Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Johnsan Bastiampillai / 2022 மார்ச் 24 , பி.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
புருஜோத்தமன் தங்கமயில்
எரிபொருள் நிரப்பு நிலையங்கள், சமையல் எரிவாயு விற்பனை நிலையங்கள் ஆகியவற்றைப் பொதுமக்களிடம் இருந்து பாதுகாக்கும் பொறுப்பை, துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினரிடம் ராஜபக்ஷர்களின் அரசாங்கம் வழங்கி இருக்கின்றது.
கடந்த சில வாரங்களாக, நாடு பூராவும் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் சமையல் எரிவாயு விற்பனை நிலையங்களிலும், நீண்ட வரிசையில் மக்கள் காத்துக் கிடக்கிறார்கள். இப்படி வரிசையில் காத்திருந்த மூன்று பேர் இதுவரையில் மரணித்திருக்கிறார்கள். ஆனாலும், எரிபொருள் விநியோகமோ, எரிவாயு விற்பனையோ சீராகவில்லை.
இதனால், நாடு பூராகவும் மக்கள் வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கிவிட்டார்கள். “ஆட்சியைவிட்டு, உடனடியாக ராஜபக்ஷர்கள் வெளியேற வேண்டும்” என்கிற குரல்களை, மக்கள் பலமாக எழுப்புகிறார்கள்.
இவ்வாறான நிலை இப்படியே தொடர்ந்தால், நாடு பூராகவும் ராஜபக்ஷர்களுக்கு எதிரான எழுச்சி என்பது, கட்டுப்படுத்த முடியாதளவுக்கு அதிகரித்துவிடும் என்ற பயத்தில், மக்கள் எங்கெல்லாம் வரிசையில் காத்திருக்கிறார்களோ, அங்கெல்லாம் இராணுவத்தினரை இறக்கியுள்ளார்கள்.
தேசிய பாதுகாப்புக் கடமைகளுடன் இயற்கை பேரிடர்கள் போன்ற ஆளணி அவசியமுள்ள அசாதாரண சந்தர்ப்பங்களில் மட்டும் இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினரை, அரசாங்கங்கள் முன்னரங்குக்கு அழைப்பதுண்டு. ஆனால், இலங்கையில்தான் மக்களின் ஜனநாயகப் போராட்டங்களை அடக்கவும், மக்களின் நிலங்களை ஆக்கிரமித்து விவசாயம் செய்யவும், வீதியோர மரங்களை அழகுபடுத்தவும் இராணுவத்தினர் அழைக்கப்படுகின்றனர். தற்போதும் அப்படித்தான்! எரிபொருள் விற்பனை நிலையங்களைச் சுற்றி இராணுவத்தினர் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி பேரிடர்தான். இதை எந்தவித இயற்கை அனர்த்தங்களும் ஏற்படுத்தவில்லை. மாறாக, சுதந்திர இலங்கையை ஆண்ட அரசாங்கங்கள், திட்டமிட்டு ஏற்படுத்திவிட்ட பொருளாதார ‘திவால்’ என்னும் பேரிடர் இதுவாகும்.
டி.எஸ்.சேனநாயக்க தொடங்கி, கோட்டாபய ராஜபக்ஷ வரையான ஆட்சியாளர்கள், இந்த வங்குரோத்து நிலைக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களாவர். அதிலும் ராஜபக்ஷர்களுக்கு கூடுதல் பொறுப்பு இருக்கின்றது.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில், வெளிநாடுகளில் குறிப்பாக, சீனாவிடம் பில்லியன் டொலர் கணக்கில் கடனைப் பெற்று, எந்தவித வருமானமும் தராத தாமரைக் கோபுரம் போன்ற ஆடம்பர அலங்கார கட்டுமானங்களைச் செய்தார்கள். அந்தக் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு மீண்டும் கடன்களை வாங்கிக் குவித்துக் குவித்து, இலங்கையில் இனி பிறக்கப்போகும் பல தலைமுறைகளின் தலைகளிலும் கடன் சுமையை ஏற்றிவிட்டிருக்கிறார்கள்.
