2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

இலங்கைக்கு ‘கால அவகாசம் வழங்கக்கூடாது’

Editorial   / 2019 பெப்ரவரி 22 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு, இலங்கைக்கு மேலும் காலஅவகாசம் வழங்கப்படக் கூடாதென்று தெரிவித்திருக்கும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன், இந்த விடயத்தை, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழுகின்ற தமிழ் மக்கள், சர்வதேச நாடுகளுக்கும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளுக்கும், ஏகோபித்த குரலில் எடுத்துக்கூற வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.   

கிளிநொச்சி மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தின் இரண்டு வருட நிறைவையும் ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரின் மார்ச் மாத அமர்வையும் கருத்திற்கொண்டு, எதிர்வரும் 25ஆம் திகதியன்று, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தழுவிய அளவில் நடைபெறவிருக்கும் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.   

அதில் தொடர்ந்து குறிப்பிட்டுள்ள அவர், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கங்கள் ஒன்றிணைந்து நடத்தும் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில், பெரும் எண்ணிக்கையில் பொதுமக்கள் கலந்துகொண்டு, இலங்கைக்கு மேலதிக காலஅவகாசம் வழங்கக்கூடாது என்று ஏகோபித்த குரலை ஒலிக்கச்செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.   

அத்துடன், சர்வதேசச் சட்டம் மற்றும் கோட்பாடுகளின் அடைப்படையில், மாற்று வழிமுறைகளை, இலங்கை விடயத்தில் ஐ.நா இனிமேல் கையாள வேண்டுமென்றும் வலியுறுத்த வேண்டுமெனவும், அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு, அரசாங்கம் தவறியுள்ள நிலையிலும் தொடர்ந்தும் வடக்கு, கிழக்கில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுவரும் நிலையிலும், அவற்றைக் கண்காணிப்பதற்கு, ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராலயம் கட்டாயமாக அலுவலகங்களைத் திறக்கவேண்டும் என்றும், அவர் வலியுறுத்தியுள்ளார்.   

இதனை, புலம்பெயர் தமிழ் மக்களும் தம்மால் முடிந்தளவுக்கு சர்வதேச அரசியல் மற்றும் ராஜதந்திர மட்டங்களில் எடுத்துரைக்க வேண்டுமென்றும், அவர் ​ கேட்டுக்கொண்டுள்ளார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X