Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Johnsan Bastiampillai / 2022 ஏப்ரல் 21 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
புருஜோத்தமன் தங்கமயில்
தமிழ்ப் பரப்பிலுள்ள சில தரப்புகளால், “..ராஜபக்ஷர்களை வீட்டுக்கு அனுப்பும் போராட்டம், தென் இலங்கை மக்களின் வயிற்றுப் பசிக்கான பிரச்சினை. அதில் பங்களிப்பது அவசியமற்றது. தமிழ் மக்கள் ஒதுங்கியிருந்து, வேடிக்கை பார்க்க வேண்டும்....” என்கிற கருத்துருவாக்கம், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றது. குறிப்பாக, புலம்பெயர் தமிழ் மக்களில் ஒரு தொகுதியினர் அதைத் தலையாய பணியாக ஏற்றும் செயற்படுகின்றனர்.
நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு தலைவிரித்தாடுகின்றது. சமையல் எரிவாயு தொடங்கி, எரிபொருட்களைப் பெற்றுக் கொள்வது என்பது குதிரைக் கொம்பாகிவிட்டது.
தங்களது நாளாந்த வேலைகளை விட்டுவிட்டு, நாள்கணக்கில் அத்தியாவசிய தேவைகளுக்காக வரிசையில் நிற்பதே, மக்களின் வாடிக்கையாகிவிட்டது. இந்த நெருக்கடி, தென் இலங்கை மக்களுக்கு மாத்திரமானதல்ல; அது முழு நாட்டுக்குமானது.
தென் இலங்கை மக்கள்தான், ராஜபக்ஷர்களை ஏகோபித்த பெரும்பான்மையோடு ஆட்சிக்கு கொண்டு வந்தார்கள். ஆகவே, அவர்கள் தற்போது சந்தித்து நிற்கும் நெருக்கடி, தேவையான ஒன்றுதான் என்ற மாதிரியான எண்ணப்பாடுகளையும், சில தமிழ்த் தரப்புகள் கொண்டாட்ட மனநிலையோடு பகர்ந்து வருகின்றன.
அவர்களுக்கு, தமிழ் மக்கள் ராஜபக்ஷர்களை வீட்டுக்கு அனுப்பும் கோரிக்கைகளை விடுப்பதோ, போராடுவதோ எரிச்சலூட்டுகின்றது. அவர்கள், அற்ப சந்தோஷங்களின் வழியாக, வாழ்க்கையைக் கொண்டு நகர்த்திவிட நினைக்கிறார்கள்.
மாறாக, தாயகத்திலுள்ள தமிழ் மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகள் பற்றியோ, அரசியல் நகர்வுகள் பற்றியோ எந்தவித புரிதலும் இல்லை. “தமிழ் மக்கள், முள்ளிவாய்க்காலில் சந்திந்த பிரச்சினைகளோடு ஒப்பிடுகையில், இன்றைய பொருளாதார நெருக்கடி எல்லாம் ஒன்றுமேயில்லை” என்கிற வகையான வாதங்களை, எந்தவித ‘கூச்சநாச்சம்’ இன்றி முன்வைத்து வருகின்றனர்.
இலங்கை ரூபாயின் பெறுமதி, கடந்த இரண்டு மாதங்களில் 48 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து இருக்கின்றது. கிட்டத்தட்ட அரைவாசியாகப் பெறுமதி இழப்பு ஏற்பட்டிருக்கின்றது. இந்தப் பெறுமதி இழப்புக்கு ஏற்ப, வருமான அதிகரிப்பு என்பது, இலங்கையில் எந்தவொரு தொழிற்றுறையிலும் சாத்தியமில்லை.
இப்படியான நிலையில், இந்த நெருக்கடி நிலை ஒரு சில நாள்களிலோ மாதங்களிலோ முடிந்து போகப்போவதில்லை. சில ஆண்டுகளுக்கு இதுவே வாழ்க்கையாகிவிடும். அப்படியான நிலையில், நெருக்கடி நிலையை ஏற்படுத்தியதில் பெரும்பங்காற்றிய ராஜபக்ஷர்களுக்கு எதிராகப் போராடுவது என்பது தவிர்க்க முடியாதது.
