2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வாக்குவாதங்களை உருவாக்கியிருக்கும் வளச் சுரண்டல் விவகாரம்

Johnsan Bastiampillai   / 2021 ஒக்டோபர் 20 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

லக்ஸ்மன்

கிழக்கில் மாத்திரமல்ல, முழு நாட்டிலும் முக்கிய பேசு பொருளாக, அந்தந்தப் பிரதேசங்களின் வளங்கள் சுரண்டப்படுதல் மாறியிருக்கிறது. வடக்கு கிழக்கில் நீண்டகாலமாக கல், மணல் அகழப்பட்டுவந்தாலும் 2009இல் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் மிகப் பெரும் மாபியாவினுடைய தொழிலாக மாறி வளர்ந்திருக்கிறது. மண்ணினுடைய பாதுகாப்புப் பற்றிப் பேசியவர்களின் முக்கிய வருமானமீட்டும் துறையாகவும் இது இருக்கிறது.

இந்நிலையில்தான், வடக்கு- கிழக்கிலுள்ள வளங்களைக் கொண்டு  நாட்டை அபிவிருத்தி செய்யத் தேவையான வேலைத்திட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் இருக்கின்றது போன்ற விடயங்களை கடந்த நாடாளுமன்ற அமர்வில் இரா.சாணக்கியன் பேசினார்.  அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மணல் அனுமதிபத்திரம் பெற்றுக்கொண்டுள்ளனர் என்ற ஒரு கருத்தையும் முன்வைத்தார். அது வெறும் கருத்தல்ல ஆதாரங்களையும் கூட வெளிப்படுத்தியிருந்தார். அதனையடுத்து நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சில விடயங்கள் சற்று விமர்சனத்துக்குரியவையாக இருக்கின்றன.

காரணம், உரையையடுத்து சாணக்கியாவே வெளியிட்ட நாடாளுமன்றத்தில் நிகழ்த்தப்படும் உரை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கும் நிலையுள்ளதனால் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்திலும் மக்கள் பிரதிநிதிகள் உரையாற்றுவதற்கு அச்சங்கொள்ளும் நிலையேற்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமை என்ன என்பது கூட தெரியாமல், கிழக்கு மாகாண ஆளுநர் நடந்துகொள்வது மிகவும் கவலையான விடயம். 

கிழக்கு மாகாண ஆளுநரை பொறுத்தவரையில், அவர் கிழக்கு மாகாணத்தில் முற்றுமுழுதாக தமிழ் பேசும் மக்களுடைய விடயங்களை சரியான வகையில் கையாளாதவராகவே இருந்துவருகிறார். கிழக்கு மாகாண ஆளுநரின் செயற்பாடுகள் பொலிஸாரையும் நெருக்கடிக்குள் தள்ளும் செயற்பாடாகவேயுள்ளது. 

அவருடைய களுவாஞ்சிகுடியிலுள்ள அலுவலகத்திற்கு திருகோணமலையிலிருந்து வருகை தந்திருந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் கடந்த 10.09.2021 சிங்கள பத்திரிகையொன்றில் கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்திருந்த செய்தியொன்று வெளிந்திருந்தது. அதில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் 07ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்தினை வைத்து ஆளுநரினால் சிரேஸ்ட பொலிஸ்மா அதிபரிடம் 09ம் திகதி ஒரு முறைப்பாடு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை தொடர்பில் விசாரணை செய்யவுள்ளதாகக் கூறியிருக்கிறார்.  அதே போன்று கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னரும் கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப்பொலிஸ்மா அதிபர் மண் அகழ்வு விடயமாக கேட்கவிரும்புவதாக கூறியிருக்கிறார்.

கிழக்கில் கடந்த காலத்தில், மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரைக் காணி விடயம் பூதாகாரமாகவே மாறியிருக்கிறது. ஆனால் அது தொடர்பிலான வர்த்தமானிப் பிரகடனத்தினை வெளியிடுவதற்கான வேலைகள் எதுவும் நடைபெறவில்லை. ஆனால், அதில் கிழக்கு மாகாண ஆளுநரின் செயற்பாடுகள் தொடர்பில் பல விமர்சனங்கள் உள்ளன. மண் மாபியாக்களை கட்டுப்படுத்தல் குறித்த  அணுகுமுறைகள், மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் அவர் நடந்துகொள்ளும் விதங்கள், கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களின் நலன்களை விட ஏனையவர்களின் நலனையே நோக்காகக் கொண்டதாக இருக்கிறது என்ற விமர்சனத்தையும் சாணக்கியன் முன்வைத்திருக்கிறார்.  

சுாணக்கியனுடைய மணல் அகழ்வு தொடர்பான நாடாளுமன்ற உரையை அடுத்து ஊடக சந்திப்பொன்றை நடத்திய இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்,  சாணக்கியன் முதலில் தமிழ் மொழியை கற்க வேண்டும்; மண்அனுமதி பத்திரம் சம்பந்தமாக எனது தம்பிக்கு எவ்வித தொடர்புகளும் இல்லை. வெறும் அரசியலுக்காக இவ்வாறு உண்மைக்கு புறம்பான தகவலை வெளியீட்டுயிருக்கின்றார்.  எனது தம்பி  மண் அனுமதி பத்திரம் வைத்துள்ளதாக உண்மைக்கு புறம்பான தகவலை வெளியீட்டிருந்தார். அரசியலுக்காகவும் எதிர்வரும் தேர்தலுக்காகவும் ஆதாரமில்லாத தகவலை தெரிவித்திருக்கிறார். ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் எந்த வித மண்அனுமதி பத்திரமும் எனது தம்பிக்கு இல்லையென ஆதாரம் எம்மிடம் உள்ளது. அவர் சண்முகநாதன் மயூரன் என்பதனை தவறுதலாக சாதாசிவம் மயூரன் என தெரிவித்திருக்கிறார் என்று கூறியிருந்தார்.

அத்துடன், எமது மாவட்டத்தை நானும் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனும் எமது கட்சி அமைப்பாளர் சந்திரகுமாரும் மக்களுக்காக பல நன்மையுள்ள  அபிவிருத்திகளை முன்னெடுத்து வருகிறோம். இதனை தடுக்கவே இவர் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெக்கின்றார்.  நீங்கள் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற முன்வருங்கள். மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளை தடுக்காமல் இதனை தடுக்க இணைந்து பணியாற்ற முன்வாருங்கள் என்றும் வியாழேந்திரன் தெரிவித்திருக்கிறார்.

இக்கருத்தானது ஏட்டிக்குப் போட்டியானதாக இருந்தாலும் கிழக்கு மண்ணில் இல்லாத ஒன்று விவாதிக்கப்படவில்லை. அரசியல்வாதிகள் தங்களுடையதும், தங்களுக்குத் தெரிந்தவர்களுடையதும் எனப் பல பினாமிகளை வைத்துக் கொண்டு தமது வருமானத்துக்கான தொழிலாக மணல் அகழ்வினை நடத்திவருகின்றனர் என்பதுவே மக்கள் மத்தியில் பதிவாகியிருக்கின்ற உண்மையாகும்.

 அதே போன்று, ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழான சௌபாக்கிய உற்பத்தி கிராமங்களை உருவாக்கும் வேலைத்திட்டங்களின் அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றியுள்ள மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், இந்த நாட்டின் பொருளாதாரம் தாழ்த்தப்படவேண்டும் என்று செயற்படுகின்ற அரசியல் சக்திகளின் மத்தியிலேயே மாற்று சிந்தனையுடன் இந்த நாட்டினை கட்டியெழுப்பும் பணிகளை முன்னெடுத்துவருகிறோம் என்று தெரிவித்திருக்கிறார். இவருடைய கருத்தும் ஒருவகையில் சாணக்கியனுடைய நாடாளுமன்ற உரை தொடர்பிலான உறுத்தலாகவே பார்க்கப்படுகிறது. 

நீண்டகாலமாகவே நடைபெற்று வருகின்ற கல், கிறவல், மணல் அகழ்தலானது வருமானமீட்டுகின்ற ஆக்கிரமிப்பு சார் தொழிலாக இல்லாமல், மக்களது வாழ்வாதாரத்தினையும் வாழ்க்கையினையும் பாதிக்காத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றே மக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த நிலையினை உருவாக்குவதற்காகவும் வளச் சுரண்டல்களைக் கட்டுப்படுத்துவதற்காகவும் மக்கள் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களையும், கவனயீர்ப்புப் போராட்டங்களையும் நடத்தியிருந்தாலும் அவற்றால் பயன் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. மக்களுக்குப் பயன்கள் கிடைப்பதனைவிடவும் அதிகாரம் படைத்தவர்களுக்கு வருமானம் அதிகரிப்பதையும் பயன் கிடைப்பதனையுமே நிருவாகத்தரப்பினர் விரும்புகின்றளர் என்பதே இதற்குக் காரணம்.

கட்டட அமைப்பதென்பது இருப்பு சார்ந்த ஒன்று. ஆனால் சாதாரண மக்கள் தங்கள் வாழ்க்கையையே இதற்காக அர்ப்பணம் செய்துவிட வேண்டும் என்ற நிலைமையே இந்த மாபியாத் தனமான மணல் அகழ்வினால் உருவாகியிருக்கிறது. சாதாரணமாக 10ஆயிரம் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்ட மணல் இப்போது 30 ஆயிரம்  ருபா வரை விலையேற்றம் பெற்றுள்ளது. இதற்கான காரணம் வெளி மாகாணங்களை, மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமையும், அவர்களுடைய இடங்களுக்கும் வெளி நாடுகளுக்கு மணல் விற்பனை செய்யப்படுவதுமாகும். இதற்கு மாற்றீடான செயற்பாடொன்றை அரசாங்கம் முன்நகர்த்த வேண்டும். குறிப்பிட்ட மாவட்டத்திலேனும் கட்டுப்பாட்டு விலை ஏற்படுத்தப்படுவது சிறந்த பரிகாரமாக இருக்கும்.

மண் வளமானது தொடர்ச்சியாக அகழப்படுவதனால் மாவட்டத்தில் பல்வேறு குற்றச்செயல்கள் நடைபெறுவதுடன், வெள்ளம், மண்சரிவு, ஆறு கொள்ளல் போன்ற அனர்த்தங்களும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அனுமதிப்பத்திரங்கள் வெறுமனே விவரங்கள், பத்திரங்களின் சரிபார்த்தலுடன் மாத்திரம் முடிவுக்கு கொண்டுவரப்படாமல் அளவுகளுக்கேற்பவும் இருப்புகளுக்கேற்பவும் நடைபெறவேண்டும். அவ்வாறில்லாமல் நினைத்த இடங்களிலெல்லாம் மணல் அகழ முடியும் என்ற தன்மையில்   புவிச்சரிதவியல் அளவை சுரங்கப்பணியகத்தினால் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

வளங்கள் சுரண்டப்படுவதானது, பிரதேசங்களில் அபிவிருத்திகள் என்று சொல்லப்படுகின்ற வீதிகள் போடப்படுதல், வடிகான்கள், கட்டடங்கள் அமைக்கப்படுதல் என்பவற்றுக்கப்பால் மக்களின் வாழ்வாதாரங்கள் இழக்கச் செய்யப்படுதல், இயலாத நிலையை உருவாகச் செய்தல், அனர்த்தங்களை எதிர் கொள்ளல், அவற்றுக்கு முகம் கொடுக்க முடியாத நிலை உருவாதல் போன்ற பாதகங்களைக் கொண்டுவருமானால் பிரதேச, மாவட்ட, மாகாணம் என்பதற்கப்பால் நாட்டைப் பாதகமான பாதாளத்துக்கே கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமில்லை. வெளித் தோற்றங்களுக்கப்பால் உள்ளே இருப்பவைகள் சிறப்பாக அமையும் போதுதான் அதன் பெயர் சரியான அபிவிருத்தியாக இருக்கும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .