து வருகின்றனர்.

இவ்வாறு கால்நடைகளுக்கான மேச்சல் தரவைகள் இன்மையால், திறந்தவெளி வளர்ப்பு முறைகளில் கால்நடைகளை வைத்துப் பராமரித்து வரும் பண்ணையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். 

கால்நடை வளர்ப்பு என்பது, மாவட்டத்தின் உற்பத்தி, மக்களின் போசாக்கு அதனை மேற்கொள்ளும் குடும்பங்களின் வாழ்வாதாரம் என பல்வேறு விடயங்களில் முக்கிய பங்கினை வகிப்பதால் இதனை மேம்படுத்த வேண்டிய தேவையே உள்ளது.

இன்று நவீன முறைகளில் உள்ளகவளர்ப்பு முறைகள் பல  அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளபோதும் அதற்குள் திடீரென செல்லமுடியாத நிலை காணப்படுகின்றது. அத்துடன் பண்ணையாளர்கள் உள்ளகவளர்ப்பு முறைகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய திட்டங்கள் உரியமுறைகளில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

பாரம்பரிய முறையாகவும் பரம்பரை பரம்பரையாகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் திறந்த வெளி வளர்ப்பு முறைகளையே மேற்படி பண்ணையாளர்கள் பின்பற்றி வருகின்றனர். எனவே மேற்படி  மேச்சல் தரவைகள் மிகமிக முக்கியமான ஒன்றாகக் காணப்படுகின்றன.

எனவே, மக்களின் வாழ்வாதாரம், போசாக்கு என்பவற்றைக் கருத்திற்கொண்டு, கால்நடைகளுக்கான மேச்சல் தரவைகளை அமைப்பதற்குரிய காணிகளை விடுவித்து, மேச்சல்தரவைகளை அமைத்துத்தருமாறு பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .