2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வீழ்ச்சியின் விளிம்பில் ராஜபக்‌ஷர்கள்

Johnsan Bastiampillai   / 2022 ஏப்ரல் 05 , பி.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

என்.கே. அஷோக்பரன்

Twitter: @nkashokbharan

 

 

2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, கோட்டா ஆதரவாளர்களிடமிருந்து, “இந்நாட்டுக்கு ஹிட்லரைப் போன்ற ஒரு தலைவர் வேண்டும்; அது, கோட்டா தான்” என்ற தொனியிலான முழக்கங்களை இந்நாடு கேட்டது.

‘எதற்கும் துணிந்தவன்; எல்லாம் வல்லவன்’ என்ற பிம்பம் கோட்டாவைப் பற்றி பெருப்பித்துக் கட்டப்பட்டது. இதன் பின்னணியில், இலங்கையில் சர்ச்சையான முறையில் பணம் சம்பாதித்திருந்த வணிகர்கள் பலரும், தம்மை நாட்டை நேசிக்கும் தொழில் நிபுணர்களாகக் காட்டிக்கொண்ட ஒரு கூட்டமும் பௌத்த மதத் தலைவர்களைக் கொண்ட ஒரு குழாமும் இருந்தது.

‘சிங்கள - பௌத்தம்’ என்ற பேரினவாத நிகழ்ச்சி நிரல் முன்னிறுத்தப்பட்டது. ‘சிங்கள - பௌத்த’ வெற்றி நாயகனாக கோட்டா, 6.9 மில்லியன் மக்களால் வாக்களிக்கப்பட்டு ஜனாதிபதியானார்.

இரண்டரை வருடங்களில், ‘எல்லாம் வல்லவன்’ என்ற பிம்பம், புஸ்வாணமாகிப் போனது. இலங்கையின் பொருளாதாரம் சரிந்து, விழுந்து, உடைந்து இன்று அதளபாதாளத்தில் நொறுங்கிக் கிடக்கிறது.

இதன் விளைவாக, நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு, எரிவாயு தட்டுப்பாடு, மின்சாரத் துண்டிப்பு, உணவுத் தட்டுப்பாடு, பால் மற்றும் பால்மா தட்டுப்பாடு, மருந்துகள் தட்டுப்பாடு என அத்தனை அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ரூபாயின் பெறுமதி, ‘கடுகதி’யில் சரிந்ததால், பொருட்கள் ‘சடசட’வென  விலையேறின. அன்றாடம் உழைக்கும் தொழிலாளி, இந்தச் சுமையை எப்படித் தாங்குவான்?
ஒரு நாளில் 13 மணி நேர மின்வெட்டு என்பது, தென்னிலங்கை கடந்த சில தசாப்தங்களில் கண்டிராத இருண்டநிலை. வடக்கு - கிழக்குக்கு இது புதிதல்ல. யுத்தகாலம் முழுவதும் இருளில் வாழ்ந்து, பிழைத்து நிற்கும் மக்கள், வடக்கு-கிழக்கு மக்கள். ஆனால், ஒரு நாளில் 13 மணி நேரம் வரை மின்வெட்டினால் கதிகலங்கிய மக்கள், வீதிக்கு இறங்கிவிட்டார்கள்.

வியாழக்கிழமை (31) இரவு, கோட்டாவின் மிரிஹான வீட்டுக்கு அருகில் கூடிய மக்கள் செய்த ஆர்ப்பாட்டம், ராஜபக்‌ஷர்களை ஆட்டம் காணச்செய்துவிட்டது. இது, அரசியல் கட்சிகள் வீதிக்கு இறங்கிச் செய்த ஆர்ப்பாட்டமல்ல. அரசியல் கட்சிகள் பணமும் சாராயமும் கொடுத்து, பஸ்களில் மக்களை ஏற்றிவந்து செய்யும் ஆர்ப்பாட்டங்களை, கோட்டாவோ ராஜபக்‌ஷர்களோ பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

ஆனால், மக்கள் தாமாகப் போராடத் தொடங்கியது, ராஜபக்‌ஷர்களை கதிகலங்க வைத்துவிட்டது. “கோட்டா கோ ஹோம்” (“கோட்டா, வீட்டுக்குப் போ”) என்பதுதான் இன்று, இலங்கை எங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

கதிகலங்கிப்போனவர்கள், ‘நாறிய அரசியல் சித்து விளையாட்டு’ப் புத்தகத்தின் எல்லா விளையாட்டுகளையும் விளையாட முயற்சிக்கத் தொடங்கினார்கள். மக்கள் அமைதியான முறையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், திடீரென ‘ரௌடி’கள் நுழைகிறார்கள்.

ஒருவன் பஸ்ஸூக்குத் தீமூட்டும் காட்சி, சமூக ஊடகங்களில் தௌிவாகப் பதிவாகிறது. இதைக் காரணம் காட்டி, பொலிஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுத் தாக்குதல், நீர்பீய்ச்சல் தாக்குதல் என்பவற்றை, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் மீது நடத்துகிறார்கள். அதன் பின்னர் பலபேரைக் கைது செய்கிறார்கள்.

கொஞ்சப் பேரைக் கைது செய்து, மறியலில் வைத்து விட்டால், அந்தப் பயத்தில் மக்கள் வீதிக்கு இறங்க மாட்டார்கள் என்ற அரசியல் கணக்கு பிழைத்தது. அது, இந்நாட்டின் சட்டத்தரணிகளின் நடவடிக்கையால் என்றால் மிகையல்ல!

ஏறத்தாழ 500 சட்டத்தரணிகள், ‘வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில்’ கைது செய்யப்பட்டவர்களுக்காக பொலிஸ் நிலையத்திலும், அதன் பின்னர் நீதிமன்றத்திலும் ஆஜராகி இருந்தார்கள். குறிப்பாக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் இந்நாள் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், முன்னாள் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ உள்ளிட்ட பல ஜனாதிபதி சட்டத்தரணிகள் கூட அன்று ஆஜராகியிருந்தார்கள்.

இரவு 10.30 மணி வரை நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர், கைது செய்யப்பட்ட பலரும், நீதவானால் பிணையில் விடுதலை செய்யப்பட்டு இருந்தார்கள். இது ராஜபக்‌ஷர்கள் எதிர்பார்க்காத திருப்பம்.

இதேவேளை, ஞாயிற்றுக்கிழமை, (ஏப்ரல் மூன்றாம்) பெரும் ஆர்ப்பாட்டத்துக்கான அழைப்பு சமூக ஊடகங்களில் பரவிக்கொண்டிருந்தது. அச்சத்தின் உச்சத்திலிருந்த கோட்டா, முட்டாள்தனமான முடிவுகளை எடுக்கத் தொடங்கினார். உடனடியாக அவசரகாலநிலையை பிரகடனம் செய்தார்.

இரண்டு வருடங்கள் இந்நாட்டை ஆட்டிப்படைத்த கொவிட்-19 பெருந்தொற்றின் போது பிரகடனம் செய்யாத அவசரகால நிலையை, இந்நாட்டின் பொருளாதாரம் அதளபாதளத்தில் விழுந்த போது பிரகடனம் செய்யாத அவசரகால நிலையை, அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்த போது பிரகடனம் செய்யாத அவசரகால நிலையை, மக்கள் தாமாக  வீதிக்கிறங்கி போது பிரகடனம் செய்துள்ளார்.  
காரணம், பயம்! மக்கள் பலத்தின் மீதான பயம்!

அத்தோடு நிற்கவில்லை; மூன்றாம் திகதி ஆர்ப்பாட்டம் நடைபெற்று விடுமோ என்ற அச்சத்தில், (சனிக்கிழமை மாலை ஆறு மணி தொடக்கம் திங்கட்கிழமை காலை ஆறு மணிவரை) 36 மணி நேர ஊரடங்கை அமல்படுத்தியதுடன், பூங்கா, கடற்கரை என எந்தப் பொது இடத்திலும் மக்கள் ஒன்றுகூட முடியாது என்ற உத்தரவையும் போட்டார் கோட்டாபய ராஜபக்‌ஷ!

‘எதற்கும் துணிந்தவன்; எல்லாம் வல்லவன்’  என்ற வீரனின் தைரியத்தின் அளவு அவ்வளவுதான். தனக்கு வாக்களித்த மக்களையே கண்டு பயப்படும் ‘பெரு வீரன்’!

சரி! அதோடு நின்றதா அராஜகம்? இல்லை! ஞாயிற்றுக்கிழமை (03) அதிகாலை முதல் சமூக ஊடகங்களை அணுக முடியாத நிலைமை இலங்கையர்களுக்கு ஏற்பட்டது. அதன் பின்னர்தான், சமூக ஊடங்களைத் தடை செய்யுமாறு, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு உத்தரவு பிறப்பித்திருப்பதாக தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் அறிவித்தார்கள்.

மக்களின் கருத்துப்பகிரலுக்கே பயப்படும் இந்தப் ‘பயந்தாங்கொள்ளி’க் கூட்டத்தையா வீரர்கள் என்று விளித்தார்கள் என்ற நகைப்பு ஏற்பட்டாலும், மக்களின் கருத்துச் சுதந்திரத்தையும் நடமாடும் சுதந்திரத்தையும் தொழிற்சுதந்திரத்தையும் நசுக்கும் இந்த ஜனநாயக விரோத செயல்களைக் கண்டு, ஒவ்வோர் இலங்கையரது உள்ளமும் கொதிக்கிறது.

எந்த மக்கள், இந்த ராஜபக்‌ஷ கூட்டத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்தார்களோ, இன்று அதே மக்கள், இந்த ராஜபக்‌ஷ கூட்டத்துக்கு எதிராகத் திரும்பி இருக்கிறார்கள். இது போன்ற நிலைமை, தமக்கு எதிராக உருவாகும் என்று, ராஜபக்‌ஷர்கள் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.

ஏனென்றால், அவ்வளவு தூரம் சிந்திக்கும் திறன் அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், பௌத்தம் இதனை ‘தித்த தம்ம வேதனிய கம்ம’  என்கிறது. அதாவது, ‘இந்த ஜென்மத்திலேயே பலனை அனுபவிக்கும் கர்மா’ என்கிறது.
இனவாத வெறியை விதைத்து, சிறுபான்மையினரை அடக்கியொடுக்கி, பேரினவாதத்தை பரப்பிய ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக, இன்று அவர்களது ஆதரவாளர்களே திரும்பியிருக்கிறார்கள்.

‘பசி வந்தால் பத்தும் பறந்து போகும்’ என்று, நல்வழியில் பட்டியலிட்டாள் ஒளவைப் பிராட்டி. ‘பசி வந்தால் இனவாதமும் கூட மறந்துபோகும்’ என்ற இந்த நிலையிலும் கூட, இனவாதம் தம்மை காக்கும் என்ற ரீதியில், தீவிரவாதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்று கதைபரப்ப முயன்ற அரசாங்கத்தினர் மூக்குடைபட்டனர்.

ராஜபக்‌ஷர்களின் பிரம்மாஸ்திரமான ‘இனவாதம்’ கூட, பயன்தராத நிலைதான் தற்போது நிலவுகிறது. அதனால்தான் முழுமையான அடக்குமுறையை ராஜபக்‌ஷர்கள் கையிலெடுக்கத் தொடங்கிவிட்டார்கள். இதற்கு எதிராக,, அரசாங்கத்துக்கு உள்ளிருந்தே குரல்கள் எழத் தொடங்கிவிட்டன.

நாமல் ராஜபக்‌ஷ கூட, சமூக ஊடகங்கள் மீதான தடையை எதிர்த்து, சமூக ஊடகத்திலேயே கருத்து வௌியிட்டிருந்தார். பாவம், நாமலுக்கு தன்னுடைய அரசியல் எதிர்காலம் பற்றிய அச்சம் வந்திருக்கும்தானே! அதனால் தன்னை, தன்னுடைய அப்பா, சித்தப்பாக்களிடம் இருந்து, தனியாகப் பிரித்துக்காட்ட விளைகிறார்.
அது நடக்காது!

இந்நாட்டு மக்கள், ராஜபக்‌ஷர்களுக்கு மீண்டும் மீண்டும் வாக்களிக்கும் அளவுக்கு முட்டாள்களாக இருக்கலாம். ஆனால், நாமல் ராஜபக்‌ஷ, மற்றைய ராஜபக்‌ஷர்களில் இருந்து வேறுபட்டவர் என்று நம்பும் அளவுக்கு முட்டாள்கள் அல்ல என்றே நம்புகிறேன்.
இன்று வீழ்ச்சியின் விளிம்பில் ராஜபக்‌ஷர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். ‘என்ன வீழ்ச்சியின் விளிம்பிலா, ராஜபக்‌ஷர்கள் விழுந்துவிட்டார்களே’ என்று பலரும் கேட்கலாம்.

இல்லை! ராஜபக்‌ஷர்கள் என்பவர்கள் கரப்பான்பூச்சிகளின் தன்மையைப் போன்றவர்கள். அவர்களை இல்லாதொழிப்பது கடினம். இனவாதம், காழ்ப்புணர்வு, இனவெறி என்ற அழுக்குத்தான் அவர்கள் வாழும் வளரும் இடம். அந்த அழுக்கு இருக்கும் வரை, ராஜபக்‌ஷர்கள் மீண்டும் மீண்டும் வந்துகொண்டேதான் இருப்பார்கள்.

ஆகவே, ராஜபக்‌ஷர்கள் அரசியலிலிருந்து இல்லாதொழிக்கப்பட வேண்டுமானால்,  இனவாதம், காழ்ப்புணர்வு, இனவெறி என்ற அழுக்கு இல்லாதொழிக்கப்பட வேண்டும்.
சுத்தமான இடமாக அரசியல் மாற்றப்பட்டால், அங்கு கரப்பான்பூச்சிகளால் பிழைத்து, நீடித்திருக்க முடியாது. அது நடக்கும் வரை, கரப்பான்பூச்சிகளுக்கு முடிவே கிடையாது. அவர்கள் விழுந்தாலும், அழுக்கிலே உழன்று, பிழைத்து மீண்டும் மீண்டும் வந்துகொண்டே இருப்பார்கள். முதலில் அழுக்கை சுத்தம் செய்யுங்கள்!

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .