2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

வீரம், செல்வம், கல்வி தரும் ஒன்பது இரவுகள்

Johnsan Bastiampillai   / 2021 ஒக்டோபர் 10 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
 
 
சி. சிவமலர் 
ஆசிரியை  (சைவ சமயம்)
 
 
 
 
இருட்டாசையாம் குழிவீழாமல் காமூவிரண்டு  பேய்கள் 
வெருட்டாமல் காஎன்று வேண்டுகிறேன் இந்தவீணணையும் 
பொருட்டாக எண்ணி அருட்கோல் அளித்தநீ புன்னகைத்து 
புரட்டாசித் திங்களில் வந்தருள்வாய் அன்ன பூரணியே.
-(அகத்தியர்)
 
அறியாமை எனும் இருளைப் போக்கி, ஞான ஒளியை உள்ளமெங்கும் பரவச்செய்யும் பூஜையாகவே, நவராத்திரி  காணப்படுகிறது. நவராத்திரி விரதம் இவ்வாண்டு, வியாழக்கிழமை (07) ஆரம்பமாகியது. 
 
புரட்டாதி மாத வளர்பிறை பிரதமை முதல் நவமியீறாகவரும் எட்டு தினங்கள் விரத காலமாகும்.ஒன்பதாவது தினம் விஜயதசமி தினமாகும். கடந்த வருடங்களில் பாடசாலைகள், கோவில்கள், வணிக நிறுவனங்கள் போன்வற்றில் கொலுவைத்து, வழிபாடுகளில் ஈடுபட்டு வந்தனர். எனினும், கொரோனா பேரிடர் காரணமாக, பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது; அதேவேளை, கோவில் வழிபாடுகளை மேற்கொள்வதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையைக் கருத்தில் கொண்டு, நாம் எமது வீடுகளிலேயே இருந்து விரதத்தை அனுஸ்டிப்போம். 
 
‘அவனின்றி அணுவும் அசையாது. அவளின்றி அவன் அசையான்’ என சிவத்தில் பாதியாக விளங்கும் சக்தியினை நோக்கி ஒன்பது இராத்திரிகள் அனுஸ்டிக்கப்படும் விரதமே நவராத்திரி ஆகும். தேவி வழிபாட்டின் தொன்மைக்கு கன்னி மாதத்தில் நடைபெறும் நவராத்திரி வழிபாடே சான்றாகும். இவ்வழிபாடு எப்பொழுது தோன்றியதென்பதற்கு எவ்வித ஆதாரமுமில்லை. மிகத் தொன்மை வாய்ந்தது. இச்சக்தி வழிபாடு, சிறிது பெயர் மாற்றங்களுடன் உலகம் முழுவதும் பரவியிருந்திருக்கிறது.
 
புரட்டாதி மாதத்தில் அமாவாசையைத் தொடர்ந்து வருகின்ற ஒன்பது நாட்களும் நவராத்திரி எனப்படும். பத்தாவது நாள் விஜயதசமி எனப்படும். சக்திக்கு ஒன்பது இராத்திரி; சிவனுக்கு ஒரு இராத்திரி; அது சிவராத்திரி. இதிலிருந்தே சக்தி வழிபாட்டின் மேன்மை விளங்குகிறது.
 
தமிழர் வளம் பெருக்கி விளைவிக்கும் மண்ணை நிலமகள் என்றார்கள். செல்வத்தை திருமகள் என்றார்கள். கல்வியை கலைமகள் என்றார்கள். வீரத்தை வீரத்திருமகள்(துர்க்கை) என்றார்கள். 
 
நவராத்திரி தொடர்பான தொன்ம நம்பிக்கையை நோக்குகையில், மகாசங்கார (பேரழிவு) காலத்தின் இறுதியில், இறைவன் உலகைப் படைக்க விரும்பிய நிலையில், ‘இச்சை’ என்ற சக்தியையும் அது எவ்வாறு தோன்றியது என்று அறிந்த போது ‘ஞான சக்தி’யும் தோன்றியுள்ளன. பின்னர் ‘கிரியா சக்தி’யால் இறைவன் உலகைப் படைத்தான் என தத்துவ மகிமையாக விளக்கப்பட்டுள்ளது. (இச்சை-விருப்பம்; ஞானம்-அறிவு; கிரியா- செயல்,ஆக்கல்)
 
இதை அடிப்படையாகக் கொண்டே, முதல் மூன்று நாள்கள் இச்சாசக்தி துர்க்கைக்கும், நடுவில் மூன்று நாள்கள் ஞானசக்திக்கும், இறுதி மூன்று தினங்கள் சரஸ்வதிக்குமாக நோற்கப்படுகிறது. அந்த வகையில், ஆண்டுக்கு இருமுறை நவராத்திரி கொண்டாடப்பட வேண்டுமென, தேவிபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. 
 
அந்த வகையில், சித்திரையில் வருவது ‘வசந்த நவராத்திரி’ எனவும் புரட்டாதியில் வருவது ‘சாரதா நவராத்திரி’ எனவும் அழைக்கப்படுகின்றது. இவ்விரண்டு காலங்களிலும் கோடை, குளிர் என இருபருவகாலமும் மாறும்போது, நோய்நொடிகள் பரவும். இந்த ஆபத்திலிருந்து மக்களைக் காக்கும்படி, தேவியை பூஜிக்கவேண்டும் என்பதால் இவ்விழாவை நடத்தப்படுகிறது. அதிலும், காலசுழற்சியில் வசந்த நவராத்திரி விழா  கொண்டாடும் முறை வழக்கொழிந்துவிட்டது. சாரதா நவராத்திரி விழா இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றமை சிறப்பு.
 
நவராத்திரியின் சிறப்பு, அனுஸ்டிக்க வேண்டிய முறை, கிடைக்கும் பலன்கள் பற்றி, தேவி மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் நிசும்பன், சும்பன் என இரு அசுரர்கள் இருந்துள்ளனர். அவர்கள் கடவுளிடம் பல வரங்களைப்பெற்று, தங்களை அழிக்க யாரும் இல்லை என்ற ஆணவத்தோடு ஆட்சி செய்த காலத்தில், மக்களை பெரும் துன்பத்தில் ஆழ்ந்தார்கள். இந்த அசுரர்களின் ஆணவத்தை அடக்கத் திண்ணம் கொண்டு, மகா விஷ்ணுவிடமும் சிவனிடமும் முறையிட்டனர். 
 
அவர்கள் பிரம்மனையும் சேர்த்துக்கொண்டு, இந்த அசுரர்களை அழிக்கும் சக்தி அன்னை ஆதிசக்தியிடமே உண்டு என்பதை அறிந்து, தேவியை பூலோகத்துக்கு அழைத்தனர். 
 
மும்மூர்த்திகளும் தாங்கள் சக்திகளையெல்லாம் ஒன்றாக்கி, தேவிக்கு அளித்துவிட்டு சிலையென நிற்கவே இந்திரன், அட்டத்திக்கு பாலகரும் தங்கள் ஆயுதங்களையெல்லாம் தேவிக்கு அழித்துவிட்டு சிலையாகவே காட்சி தந்தார்கள். இவர்கள் இப்படி சிலையாக நிற்கும் காட்சியே, கொலு வைக்கும் மரபாக வந்தாக அறிய முடிகின்றது.
 
இவ்வாறாக போர்கோலம் பூண்டதேவி, நிசும்பன் - சும்பன் எனும் இரு அசுரர்களையும் அழித்து, தர்மத்தை நிலைநாட்டினார். அவள் வெற்றி பெற்ற தினமே விஜய தசமியாகும். போர் ஒன்பது நாள்கள் விடாது நடைபெற்றது. ஆனாலும் அக்கால போர் சட்டதிட்டங்களின் படி, மாலை நேரம் சூரிய அஸ்தமனத்தின் பின்னர் போர் புரிவதை நிறுத்தி விடுவார்கள். அவர்கள் ஒய்வெடுக்கும் நேரத்தில் அன்னையின் படைக்கு உந்துதல் கொடுக்கும் வகையில், அன்னையை குறித்து ஆடல், பாடல், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளதையும் அறிய முடிகின்றது. எனவே, இரவில் இந்நிகழ்வு நடைபெறுவதாலே நவராத்திரி எனவும் கொள்ள முடியும்.
 
நவராத்திரி குறித்த இன்னுமொரு கதையை பார்ப்போமாக இருந்தால், வரமுனி என்ற பெரும் சக்திவாய்ந்த முனிவர் ஒருவர் இருந்துள்ளார்.அவர் சகலவற்றிலும் சிறந்து விளங்கியவர். தான் மட்டுமே சிறந்தவர் என்ற மமதையில் அகத்தியர் போன்ற பெரும் முனிவர்களை மகிஷம்(எருமை)போல உருவம் கொண்டு அவமரியாதையாக நடத்தவே, இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் அனைவரும் எருமையாகவே போவாய் என சபிக்கின்றனர். முனிவர்களின் சாபமும் பலித்து, அசுரனின் வாரிசாக மகிஷன் பிறந்தான். 
 
இவன்,  பிரம்மனை நோக்கி தவமிருந்து தனக்கு தேவர்கள், அசுரர்கள், மானிடர்களால் மரணம் நேரக்கூடாதெனவும் கன்னிப்பெண்ணால் தான் மரணம் ஏற்படவேண்டுமென வரம் பெற்று, அராஜக அதிகாரம் செய்கிறான். இதை பொறுத்துக்கொள்ள முடியாத தேவர்கள் மகாவிஷ்ணுவை தஞ்சமடைந்து மகிஷாசுரனை தண்டிக்குமாறு வேண்டவே, விஷ்ணு தேவியை பூலோகத்துக்கு அழைக்க தேவியும் சர்வலங்கார பூஷிதையாக, மகிஷனை வதம் செய்து அநீதியை அழிக்கிறாள். அன்றைய தினமே நவமியாகும். இதற்காக அன்னை ஒன்பது நாள்கள் ஊசி மீது தவமிருந்ததாகவும் அதனாலேயே நவராத்திரி காலத்தில் ஊசிகொண்டு துணிகளைத் தைப்பது தவிர்க்க வேண்டுமென ஐதீகம் இருப்பதாகவும் அறியமுடிகிறது.
 
மேலும், இந்த விரதத்தை தெய்வங்கள் முதல் தேவர்களும் கடைப்பிடுத்து பயனடைந்துள்ளதையும் அறியமுடிகிறது. உதாரணமாக இராமர், இராவணனிடமிருந்து சீதையை மீட்டது. பஞ்சபாண்டவர்கள் பாரதபோரில் வென்றமை. இதனுடாக அறியப்படுவது, தீய சக்திகள் மேலோங்குகையில் அம்பாள் காத்து அருள் புரிவாள் என்பதாகும்.
 
இதில் அறிவியல் காரணமும் இருக்கிறது.  இந்த ஒக்டோபர் மாதம் என்பது மழை பெய்யும் காலம். இந்தப் காலங்களில் இரவு நேரம் குறைவாக இருக்கும். எனவே, சீதோஷ்ண நிலைக்கு நம் உடலை மாற்றும் வகையிலேயே நவராத்திரி பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. இந்த ஒன்பது நான்களிலுமே பூஜை செய்யப்பட்டு, சுண்டல் போன்ற புரதம் அடங்கிய உணவுகள் சாப்பிடுவதால் உடலும் தெம்புபெறும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
 
நவராத்திரியில் ஒன்பது நாள்களும் பூஜை, விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இயலாதவர்கள் அஷ்டமி நாளில் மட்டுமாவது விரதமிருத்தல் வேண்டும். தசமி தினத்தில் வதம்செய்து வாகை சூடியதால், ஆணவம் சக்தியாலும், வறுமை  செல்வத்தாலும் அறியாமை ஞானத்தினாலும் வெற்றி கொள்ளப்பட்ட நாள் என்பதால், முப்பெரும் தேவியை வணங்கி, எல்லாக் காரியங்களும் எளிதில் வசமாகவும் அன்றைய தினம் புனிதமான காரியங்களை தொடங்கி, இந்த ஜென்மத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து, பிறவிப் பயனாகிய பேரின்ப நிலையை அடைவோமாக! 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .