2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

'சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான உந்துதலை பற்றிப்பிடிக்கவும்'

Kogilavani   / 2016 ஒக்டோபர் 21 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய நிர்வாகம், 2015 ஆண்டில் அடைந்த உந்துதலை இழந்துவிடக் கூடாது என்றும் காத்திரமான செயற்பாடுகள் மூலம், சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தனது அர்ப்பணிப்பை காண்பிக்குமாறும், சிறுபான்மை விவகாரங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நதேயா இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.   

பாரிய அழிவுகளை ஏற்படுத்திய நீண்டகால சிவில் யுத்தத்தின் பின்பு அமைதி மிக்க சகவாழ்வை அடையும் பொருட்டு, ஒரு முழுமையான, நன்கு திட்டமிடப்பட்ட மற்றும் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்யப்பட்ட உண்மை, நல்லிணக்கம், காயங்களை ஆற்றும் மற்றும் பொறுப்புக்கூறல் முறைமை ஒன்று இடம்பெற வேண்டியதுடன், “ஆனால், இது ஒரே இரவில் சாத்தியமாகக்கூடியதல்ல” என, இலங்கைக்கு தான் மேற்கொண்ட முதலாவது தகவல் சேர்க்கும் விஜயத்தின் இறுதியில், ரீட்டா நதேயா குறிப்பிட்டார்.   

அதேவேளை, “இலங்கையின் சிறுபான்மையினரின் கண்ணியம், தனித்துவம், சமத்துவம் மற்றும் வாழ்வின் சகல மட்டங்களிலும் பங்கேற்கும் அவர்களுடைய உரிமை ஆகியவற்றை அதிக சிறப்புடன் பாதுகாப்பதற்கான தனது அரசியல் மன உறுதி மற்றும் ஈடுபாட்டைக் காட்சிப்படுத்த, இலங்கை அரசாங்கம் சில துரித, முக்கியத்தவம் வாய்ந்த மற்றும் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.   

ரீடா ஐசாக் நதேயா அவருடைய பணி தொடர்பான 10 நாட்கள் விஜயத்தின் போது, இலங்கை வாழ் சிறுபான்மை இனப்பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இது குறித்து ​தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “சவால்கள் இருக்கவே செய்கின்றன. மிகவும் உணர்வுபூர்வ விவாகரங்களுள் - குறிப்பாக தமிழ் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான விவகாரங்களுள்- காணாமல்போன நபர்கள், கைப்பற்றப்பட்டுள்ள காணிகளைத் திருப்பிக்கொடுத்தல், பாதுகாப்பு காரணங்களுக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்தல், இராணுவ மயப்படுத்தலை ஒழித்தல் போன்றவற்றை மிக அவசரமாக கவனிக்க வேண்டியுள்ளது” என்றார்.   

“அரசியல் சாசன சீர்திருத்த செயற்பாட்டில், சிறுபான்மையினர் மிகுந்த எதிர்பார்ப்புக்களை வைத்துள்ளதாகவும் அது தமது உரிமைகளுக்கு உத்தரவாதம் அளித்து அவற்றை செவ்வைபடுத்தும் ஒரு முக்கிய தருணமாக அவர்கள் காண்பதாகவும் சுட்டிக்காட்டிய ரீடா, சிறுபான்மையினரின் அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் சமூகங்கள் பல்வேறுபட்ட தமது ஆலோசனைகளுடன் அதற்காக குரல் எழுப்பியுள்ளனர்” என்றும் கூறியதோடு, “அவர்களுடைய கருத்துக்கள் மற்றும் அபிலாஷைகள், சரியான விதத்தில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.   

சட்ட மற்றும் கொள்கை இயற்றல் செயற்பாட்டுக்கு, சிறுபான்மை விவகாரங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளை ஊக்குவித்து ஒருங்கிணைப்பு வழங்குவதற்காகவும் சிறுபான்மை சமூகங்கள் மற்றும் அரசாங்கம் இடையே ஒரு பாலத்தை ஏற்படுத்துமுகமாக, சிறுபான்மையினர் தமது திறன்களையும் தகவல்களையும் வழங்கும் விதத்தில் அந்த சமூகங்களின் உரிமைகள் தொடர்பாக சுதந்திரமாக இயங்கும் அமைப்பொன்றை உருவாக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.   

2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இது தொடர்பான ஒரு விரிவான அறிக்கையை, ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைப் பேரவைக்கு, ரீடா ஐசாக் நதேயா சமர்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X