அதுபோல, எதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் தரப்புகள், ஊழல் மோசடிகள் இன்றி செயற்படுவதற்கான எச்சரிக்கையை விடுக்கும் வகையிலும் தற்போதைய போராட்டங்கள் அவசியமானவை.
முள்ளிவாய்க்கால் கொடூரங்களைச் சந்தித்துவிட்டு வந்த மக்களில் 95 சதவீதமானவர்கள் இன்னமும் தாயகத்திலேயே இருக்கிறார்கள். இவர்களின் பொருளாதாரம் என்பது, இன்னமும் சரி செய்யப்படவில்லை. மாறாக, வறுமைக்கோட்டுக்குக் கீழான வாழ்க்கையோடு அல்லல்படுபவர்கள்தான் அதிகமானவர்கள்.
இவர்களுக்கு, இன்றைக்கு நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடி என்பது இன்னும் பயங்கரமானது. இவர்கள் முள்ளிவாய்க்காலை சந்தித்த அனுபவங்களைக் கொண்டவர்கள்; எனவே, இதையும் சகித்துக் கொள்வார்கள் என்கிற அணுகுமுறையானது, அயோக்கியத்தனமானது. நெருக்கடியைச் சந்தித்த மக்கள், வாழ்க்கை பூராவும் அப்படியே இருந்துவிட வேண்டும் என்கிற தோரணையிலானது.
வடக்கு, கிழக்கில் போரால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் விவசாயத்தையும் மீன்பிடியையும் பிரதான தொழிலாகக் கொண்டவர்கள். ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தது முதல், விவசாய முன்னெடுப்புகள் படுத்துவிட்டன.
உரத்துக்கான தட்டுப்பாட்டை, திட்டமிட்ட ரீதியில் ராஜபக்ஷர்கள் ஏற்படுத்தினார்கள். அத்தோடு, அசேதன உரத்துக்கு மாற்றாக, சேதன உரம் என்கிற திட்டத்தை ஒரே நாள் இரவில் அமல்படுத்தினார்கள். இதனால், ஏக்கர் கணக்கான வயல்வெளிகள் காய்ந்து வறண்டன. பெரும் நட்டத்தோடு விவசாயிகள் அல்லாட வேண்டி வந்தது.
ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், 3,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட உரத்தின் விலை, தற்போது 30,000 ரூபாயைத் தாண்டி விட்டது. அத்தோடு டீசலையோ, மண்ணெண்ணையையோ விவசாயிகளால் பெற்றுக் கொள்ள முடியவில்லை.
நீரிறைக்கும் இயந்திரங்கள் தொடங்கி, உழவு இயந்திரங்கள் வரையில் ஒன்றையும் இயக்க முடியாது, வயல்களையும் தோட்டங்களையும் அப்படியே காயவிட்டு கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.
அதுபோல, எரிபொருள் தட்டுப்பாட்டால் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாடு பூராவுமுள்ள மீனவர்களின் தொழில் நடவடிக்கைகள் முழுவதுமாக முடங்கி விட்டன. ஆயுதப் போர் நீடித்த மூன்று தசாப்த காலத்தில் வடக்கு, கிழக்கு மீனவர்கள் தங்களது தொழில் நடவடிக்கைகளை முழுவதுமாக இழந்திருந்தனர். போரின் முடிவுக்குப் பின்னரும் கூட, எல்லை தாண்டும் இந்திய மீனவர்களாலும், தென் இலங்கை மீனவர்களின் அச்சுறுத்தல்களாலும் தொழில் நடவடிக்கைளை முன்னெடுப்பதில் இடர்பாடுகளையே சந்தித்து நிற்கின்றார்கள்.
இப்படியான நிலையில், இன்றைக்கு எரிபொருள் தட்டுப்பாட்டால் வடக்கு, கிழக்கிலுள்ள மீனவர்கள், தொழில் நடவடிக்கையை முன்னெடுக்க முடியாது திணறுகிறார்கள்.
