2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

இரு தரப்புக்கும் ’113 இல்லை’

Editorial   / 2018 நவம்பர் 15 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஷிவானி

 

நாடாளுமன்றத்தில், ஐக்கிய தேசியக் கட்சிக்கோ அல்லது ஆளுந்தரப்புக்கோ, 113 பேரின் ஆதரவுடனான பெரும்பான்மை பலம் இல்லையென்பதை ஏற்றுக்கொண்ட அமைச்சர் தயாசிறி ஜயசேகர, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசமைப்புக்கு உட்பட்ட வகையில் எடுக்கவேண்டிய தீர்மானங்களை எடுப்பார் எனவும்  கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்கத்  தகவல் திணைக்களத்தில், நேற்று (14) இடம்பெற்ற போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், நாடாளுமன்றம் கூட்டப்பட்ட போது, நாடாளுமன்ற சம்பிரதாயங்களையும் விதிமுறைகளையும் கருத்திற்கொள்ளாத ​வகையிலேயே சபாநாயகர் செயற்பட்டாரெனக் குற்றஞ்சாட்டியதோடு, நாடாளுன்றத்தைக் கூட்டுவதற்கு முன்னர், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆலோசித்து, நிகழ்ச்சி நிரலை அவர் தயாரித்திருக்க வேண்டுமென்றும் ஆனால், அவ்வாறான செயற்பாடுகளை அவர் மேற்கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார்.

அத்துடன், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 122 பேர் கையொப்பமிட்டனர் எனவும் அரசாங்கத்துக்கு பெரும்பான்மை இல்லை என்பதையும் அறிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, 122 பேர் கையொப்பமிட்ட பட்டியலை நாடாளுமன்றத்தில் காண்பிக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டி​னார்.

நாடாளுமன்றத்தில், வேறு பல தேவைகளுக்காக பெறப்பட்ட கையொப்பங்களைத் திரட்டியே, நேற்றைய தினத்தில் எதிர்த் தரப்பினர் சமர்பித்தனர் என்றும் நாடாளுமன்றத்தில் சபாநாயகர் எவ்வாறு இத்தகைய விதத்தில் நடந்துக்கொள்வதென்றும் கேள்வி எழுப்பிய அமைச்சர், சாதாரண மக்களும் நாடாளுமன்றத்தில் இன்று (நேற்று 14) என்ன நடந்ததென்பதை நன்கு அறிவார்கள் என்றார்.

“நீதிமன்ற உத்தரவை, நாடாளுமன்றத்தில் சபாநாயகர் வாசித்திருக்க வேண்டும். ஆனால், அதையும் அறியும்படி அவர் செய்யவில்லை. நீதிமன்ற உத்தரவு குறித்தப் பிரதியை கூட அவர் கையில் வைத்திருக்கவும் இல்லை.

சபாநாயகர், தனது தீர்மானம் குறித்து ஜனாதிபதிக்கு அறிவித்ததும், நாட்டின் அரசமைப்பை மீறாதவாறு, அரசமைப்புக்கு உட்பட்ட வகையில், ஜனாதிபதி சரியான தீர்மானமொன்றை வழங்குவார்” எனவும் குறிப்பிட்ட அமைச்சர் தயாசிறி ஜயசேகர, நாட்டிக் பிரதமர் ஒருவரை நியமிக்கும் அதிகாரமும் அவரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரமும், ஜனாதிபதி ஒருவருக்கு மாத்திரமே உள்ள நிலையில், தற்போதைய சூழ்நிலைகளுக்கமைய, அரசமைப்புக்கு உட்பட்ட வகையில், அடுத்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதை, ஜனாதிபதி எடுப்பார் எனவும் கூறினார்.

​இதேவேளை, நாட்டில் தற்போது எத்தகைய மோசமான நிலையும் ஏற்படவில்லையெனக் குறிப்பிட்ட அமைச்சர், பிரதமர் யார் என்பது தொடர்பில் குழப்பம் அவசியமில்லை எனவும் ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கமைய, மஹிந்த ராஜபக்‌ஷவே பிரதமராக இருப்பாரெனவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .