2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

‘அரசாங்கத்துடன் த.தே.கூ கைகோர்க்க வேண்டும்’

Editorial   / 2019 பெப்ரவரி 22 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியக் கூட்டமைப்​பினர், அரசாங்கத்துடன் இணைந்து, தமிழ் மக்களுக்கானதும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குமான அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டுமென, மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அழைப்பு விடுத்தார்.  

பொலிஸ்) அபிவிருத்தி வேலைத்திட்டங்களை, யாழ்ப்பாணத்தில் நேற்று (21) ஆரம்பித்து வைத்த அமைச்சர், யாழ்ப்பாணம் - புல்லுக்குளம் நிர்மாணிக்கப்படவுள்ள தூரசேவை பஸ் தரிப்பிடக் கண்காணிப்பு நிலையத்துக்கான அடிக்கல்லை நாட்டிவைத்து உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.   

அங்கு தொடர்ந்துரைத்த அவர், யாழ். மாவட்ட அபிவிருத்தியின்போது, இங்குள்ள பிரதிநிதிகளையும் இணைத்துக்கொண்டு, இந்த அபிவிருத்தித் திட்டங்களை முறையாகச் செயற்படுத்த உள்ளதாகவும் குறிப்பாக, நகரங்களை அபிவிருத்தி செய்வதற்கு, பெரும்பாலான நிதி தேவைப்படுவதால், சாதாரணமாக எமது நிதியைக் கொண்டு மாத்திரம் அபிவிருத்தி செய்வதைவிட, வெளிநாட்டு நிதிகளையும் பெற்று, மூலோபாய நகரங்களாக மாநகரங்களை அபிவிருத்தி செய்யவேண்டிய தேவைகள் இருப்பதாகவும், அதற்காக, வெளிநாட்டு உதவிகளை நாடிநிற்பதாகவும் கூறினார்.   

தற்போது இணங்கண்டுள்ள மூலோபாய அபிவிருத்தித் திட்டங்களில், யாழ்ப்பாணமும் இணைக்கப்பட்டுள்ளது எனக் கூறிய அமைச்சர் சம்பிக்க, ஆகவே, மூலோபாய நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாண நகரமும் அபிவிருத்தி அடையுமென்று உறுதியளித்தார்.   

எதிர்வரும் காலங்களில், மூலோபாய நகர அபிவிருத்தித் திட்டங்களின் போது, ஏனைய நகரங்களையும் இணைத்துக்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகக் கூறிய அவர், அந்தச் சந்தர்ப்பத்தில், திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களும் அதில் உள்ளடக்கப்படும் என்றார்.   

யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி விடயத்தில், பல்வேறு விதமான பௌதீக ரீதியிலான பிரச்சினைகளைத் தாம் எதிர்நோக்குவதாகவும் மழைநீர் வழிந்தோடும் வடிகாண்கள் எவ்வாறு உள்ளன என்பது பற்றி, தமக்கு இன்னும் தெரியாதென்றும் அவை மிக முக்கியமானவை என்றும், அமைச்சர் கூறினார்.   

அதைவிட, மிக முக்கியமானது மின்சாரமெனக் கூறிய அமைச்சர் சம்பிக்க, தான் மின்சார அமைச்சராக இருந்த போது, யாழ்ப்பாணத்தின் பல இடங்களுக்கு, பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில், “உத்துரு ஜனனி” என்ற திட்டத்தின் கீழ், முழுமையாக மின்சாரத்தைப் பெற்றுக் கொடுத்ததாகவும் கூறினார்.   

அதேபோன்று, கழிவு முகாமைத்தும் குறித்தும் மிக முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டுமெனச் சுட்டிக்காட்டிய ரணவக்க, விசேடமாக, திண்மக்கழிவு முகாமைத்துவம் மிக முக்கியமானது என்றும் அதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.   

யாழ்ப்பாணத்துக்கான சில அடிப்படை வசதிகளை, அரசாங்கம் செய்துகொடுக்க வேண்டுமென்றும் அந்த வசதிகளை, திட்டமிட்ட வகையில் செய்துகொடுப்பதற்கான நடவடிக்கைகளைத் தாம் மேற்கொள்வோமென்றும், அமைச்சர் உறுதியளித்தார்.   

1968ஆம் ஆண்டில், நீலன் திருச்செல்வம், அரசியல் நீரோட்டத்தில் இணைந்து, அமைச்சராகப் பதவி வகித்து, இந்தப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையை முன்னெடுத்தாரெனச் சுட்டிக்காட்டிய பாட்டலி சம்பிக்க ரணவக்க, அவருக்குப் பின்னர், பல அரசியல் கட்சிகள் இருந்த போதிலும், வடக்கின் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு அமைச்சர்கள் இருக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.   

அதனால், இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் ஒன்றைக் கூறிவைக்க விரும்புவதாகக் கூறிய அமைச்சர், இன்று அரசாங்கத்துடன் கைகோர்த்திருப்பது போன்றே, எதிர்காலத்திலும் அரசாங்கத்தில் இணைந்துகொண்டு, இந்தப் பிரதேச மக்களின் அபிவிருத்திக்காக, தங்களுடன் இணையுமாறும் அப்போது, இந்த மக்களுக்குத் தேவையான சேவைகளைச் செய்ய வாய்ப்புக் கிடைக்கும் என்று வேண்டுகோள் விடுத்தார்.   

இந்த மக்களுக்குத் தேவையான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்திய அவர், தாம் திட்டமிட்டவாறு, அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டுமென்றும் அரசியல்வாதிகள், அனுசரணை அரசியலையே செய்துகொண்டு இருக்கிறார்களே தவிர, திட்டமிட்டவகையில் அரசியலை முன்னெடுக்கவில்லை என்றும் அவரவர் பிரதேசத்தை மட்டுமே அபிவிருத்தி செய்கின்றார்களே தவிர, பொதுவான எண்ணக்கருவுடன் செயற்படவேண்டுமென்ற சிந்தனை, அவர்களுக்கு இல்லையென்றும் சுட்டிக்காட்டினார்.   

“இந்தக் குறைபாடுகளைக் களைந்து, எதிர்காலத்தில் திட்டமிட்டவாறு, இந்தப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வோம். அதற்கான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதேநேரம், மக்களின் ஒத்துழைப்புடனும் மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடனும், இந்தப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய, எங்களுடன் கைகோர்த்து செயற்பட முன்வருமாறு” அமைச்சர் சம்பிக்க, தொடர்ந்தும் அழைப்பு விடுத்தார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .