Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Thipaan / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர், வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்களை விரட்டியடித்து இம்மாத இறுதியோடு கால்நூற்றாண்டு பூர்த்தியாகிறது. அவ்வாறு வட மாகாணத்தில் இருந்து விரட்டப்பட்டவர்களில் குறிப்பிடத்தக்களவினர் இன்னமும் தமது பழைய இடங்களில் குடியேறவில்லை.
புலிகள் மீதான வெறுப்பின் காரணமாக சிலர் இந்த வெளியேற்றத்துக்;கு ஒரு விதமாக விளக்கமளிக்கிறார்கள். வேறு சிலர் தனிப்பட்ட அல்லது அரசியல் போன்ற வேறு காரணங்களினால் அயலவர்களாக வாழும் முஸ்லிம்களுடன் ஏற்பட்ட பகைமைகள் காரணமாக, வேறு விதமாக அதற்கு விளக்கமளிக்கிறார்கள். உண்மை என்னவென்றால் உண்மையிலேயே புலிகள் என்ன நோக்கத்துக்காக இவ்வாறு செய்தார்கள் என்று தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் இன்னமும் தெரியாது என்பதே.
வட மாகாணத்தில் இருந்து இவ்வாறு புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கையும் உத்தியோக பூர்வமாக சரியாக எந்தவொரு அரச நிறுவனமும் இன்னமும் வெளியிடவில்லை. சிலர் ஒரு லட்சம் பேர் விரட்டியடிக்கப்பட்டார்கள் என்கிறார்கள். வேறுசிலர் அந்த எண்ணிக்கை 70,000 பேர் என்கிறார்கள். எனவே அந்தக் காலத்தில், அதாவது 1990ஆம் ஆண்டு குறைந்த பட்சம் 70,000 பேர் வெளியேற்றப்பட்டார்கள் என்பதே உண்மை.
ஒரு சில மணித்தியாலத்துக்குள் வட மாகாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற வேண்டும் என்றே புலிகள் 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு கட்டளையிட்டு இருந்தார்கள். ஒக்டோபர் 30ஆம் திகதிக்குள் மன்னார், முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் வாழ்ந்த முஸ்லிம்களும் அவ்வாறே பணிக்கப்பட்டார்கள். தமிழீழத்தில் சம்பாதித்த எதையும் எடுத்துச் செல்லக்கூடாது என்ற கட்டளையோடே அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். குறைந்த பட்சம், குழந்தைகளுக்கான பால் மா பக்கெட்டைக் கூட எடுத்துச் செல்லக் கூடாது என்பதே, புலிகளின் அப்போதைய யாழ்ப்பாணத் தளபதியாகவிருந்த ஆஞ்சநேயரின் கட்டளையாகவிருந்தது.
இந்த வெளியேற்றத்தின் போது, இது போன்ற நூற்றுக் கணக்கான தனித்தனிச் சம்பவங்கள் இடம்பெற்ற போதும், அச்சம்பவங்களைக் கிளறி உணர்ச்சிகளைத் தூண்டுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. போரின் போது இடம்பெற்ற சம்பவங்களைப் பற்றி சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பபுக் கூற வேண்டும் என இப்போது தமிழ்த் தலைவர்கள் உட்பட பலர் கருத்து வெளியிட்டு வருகிறார்கள். இது அதற்கான தூண்டுதலும் அல்ல. இந்த மாபெரும் மக்கள் வெளியேற்றத்துக்குப் பொறுப்புக் கூற வேண்டிய புலிகளும் இப்போது இல்லை. எனவே, இது வரலாற்றில் இடம்பெற்ற ஒரு முக்கிய நிகழ்வை புரிந்து கொள்ள எடுக்கும் ஒரு முயற்சியே.
கிழக்கு மாகாணத்தின் பல இடங்களில், முஸ்லிம்களினால் தமிழர்கள் இம்சிக்கப்பட்டார்கள் என்றும் அதன் விளைவாக வட மாகாண முஸ்லிம்கள், தமிழ் மக்களால் இம்சிக்கப்படலாம் என்றும் எனவே, முஸ்லிம்களின் பாதுகாப்புக்காகவே அவர்களை வெளியேற்றினோம் என்றும் அக் காலத்தில் தமிழ்ச்செல்வன் போன்ற புலிகளின் சில தலைவர்கள் கூறியிருந்தார்கள். ஆனால், அவ்வாறானதோர் முறுகல் நிலை, வட பகுதி முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே இருக்கவில்லை என்பதே உண்மையாகும்.
முஸ்லிம்கள் வெளியேறும் போது, யாழ்ப்பாணத்தில் சில தமிழர்கள் கதறி அழுததாக, வட மாகாணத்தில் இருந்து வெளியேறி தென்பகுதிக்கு வந்த முஸ்லிம்கள், ஊடகவியலாளர்களான எம்மிடம் அக் காலத்தில் கூறினார்கள். தமிழர்களிடமிருந்து ஆபத்து ஏற்படலாம் எனக் கூறி, புலிகள், முஸ்லிம்களை வெளியேற்றினாலும் வெளியேறும் மக்களுக்கு புலிகள் இடைவழியில்; பாதுகாப்பு வழங்கவில்லை.
அம் மக்கள், தமிழ் மக்கள் வாழும் பகுதிகளின் ஊடாக வட மாகாணத்தை விட்டு வெளியேறும் வரை அவர்களுக்கு எவ்வித ஆபத்து ஏற்படவும் இல்லை. குறைந்த பட்சம் தமிழர் எவரும் வெளியேறும் மக்களைப் பார்த்து அவதூறாக பேசியதாகவாவது செய்திகள் வரவில்லை. மாறாக, வழி நெடுகிலும் தமிழர்களே தம்மை உபசரித்தார்கள் எனவும் அம் மக்கள் ஊடகவியலாளர்களிடம் அப்போது கூறினார்கள்.
பாதுகாப்புக்காகத் தான் அவர்களை வெளியேற்றுவதாக இருந்தால், அது தற்காலிகமான வெளியேற்றமாகத் தான் இருக்க வேண்டும். அவ்வாறாயின், அவர்கள் தமிழ் ஈழத்தில் சம்பாதித்த எதனையும் எடுத்துச் செல்லக்கூடாது என்று கட்டளையிடத் தேவையில்லை.
1983ஆம் ஆண்டு ஜூலை மாதம், அரசியல்வாதிகளின் தலையீட்டில் பெரும்பான்மையினக் குண்டர்களினால் தமிழர்களுக்கு எதிராக நாடு பூராவிலும் பாரிய தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அதில் நூற்றுக் கணக்கானோர் கொல்லப்பட்டனர். அப்போது பதவியில் இருந்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் அரசாங்கம், பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொழும்பு போன்ற சில பகுதிகளில் அகதி முகாம்களை அமைத்தது. பின்னர் அவர்களது பாதுகாப்புக்காகவென, அவர்களில் பலரை கப்பல்களில் ஏற்றி வட பகுதிக்கு அனுப்பியது. தமது பிரஜைகளான மக்களில் ஒரு சாராருக்கு பாதுகாப்பு வழங்க முடியாமல் அரசாங்கம் அவர்களைத் தெற்கிலிருந்து வெளியேற்றுவதாக அப்போது தமிழ் தலைவர்கள் குற்றஞ் சாட்டினர். அது உண்மையே.
முஸ்லிம்களை வெளியேற்றியமைக்கு அவர்களது பாதுகாப்பே காரணம் என புலிகள் கூறுவதாக இருந்தால், அவர்களும் 1983ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன செய்ததையே செய்திருக்கிறார்கள். நாளை தனி நாடொன்றை அமைத்து அந் நாட்டை ஆளப் போகும் ஓர் அமைப்பு என்ற வகையில் தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் வாழும் ஒரு சமூகத்தை பாதுகாக்க அவர்களால் முடிந்திருக்க வேண்டும். அவ்வாறு முடியாது எனக் கூறி அவர்களை வெளியேற்றுவதானது கொடூரச் செயல்மட்டுமன்றி, அவர்களது இலட்சியத்துக்கே பொருத்தமற்ற செயல் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை போலும்.
குறிப்பிட்ட ஒரு சமூகத்தை குறிப்பிட்டதோர் நிலப்பரப்பிலிருந்து வெளியேற்றுவதோ, அவர்களை கொன்று விடுவதோ நடைமுறையில் இனச் சுத்திகரிப்பு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், வட மாகாணத்தில் வாழ முஸ்லிம்களுக்கு உரிமை இல்லை என புலிகள் ஒரு போதும் கூறவில்லை. வெளியேறிய மக்கள் திரும்பி வருவதை தடுக்கும் வகையில் சில நடவடிக்கைகளை எடுத்தாலும் அவர்கள் மீண்டும் வரக்கூடாது என்றும் அவர்கள் ஒரு போதும் கூறவில்லை.
ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தோடு 2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் போர் நிறுத்த உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்ட புலிகளின் தலைவர் பிரபாகரன், 2002ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் திகதி கிளிநொச்சி அருகே உள்ள ஓர் இடத்தில் சர்வதேச மட்டத்திலான மாபெரும் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தினார். முஸ்லிம்கள், வட பகுதிக்கு மீண்டும் வரலாம் என அப்போது பிரபாகரனும் கூறினார்.
அதன் பின்னர், அதே மாதம் 14ஆம் திகதி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் உட்பட மு.கா. தூதுக்குழுவொன்று பிரபாகரனை கிளிநொச்சியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு மீண்டும் தமது பழைய இடங்களில் குடியமர இடமளிப்பதாகவும் அதற்கான வசதிகளை செய்து கொடுப்பதாகவும் பிரபாகரன் கூறியிருந்தார். இரு தலைவர்களும் அந்த சந்திப்பின் இறுதியில் வெளியிட்ட கூட்டறிக்கையிலும் அது குறிப்பிடப்பட்டது.
ஆனால், 'வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள்' என்ற பதத்தை அந்த அறிக்கையில் பாவிப்பதை புலிகள் விரும்பவில்லை. 'வெளியேறிய முஸ்லிம்கள்'என்றே அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல முஸ்லிம் அமைப்புக்கள் இதற்காக மு.கா.வை இன்னமும் விமர்சிக்கின்றன. ஆனால், அவ்வாறு விமர்சிப்பவர்கள் அன்று பிரபாகரனுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும் அவர், 'வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள்' என்ற பதத்தை பாவிக்க இணங்கப் போவதில்லை.
அந்தச் சொல்லுக்காக வாதாடியிருந்தால், வட பகுதி முஸ்லிம்களுக்கு திரும்பி வர இடமளித்தல் மற்றும் கிழக்கு மாகாண முஸ்லிம்களிடம் வரி அறவிடுவதில் சில சலுகை வழங்குதல் உள்ளிட்ட அந்த கூட்டறிக்கையே வெளிவந்திருக்காது. புலிகள் பின்னர் ஒரு தலைப்பட்சமாக அந்த இணக்கப்பாடுகளை இரத்துச் செய்தமை வேறு விடயம்.
1980க்கும் 2009க்கும் இடைப்பட்ட காலத்தில் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் சின்னம் புலிகளே என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தனி நாட்டுக் கோரிக்கை சரியோ, பிழையோ அக் காலப் பகுதியில் புலிகள் தான் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் அடையாளமாக திகழ்ந்தார்கள். ஆனால், அந்த உரிமைப் போராட்டத்தையே பாதிக்கக் கூடிய சில மாபெரும் தவறுகளைப் புலிகள் ஏன் செய்தார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியாதிருக்கிறது.
முதலாவதாக, அவர்கள் சாதாரண சிங்கள மக்களைக் கண்மூடித்தனமாக படுகொலை செய்வதன் மூலம் தமக்கு ஆதரவாக இருந்த சிங்கள புத்திஜீவிகளை பகைத்துக் கொண்டார்கள். 1980களில் சரத் முத்தெட்டுவேகம போன்ற கம்யூனிஸத் தலைவர்கள் புலிகளையும் புளோட் போன்ற அமைப்புக்களையும் தமிழர்களின் ஜனநாயக சக்திகள் என்றே அழைத்தனர்.
அக் காலத்தில், அனுராதபுரத்தில் ஸ்ரீ மகா போதி அருகே சமய வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பௌத்த மக்களை புலிகள் படுகொலை செய்த போதும் சில இடதுசாரிப் போக்குடைய சிங்கள அரசியல்வாதிகள் அதனை அரசியல் செயற்பாடாக வர்ணித்தனர்.
ஆனால், அது போன்ற சம்பவங்கள் அதிகரிக்கவே அதே சிங்களத் தலைவர்கள் பின்னர் புலிகளை பயங்கரவாதிகள் என்று அழைக்கும் நிலை உருவாகியது.
அக் காலத்தில் முத்தெட்டுவேகம, வாசுதேவ நாணயக்கார, விக்கிரமபாஹு கருணாரத்ன போன்ற இடதுசாரிகள், தமிழ் மக்களுக்காக பகிரங்கமாகவே சிங்கள மக்கள் மத்தியில் வாதாடினார்கள். மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் மக்களின் சுய உரிமை உரிமையை ஏற்று ஒரு புத்தகத்தையும் வெளியிட்டு இருந்தது. 1984ஆம் ஆண்டளவில் கிழக்கு மாகாணத்தின் நற்பிட்டிமுனையில் 35 தமிழ் இளைஞர்கள் உயிரோடு புதைக்கப்பட்டதாக ஒரு வாந்தி பரவியது. அதனைப் பற்றி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முத்தெட்டுவேகம, இது உண்மையாக இருந்தால் எனது இனம் இந்தளவு மிலேச்சத்தன்மை கொண்ட இனமாக இருப்பதையிட்டு நான் வெட்கப்படுகிறேன் என்றார்.