படகுகளைத் தரையில் ஏற்றிவிட்டு, போர்க் காலத்தில் கட்டுமரத்தில் கரையோர மீன்பிடியில் ஈடுபட்டது போல, மீண்டும் கட்டுமரங்களைக் கட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். கட்டுமரங்களைக் கட்டி, தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவது என்பது, இன்றைய நிலையில், ஒருவேளை உணவுக்கான பணத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாது.
இன்னொரு பக்கம், அரச ஊழியர்களின் வாழ்வும் இருண்டே கிடக்கின்றது. கடந்த காலங்களில், ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய ஒரு பொருளை, தற்போது இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியிருக்கின்றது. அப்படியான நிலையில், நாற்பதாயிரம் ரூபாய் அளவில் ஊதியம் பெறும் அரச ஊழியரையும், அவரில் தங்கி வாழும் குடும்பத்தினதும் நிலை, எவ்வளவு நெருக்கடியானது என்பதை உணர்ந்து கொள்வது, அவ்வளவு ஒன்றும் சிக்கலானது இல்லை.
இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடியில் ஆதாயம் அடையும் தரப்புகளாக பதுக்கல் வியாபார முதலைகள், கடத்தல்காரர்கள், வெளிநாட்டிலிருந்து வரும் பணத்தில் வயிறு வளர்ப்பவர்கள் போன்றோரை, வேண்டுமானால் இந்த நெருக்கடி பாதிக்காமல் இருக்கலாம். அவர்களுக்கு இவ்வாறான நெருக்கடி நிலை, நீடிப்பு அவசியமான ஒன்றும் கூட! அதுதான் அவர்களின் கறுப்புச் சந்தையை இன்னும் இன்னும் விரிவுபடுத்த உதவும்.
வயிற்றுப் பசி அனைவருக்கும் பொதுவானது. அது தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என்று வேறுபடுவதில்லை. அதுபோல, இன்றைய பொருளாதார நெருக்கடி என்பது, இலங்கையின் மேற்றட்டு வர்க்கத்தைத் தாண்டி, அனைத்து மக்களுக்கும் பொதுவானது. அப்படியான நிலையில், அந்த நெருக்கடிக்கு எதிராகப் போராடுவது என்பது இயல்பானது.
அதுவும், தொடர்ச்சியாகப் போராட்ட வழியாக வந்த தமிழ் மக்களுக்கு, அது புதிதானதும் இல்லை. அத்தோடு, ராஜபக்ஷர்களை தோற்கடிக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டிலேயே தமிழ் மக்கள் தொடர்ந்தும் இருந்து வந்திருக்கிறார்கள். அப்படியான நிலையில், ராஜபக்ஷர்களுக்கு எதிராக, தமிழ் மக்கள் போராடுவதை எள்ளி நகையாட முனைவது சிறுபிள்ளைத்தனமானது.
இன்னொரு பக்கத்தில், ராஜபக்ஷர்கள் தங்களுக்கு எதிராக தென் இலங்கையின் எழுச்சியை சமாளிப்பதற்காக, 20ஆவது திருத்தச் சட்டத்தை மீளப்பெற்று 19ஆவது திருத்தத்துக்குத் திரும்புவது பற்றி சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதன் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, அது பாராளுமன்றத்தோடு பகிரப்படும்.
அது, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான கட்டங்களில், சில நல்ல முன்னேற்றங்களை ஏற்படுத்தும் வாய்ப்புகளை உருவாக்கும். குறிப்பாக, இனவாத தரப்புகளை மேலெழாதவாறு பார்த்துக் கொள்ளும் நிலை, ஓரளவுக்கு ஏற்பட்டால் கூட, புதிய அரசியலமைப்பு ஊடாக, சில அடைவுகளை நோக்கி நகரலாம். ராஜபக்ஷர்கள் இன்றைக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சந்தித்து நிற்கும் நெருக்கடி நிலை அதற்கு உதவலாம். அப்படியான நிலையில், ராஜபக்ஷர்களுக்கு எதிரான போராட்டத்தில், தமிழ் மக்கள் நீடித்திருப்பது தவிர்க்க முடியாதது; அவசியமானதும் கூட!
21 minute ago
34 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
34 minute ago
40 minute ago