2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ராஜபக்‌ஷர்கள் முன்னுள்ள வாய்ப்பு

Johnsan Bastiampillai   / 2021 ஒக்டோபர் 12 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

என்.கே. அஷோக்பரன்

twitter: @nkashokbharan

 

 

 

 

சுதந்திரகாலம் முதல் இனமுறுகல், இனவாதம், இனத்தேசியம் ஆகியவற்றால் விளைந்த இனத்துவேசம், இனப்பிரச்சினை ஆகியவற்றுக்குள் சிக்குண்டு, இலங்கை தீவின் அரசியல் சின்னாபின்னமாகி நிற்கிறது.

சுதந்திரகாலம் மற்றும் அதற்கு முற்பட்ட தலைவர்கள் கனவு கண்டது போல, இனத்தேசியவாதம், இனவாதம், இனப்பிரிவினை ஆகியவையற்ற சிவில் தேசமாக, இலங்கை ஒருவேளை கட்டியெழுப்பப்பட்டு இருந்தால், இலங்கையின் நிலை இன்று வேறாக இருந்திருக்கலாம். ஏனெனில், சுதந்திர காலத்திலேயே பொருளாதார ரீதியில் பலமான நாடாகவும் வளமான எதிர்காலத்தை நோக்கிய நாடாகவும் இலங்கை இருந்தது. ஆனால், இனவாத அரசியல் இலங்கையின் தலையெழுத்தை மாற்றிப் போட்டது. 

இனவாதத்துடன் இணைந்த பெருந்திரள்வாத அரசியல், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான இலகுவான வழியாகக் காணப்பட்டமை, அதிகாரத்தைக் கைப்பற்றும் எண்ணமும் சுயநலமும் மிக்க அரசியல்வாதிகளுக்கு இனவாத, பெருந்திரள்வாத அரசியல் மீதான ஈர்ப்புக்குக் காரணமாயிற்று. 

இலங்கையின் பேரினவாத, பெருந்தேசிய அரசியலுக்கு எதிராக, தமிழ்த் தேசிய அரசியல் தற்காப்புத் தேசியமாகப் பிறந்து, வளர்ந்து நிற்கிறது. உண்மையில், இலங்கையில் இனவாத, பெருந்திரள்வாத அரசியலுக்கு மாற்றானதும் வலுவானதுமான அரசியல் முன்னெடுக்கப்படவில்லை என்பது கவலைக்குரிய உண்மை. மிகச் சிறிய, சில கட்சிகள், இதனை முயற்சித்திருக்கலாம், ஆனால், அதை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் வலுவோ, செல்வாக்கோ அவர்களிடம் இருக்கவில்லை. 

இதேவேளை, மக்கள் செல்வாக்கும் கட்சிப்பலமும் பிரபல்யமும் மிக்க அரசியல்வாதிகள், தமக்கு அதிகார பலத்தைப் பெற்றுத்தரவல்ல இனமைய அரசியலைத் தாண்டி, சிந்திக்கத் தயங்கினார்கள். இதன் விளைவு இனவாதம், இனத்தேசியம், இனவெறி எனும் விஷச்சில்லுக்குள், இலங்கை சிக்கிக்கொண்டுள்ளது. 

இலங்கை அரசியலில், குறிப்பிடத்தக்க இடதுசாரிக்கட்சிகள் கூட, இனவாதத்தைக் கக்கியவையாகவும் அதிகாரத்தைக் கைப்பற்ற இனவாதத்தை அமைதியாக ஆதரித்தவையாகவுமே இருந்திருக்கின்றன என்பதும் கவனிக்கத்தக்க வரலாறு. 

முதலாளி வர்க்கம், தொழிலாளி வர்க்கத்தை அடக்குமுறைக்கு உள்ளாக்குகிறது என்றவர்கள் கூட, பெரும்பான்மைத் தேசம், சிறுபான்மைத் தேசங்களை அடக்குமுறைக்கு உள்ளாக்குவது பற்றி அக்கறை கொள்ளவில்லை. 

30 வருட யுத்தம், இலங்கையின் வளர்ச்சியையும் அபிவிருத்தியையும் பெருமளவு பாதித்தது. இலங்கையிலிருந்து பல்லாயிரம் மூளைசாலிகள் வௌியேறினார்கள். இதன் தாக்கத்தை, இன்று மட்டுமல்ல, அடுத்த தலைமுறை கடந்தும் இலங்கை சந்தித்துக் கொண்டேயிருக்கும். இத்தனைக்கும் காரணம், அரசியல்வாதிகளின் சுயநலம். 

எல்லா நாடுகளிலும் தீவிரவாத எண்ணம் கொண்ட, துவேசம் மிக்க வெறுப்பை விதைக்கும் மிகச் சொற்ப மக்கள் கூட்டமொன்று இருந்துகொண்டேயிருக்கும். ஆனால், அவற்றுக்கு அரசியல் முன்னரங்கில் இடங்கொடுக்காமல் இருப்பதில்தான், அந்நாட்டின் எதிர்காலம் தங்கியிருக்கிறது. உதாரணத்துக்கு நோர்வே, பின்லாந்து, கனடா போன்ற நாடுகளில், இனத்துவேச எண்ணம் மிக்கவர்கள் இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஆனால், அந்த நாடுகளின் அரசியல் முன்னரங்கில், இனவாதத்துக்கு இடமளிக்கப்படுவதில்லை.

இலங்கை அரசியலிலும் அது முடியாத காரியமல்ல. ஆனால், அந்த மாற்றத்தைச் செய்வதற்கு, பலமும் தன்னம்பிக்கையும்  முதுகெலும்பும் உள்ள அரசியல் தலைவர்கள் அவசியம் தேவை.

இன்று, ஆளுங்கட்சியினரை இனவாதிகள் என்று சொல்லிக்கொண்டு, அதே இனவாதத்தைப் பயன்படுத்தி, தாமும் ஆட்சியைக் கைப்பற்றிவிட முடியாதா என்று அவாக்கொள்ளும் எதிர்க்கட்சிகளைத்தான் நாம், பார்த்துக் கொண்டிருக்கிறோம். எம்மில் யார் பெரிய இனவாதி என்ற போட்டிதான், இலங்கையின் தேசிய அரசியலுக்கு உரமாக அமைகிறது. 

இதற்கு மிக முக்கிய காரணங்களாக அமைவது, அரசியல் தலைவர்கள் என்று தம்மை முன்னிறுத்துவோரின் ஆளுமைக்குறைவும் தன்னம்பிக்கை இன்மையும் நேர்மையின்மையும் குறுகிய சிந்தனையும் சுயநலமும்தான்!

‘சிறிய அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரைக் கொண்ட குழுவொன்றின் முயற்சிகள் புறநிலையாகவும், எந்தவொரு சுயநலமும் இல்லாமல் செயற்படும்போது, பெரும்பாலும் தீர்க்க முடியாத சிக்கல்களை அதனால் தீர்க்க முடியும்’ என்று  நெல்சன் மண்டேலா குறிப்பிடுவதை, இங்கு கவனிக்க வேண்டும். அத்தகைய தலைவர்கள், இன்றுவரை இலங்கைக்கு கிடைக்கவில்லை. 

ஆங்காங்கே சில ஒளிக்கீற்றுகள் தோன்றியிருப்பினும், அவை மின்மினிகளைப் போல விரைவில் மறைந்துவிட்டன. ஓர் உதாரணத்துக்கு சந்திரிகா குமாரதுங்கவின் அரசியல் பிரவேசத்தைக் குறிப்பிடலாம். சந்திரிகாவின் அரசியல் எழுச்சி, சமாதானத்துக்கான நம்பிக்கையை விதைத்திருந்தது. ஆனால், அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவதில், சந்திரிகா தவறியது மட்டுமல்லாது, தான் கொடுத்த நம்பிக்கைக்கு நேரெதிராகவும் செயற்பட்டார். 

தமிழ்த் தலைமைகளும் ஒன்றும் சிறப்பானவர்கள் அல்ல; பேரினவாதத்துக்கு எதிரான, தமிழ்த் தேசிய அரசியலை அவர்கள் உணர்ச்சிவயப்பட்ட, வாய்ச்சொல் பகட்டாரவார அரசியலாக முன்னெடுத்தார்கள். அது மட்டும்தான் அவர்களுக்குத் தெரியும். காலங்காலமாக அதையே செய்து, தமது பதவிகளைக் காப்பாற்றிக்கொண்டு, வயிறுவளர்த்து வரும் கூட்டமாக அவர்கள் இருக்கிறார்கள். 

பெரும்பாலும் வயிற்றுப்பிழைப்புக்கு அரசியலில் தங்கியவர்களாக அவர்கள் இருப்பதால், அரசியல் பிழைப்புவாதத்தை உறுதிப்படுத்தும் வாய்ச்சொல் பகட்டாரவார அரசியலைத் தாண்டிச் சிந்திக்க அவர்கள் தயாராக இல்லை. அப்படிச் சிந்திக்கும், செயற்படும் புதியவர்கள் யாராவது வந்தாலும், அவர்களைத் ‘துரோகி’கள் என்று முத்திரை குத்தி, ஓரங்கட்டி விடுகிறார்கள். 

அழிவுப்பாதை அரசியலிலிருந்து தமிழ் மக்களை மீட்டெடுத்து, வழிகாட்டும் அளவுக்கான அறிவோ, அனுபவமோ, ஆற்றலோ, தன்னம்பிக்கையோ, இயலுமையோ இல்லாதவர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள்.  

இதுதான் இலங்கை அரசியலின் நிலை. இந்த அரசியல் தலைமைகளின் இயலாமையால்தான், இன்று இனவாத, இனவெறி அரசியலுக்குள் இலங்கை உழன்று கொண்டும், எதிர்காலத் தலைமுறையின் சிந்தனையைப்  பாழாக்கிக்கொண்டும் இருக்கிறது. அப்படியானால் இதற்கு மாற்றே இல்லையா?

இலங்கையின் இந்த இனவாத, அரசியலை மாற்றும் பலம், ஒருமுறை ஒருவரின் கையில் இருந்தது. 2009இல், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தபோது, அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிடம், இலங்கை வரலாற்றில் அதுவரை காலமும் எந்தத் தலைவரிடமும் இல்லாத ஒரு பலம் இருந்தது. 

‘இத்தோடு இனவாத, இனவெறி அரசியலை முடிவுக்குக் கொண்டு வருவோம்’ என்று மஹிந்த தீர்மானித்திருந்தால், அதன் பின்னர் ஒன்றுபட்ட இலங்கையை கட்டியெழுப்பவும் ஓர் அரசுக்குள் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை வழங்கி, அனைத்து மக்களும் சுயமரியாதை, சுயகௌரவம், சுயநிர்ணயத்துடன் வாழ வழிசமைத்திருந்தால், அது இலங்கையின் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்திருக்கும்.

‘யுத்தத்தை வெற்றிகொண்ட’ மஹிந்த ராஜபக்‌ஷ அதைச் செய்திருந்தால், அதைத் தட்டிக்கேட்கவும் எதிர்க்கவும் எந்தவொரு பேரினவாதியாலும் முடியாதிருந்திருக்கும். ஆனால், அதைச் செய்யும் பலமும் தன்னம்பிக்கையும் அன்று மஹிந்தவிடம் இருக்கவில்லை என்பது வரலாற்றுச் சோகம். மஹிந்த ராஜபக்‌ஷவைத் தோற்கடித்து, 2015இல் வந்த அரசாங்கம் செய்தது வரலாற்றுத் துரோகம். அதைப் பற்றிப் பேசுவது கூடப் பயனற்றது. 

மீண்டும் பெருவெற்றி பெற்று, ராஜபக்‌ஷர்கள் ஆட்சிப்பீடமேறி, இரண்டு ஆண்டுகள் ஆகப்போகின்றன. கடந்த ஓராண்டுக்கும் மேலாக, பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையையும் கொண்டிருக்கிறார்கள். இலங்கையின் இனப்பிரச்சினை வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய வாய்ப்பு இன்னும் ராஜபக்‌ஷர்களிடம் இருக்கிறது. 

2009இல் இருந்ததைப் போன்ற தார்மீக பலம் இல்லாவிட்டாலும், பெரும்பான்மையினரை நம்பிக்கை கொள்ளச்செய்யத்தக்க இயலுமை அவர்களிடம் இருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தை, எல்லா ராஜபக்‌ஷர்களும் ஒன்றிணைந்து, இலங்கையின் வரலாற்றை மாற்றியமைக்கப் பயன்படுத்த வேண்டும். 

எந்த அரசாங்கத்தாலும், மிக இலகுவாக அத்தியாவசியப் பொருட்கள் மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்க முடியாது. ஆனால், ராஜபக்‌ஷர்கள் அதைக்கூடச் செய்தார்கள். அது காலத்தின் அத்தியாவசியத் தேவையாக இருக்கலாம். ஆனால் அதைச் செய்யும் பலம், அவர்களிடம் இருக்கிறது. 

இன்று, கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனையம், இந்தியாவின் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இத்தகைய தனியார் மயமாக்கல்களை ஐ.தே.க, தொழிற்சங்கங்களின் செல்வாக்கைக் கடந்து செய்ய முடியவில்லை. ஆனால்,ராஜபக்‌ஷர்களால் அந்த எதிர்ப்புகளை இலகுவாகக் கடந்து, அதைச் செய்ய முடிந்திருக்கிறது.

இன்றைய சூழலில், இலங்கையின் இனவாத அரசியல் பாதையை மாற்றி அமைக்கக் கூடிய வலு, ராஜபக்‌ஷர்களிடம்தான் இருக்கிறது; அதற்கான அருமையான சந்தர்ப்பமும் இருக்கிறது. 

அவர்கள் இனவாத அரசியலைக் கைவிட்டு, இலங்கையை வளமான பாதைக்கு அழைத்துச் செல்வார்களா? அல்லது, 2009ஐப் போலவே, குறுகிய சுயநல அரசியலை முன்னெடுத்துவிட்டுப் போய்விடுவார்களா என்பதுதான், இங்கு கேள்வி. இலங்கையின் எதிர்காலம், இன்று அவர்களின் கையில் இருக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X