இவ்வாறாக மீள முடியாத அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டு, சர்வகட்சி மாநாடு என்ற நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள். ராஜபக்ஷர்கள் எந்தவொரு தருணத்திலும் பங்காளிக் கட்சிகளினதோ, எதிர்க்கட்சிகளினதோ கருத்துகளை கணக்கில் எடுத்ததில்லை. ஏன், அவர்கள் தங்களின் சொந்தக் கட்சியின் முக்கியஸ்தர்களின் கருத்துகளையே செவிமடுப்படுதில்லை.
அவ்வப்போது சர்வதேச நெருக்கடிகள் அல்லது கட்டாயத்தால், சர்வகட்சி மாநாடுகள், பேச்சுவார்த்தைகள் என்கிற பெயர்களில் ஏதாவது காட்சிகளை அரங்கேற்றுவார்கள். இம்முறையும் அவ்வாறான காட்சிகளை அரங்கேற்றும் நோக்கிலேயே, சர்வகட்சி மாநாட்டுக்கான அழைப்பை விடுத்தார்கள்.
ஆனால், அவர்கள் எதிர்பார்த்த வரவேற்பு எந்தத் தரப்பிடம் இருந்தும் கிடைக்கவில்லை. குறிப்பாக, ஆளும் கூட்டணியில் இன்னமும் இருக்கின்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கூட, சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணித்து இருக்கின்றது. தங்களது கோரிக்கைகள், ஆலோசனைகளை அரசாங்கம் கேட்கவில்லை என்கிற காரணத்தாலேயே, தாங்கள் சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணித்திருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்திருக்கின்றது.
ராஜபக்ஷர்கள், தங்களின் ஆட்சியின் தோல்வியை, மற்றவர்களின் தலையில் ஏற்றும் நோக்கிலேயே, சர்வகட்சி மாநாட்டை நடத்துவதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அறிவித்து மாநாட்டைப் புறக்கணித்தன.
ராஜபக்ஷர்களின் தோல்வியின் அளவை, இன்னும் இன்னும் அதிகரிக்கும் வேலைகளை மாத்திரமே எதிர்க்கட்சிகள் செய்ய நினைக்கும். அப்படியான நிலையில், ராஜபக்ஷர்களின் சர்வகட்சி மாநாட்டில் பங்கெடுப்பது என்பது, ராஜபக்ஷர்களின் தோல்விக்கு ஒத்தடம் தடவுவது போல அமையும்.
எதிர்க்கட்சிகளாகத் தாங்கள் சும்மா இருந்தாலே போதும், மக்களே சுயமாக கிளர்ந்தெழத் தொடங்கிவிட்டார்கள்; இப்படியான நிலையில், ராஜபக்ஷர்களோடு கைகுலுக்குவது என்பது, மக்களின் கிளர்ச்சியைத் தணிப்பது போலானது என்று எதிர்க்கட்சிகள் சிந்திப்பது இயல்பானது.
ஆனால், ராஜபக்ஷர்களைத் தேசத்தின் காவலர்களாகவும் அபிவிருத்தி நாயகர்களாகவும், ஒளிவட்டங்களை வரைந்தவர்கள், ஆட்சியின் பங்காளியாக இருந்தவர்கள் எல்லாமும் தற்போது, ‘செத்த நாயில் இருந்து கழரும் உண்ணிகள் போல’ கழன்று ஓடத்தொடங்கிவிட்டார்கள். ராஜபக்ஷர்களின் சர்வகட்சி மாநாடு, நடந்து முடிந்திருக்கின்ற விதமே அதற்கு நல்ல சாட்சி.
யுத்த வெற்றி வாதத்தை மட்டும் நம்பி, எந்தவொரு தரப்பிடமும் ஆட்சியை மீண்டும் மீண்டும் கையளிக்கக்கூடாது என்பதை, தென் இலங்கை மக்கள் இன்றைக்குத்தான் உணர்கிறார்கள்.
ராஜபக்ஷர்களை, அவர்கள் கொண்டாடிக் கொண்டு வெற்றி பெற வைத்து, மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வந்த போது, நாட்டில் தேனும் பாலும் ஓடப்போவதாக அவர்கள் நம்பினார்கள். ஆனால், இன்றைக்கு அதே மக்கள்தான், எரிபொருள்களுக்காக வரிசையில் நின்று, ராஜபக்ஷர்களை பல தலைமுறைகளுக்கும் சேர்த்துத் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
ராஜபக்ஷர்களின் வெற்றிக்காக ஊதுகுழலாக இயங்கிய ஊடகங்களும் பிரசாரகர்களும், மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. ராஜபக்ஷர்களுக்காக இனவாதத்தை கடந்த காலங்களில் நாளொரு வடிவத்தில் பரப்பியவர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இடைநடுவில் ஓடுகிறார்கள்.
“தாய்நாடுதான் எல்லாமும், நாட்டை பிரிவினையில் இருந்து காப்பாற்றிய ராஜபக்ஷர்களே ஒரே தெரிவு” என்று பேசிய தென் இலங்கையின் மத்தியதர வர்க்கம், எப்படியாவது நாட்டைவிட்டு சென்றுவிட வேண்டும் என்று, கடவுச்சீட்டு அலுவலகத்திலும் தூதுவராலயங்களிலும் காத்து நிற்கின்றது.
சர்வதேச நாடுகளோ, இலங்கையின் இன்றைய நெருக்கடி நிலையைக் குறித்து செய்தி வெளியிடும் போது, பச்சாத்தாபங்களை வெளிப்படுத்துகின்றன.
ராஜபக்ஷர்கள் பற்றி, சர்வதேசம் இரண்டு கருத்துகளையே கொண்டிருக்கின்றது. ஒன்று, விடுதலைப் புலிகளை அழித்தவர்கள். இரண்டாவது, புலிகளை அழிப்பதற்காக மாபெரும் மனித உரிமை மீறல்களைப் புரிந்தவர்கள். இந்த இரண்டு கருத்துகளைத் தாண்டி இப்போது, ‘ஊழலின் பெருச்சாளிகள்’; நாட்டை ஒட்டுமொத்தமாகத் திவாலாக்கியவர்கள் என்கிற அடையாளத்தைப் பெறுகிறார்கள்.
ராஜபக்ஷர்களின் ஊழல் தொடர்பில், தென் இலங்கை போன்று, சர்வதேசமும் ஆரம்பத்தில் அவ்வளவு கரிசனை கொள்ளவில்லை. ஆனால், நாடு இன்றைக்கு வந்து சேர்ந்திருக்கின்ற இடம் அதைப் பகிரங்கப்படுத்தி இருக்கின்றது.
புலிகளை அழிக்கும் யுத்தத்துக்கு உதவியது போல, வெளிநாடுகள் கடன்கள் வழங்கும் என்று ராஜபக்ஷர்கள் அதிகம் நம்பினார்கள். குறிப்பாக, சீனாவில் பெரும் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்களின் எண்ணம் நிறைவேறாத புள்ளியில், நாட்டை சீரழிவின் பக்கத்தில் முழுவதுமாக கொண்டுவந்து சேர்த்திருக்கிறார்கள்.
கடன்களில் மாத்திரம் ஆட்சியை நடத்தும் எந்த அரசாங்கமும் மக்களை நட்டாற்றில் விடும் வேலைகளை மாத்திரமே செய்யும். இலங்கையின் அனைத்து அரசாங்கங்களும் அதற்கு பொறுப்பாளிகளே. ஆனால், ராஜபக்ஷர்கள் அதில் முதன்மைப் பொறுப்பாளிகள்.
இனியாவது ஆட்சிக்கு வர நினைப்பவர்கள், உண்மையான பொருளாதார திட்டங்களோடு நாட்டை பொறுப்பேற்கத் துணிய வேண்டும். இல்லையென்றால், இன்னொரு ராஜபக்ஷர்களின் காலத்து இலங்கையை, சிந்தித்துப் பார்க்கவே முடியவில்லை. அது, சோமாலியா, எத்தியோப்பியாக்களைக் காட்டிலும் படுமோசமான நாடாக மாறும்.
3 minute ago
9 minute ago
10 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
9 minute ago
10 minute ago