Freelancer / 2026 மே 04 , மு.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. காலை 11 மணி அளவில் முன்னிலை நிலவரம் தெரியவரும். வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை பொதுத் தேர்தல் கடந்த மார்ச் 15 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. புதுச்சேரி, கேரளம், அசாமில் கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதியும், தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் திகதியும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, 29 ஆகிய திகதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை வெளிப்படையாக, அமைதியாக நடைபெற, 165 கூடுதல் வாக்கு எண்ணும் பார்வையாளர்கள், 77 காவல் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தேர்தல் ஆணைய உத்தரவின்படி, 5 மாநிலங்களிலும் இன்று மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 1,099 வாக்குச்சாவடிகளில் ஏப்ரல் 9 ஆம் திகதி வாக்குப்பதிவு நடந்தது. 294 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 9.50 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தைப் பொருத்தவரை, மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். மொத்தம் 5.73 கோடி வாக்காளர்களில் 4.88 கோடி பேர் வாக்களித்தனர்.
மொத்தம் 75,064 வாக்குச்சாவடிகளில், 1,06,408 வாக்குப்பதிவு இயந்திரங்கள், தலா 75,064 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. வாக்குப் பதிவு முடிந்ததும் அவை அனைத்தும் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
முன்னிலை நிலவரம் காலை 11 மணி முதல் வெளியாகும். தேர்தல் முடிவுகள், முன்னிலை நிலவரங்களை இ.சி.ஐ.நெட் (ECINet) செயலியிலும், results.eci.gov.in என்ற இணையதளத்திலும் மக்கள் தெரிந்துகொள்வதற்கான வசதிகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்துள்ளது. (a)

8 minute ago
22 minute ago
31 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
22 minute ago
31 minute ago
1 hours ago