Lenin Raj / 2026 ஏப்ரல் 07 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

வட மாகாண ஆளுநர் நா வேதநாயகத்தினால் மேற்கொள்ளப்பட்ட "அவசியத் தேவை கருதிய" இடமாற்றத்தினால் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலுள்ள மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றம் சுமத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (07) உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:
"நாட்டிலுள்ள 25 மாவட்டங்களில், கிளிநொச்சி மாவட்டம் மிகக்குறைந்த கல்விப் பெறுபேறுகளைக் கொண்ட மாவட்டமாகக் கணிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தைப் பொறுத்தவரையில், யாழ். மாவட்டத்திலிருந்தே ஆசிரியர்கள் ஏனைய நான்கு மாவட்டங்களுக்கும் வருகை தருகின்றனர். அண்மையில் வட மாகாண ஆளுநரால் 'அவசியத் தேவை கருதிய இடமாற்றம்' என்ற பெயரில் 190 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது. இந்த இடமாற்றத்தினை மனித உரிமைகள் ஆணைக்குழு தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. அதுமாத்திரமின்றி, கிளிநொச்சி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களிலும் கடமையாற்றிய 360 ஆசிரியர்கள் யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளனர்.
வட மாகாண ஆளுநரின் இச்செயலினால் குழந்தைகளின் அடிப்படை உரிமையான கல்வியை அவர்கள் இழந்துள்ளனர். இந்தச் சம்பவத்திற்கு கல்வி அமைச்சு ஏதேனும் விளக்கமளிக்க முடியுமா?" என வினவினார்.
இதற்குப் பதிலளித்த கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரினி அமரசூரிய தெரிவித்ததாவது: "ஆசிரியர்களுக்கான இடமாற்றம் என்பது தன்னிச்சையாக (எழுமாறாக) மேற்கொள்ளப்படுவதொன்றல்ல. இடமாற்றங்கள் முறையான திட்டமொன்றிற்கு அமைவாகவே செயற்படுத்தப்படுகின்றன. வட மாகாணத்தில் பாரிய ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதை நானும் அறிவேன். விசேடமாக கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் இது பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதனை நிவர்த்தி செய்யப் பல வேலைத்திட்டங்களை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம்: இந்த வருடத்தில் புதிய ஆசிரியர் நியமனங்களை வழங்கத் திட்டமிட்டுள்ளோம். எதிர்வரும் மே மாதம் அதற்கான போட்டிப் பரீட்சையை நடத்தவுள்ளோம். விஞ்ஞானப் பீடங்களிலிருந்து வெளியேறும் ஆசிரியர்களுக்கும் நியமனங்களை வழங்கவுள்ளோம். பற்றாக்குறை நிலவுகின்ற பகுதிகளுக்கே முன்னுரிமை வழங்க எதிர்பார்க்கின்றோம். உறுப்பினர் அர்ச்சுனா கூறுவது சரியானது; பெரும்பாலான ஆசிரியர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே பணிபுரிய விரும்புகின்றனர். இது ஒரு கலாசாரமாகவே மாறியுள்ளது. ஆசிரியர்களின் சமநிலை பரம்பலுக்கு அமைவாகவே இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்கு எதிராகச் செயற்பட வேண்டாம். அவ்வாறு செய்தால், யாழ். மாவட்டத்தின் தூரப் பிரதேசங்களுக்குக் கிடைக்க வேண்டிய ஆசிரிய வளமும் இல்லாமல் போகும் சாத்தியம் உள்ளது," என்றார்.
4 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
11 Apr 2026
11 Apr 2026