இவ்வாறு தமது சமூகத்தின் கொடூரங்களை விமர்சிக்கும் நிலையிலிருந்த சிங்கள புத்திஜீவிகளை புலிகளின் செயற்பாடுகள் மௌனமாக்கிவிட்டன.
1991ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலை மூலம் இந்தியாவை பகைத்துக் கொண்டமை புலிகள் செய்த, ஆனால் எம்மால் புரிந்து கொள்ள முடியாத மற்றொரு விடயமாகும். தமிழர்களின் உரிமை போராட்டத்தில் இந்தியா ஆற்றிய, அதேபோல் ஆற்றக்கூடிய பங்கினைப் புலிகள் ஏன் புரிந்து கொள்ளவில்லை என்பது ஆச்சரியத்துக்குரிய விடயமாகவே இருக்கிறது.
தமது உரிமைப் போராட்டத்தில் பங்காளிகளாக்கிக் கொள்ள வேண்டிய முஸ்லிம்களை அந்நியப்படுத்தியமையும் அதேபோல் புரிந்து கொள்ள முடியாத விடயமாகும். ஆனால், இந்த விடயத்தில் ஏனைய தமிழ்க் கட்சிகள் மற்றும் அமைப்புக்களும் சாதாரண தமிழ் மக்களும் நடந்து கொண்ட விதம் முற்றிலும் வித்தியாசமானதாகும்.
புலிகள் தான் முஸ்லிம்களை வெளியேற்றுகிறார்கள் என்பதை நன்றாக அறிந்திருந்தும் வெளியேறும் மக்களுக்கு உதவி வழங்க சாதாரண மக்கள் அச்சமின்றி முன்வந்தார்கள். புலிகளைத் தவிர்ந்த ஏனைய சகல தமிழ்க் கட்சிகளும் அமைப்புக்களும் இந்த வெளியேற்றத்தை விமர்சித்தன, எதிர்த்தன.
'வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீண்டும் அவர்களது இடங்களில் குடியமர்த்தும் வரை நான் யாழ்ப்பாணத்துக்குப் போக மாட்டேன்' என 1990களின் ஆரம்பத்தில் தமிழர்களின் பிரதான அரசியல் கட்சியான தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் மு. சிவசிதம்பரம் சபதம் செய்தார். அதேபோல் அவர் போகவும் இல்லை. ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துடன் புலிகள் பேச்சுவார்த்தை நடத்தும் காலத்தில் உயிரிழந்த அவரது பூதவுடல் தான் யாழ்ப்பாணத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
புலிகளின் தனி நாட்டுக் கொள்கையையும்; அவர்களது சில நடவடிக்கைகளையும் நாம் ஏற்றுக் கொல்லாவிட்டாலும் அவர்களது போராட்டம் போலியானது என்று எவராலும் கூற முடியாது. தமது இலட்சியத்துக்காக புலிகள் செய்ததைப் போன்ற தியாகங்களை இலங்கை வரலாற்றில் எவருமே செய்ததில்லை.
போர்களின் போது, நிர்ப்பந்தங்களின் காரணமாக பலர் அசாதாரண தியாகங்களைச் செய்கிறார்கள். ஆனால், பல மாதங்களுக்கு முன்னர் திட்டமிட்டு தமது உடலில் குண்டைக் கட்டிக் கொண்டு அதனை வெடிக்கச் செய்வதற்கு அசாதாரண தைரியமும் தியாக மனப்பான்மையும் இருக்க வேண்டும். அது நிர்ப்பந்தம் அல்ல. போலியான நோக்கங்களுக்காக எவருக்கும் அவ்வாறு செய்ய முடியாது.
ஆனால், அவ்வாறு தியாகம் செய்து அடையப் போகும் இலட்சியத்தையே பாதிக்கக் கூடிய தவறுகளை சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் போது, புலிகள் ஏன் புரிந்து கொள்ளவில்லை என்பது எம்மால் புரிந்து கொள்ள முடியாத விடயமாக இருக்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
2 hours ago