2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு முனைய பேச்சு தோல்வி’

Editorial   / 2021 ஜனவரி 15 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறித்து, ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது எனத்  தெரிவித்த அகில இலங்கை துறைமுக பொதுச் சங்கத்தின் பொதுச்செயலாளர் நிரோஷன் கொரகானகே, கிழக்கு முனையம் துறைமுக அதிகார சபையால் முழுமையாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம். அத்துடன், தேசிய வளங்களைப் பாதுகாக்கத் தொடர்ந்து தொழிற்சங்க மட்டத்தில் மாற்று நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம்  என்றார்.

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தைப் பாதுகாக்க, ஆரம்பத்தில் இருந்து தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். கடந்த வருடம் ஓகஸ்ட் மாதமளவில், துறைமுக ஊழியர்கள் துறைமுக கட்டடத்தின் மீதேறி அரசாங்கத்தின்  செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். கிழக்கு முனையம்  விற்பனை செய்யப்படமாட்டாது என அரசாங்கம் அப்போது வாக்குறுதி வழங்கியது.

ஆட்சிமாற்றத்தின் பின்னர், கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை, பிற நாடுகளுக்கு வழங்கும் நடவடிக்கைக்காக அமைச்சரவை மட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டது. கிழக்கு முனையத்தை, இந்திய நிறுவனத்துக்கு வழங்கும் விவகாரத்தில்  ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் மத்தியில் இரு வேறுபட்ட நிலைப்பாடு காணப்பட்டது.

 கிழக்கு முனையத்தின் 49 சதவீத உரிமம் இந்தியாவுக்கு வழங்கப்படும் என்று ஒரு தரப்பினரும், அவ்வாறு  வழங்கப்பட மாட்டாது என்று மற்றொரு தரப்பினரும் தெரிவிக்கிறார்கள். இந்நிலையிலேயே, இவ்விடயம் தொடர்பில், ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது. அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.
கிழக்கு முனையத்தை, முழுமையாக அபிவிருத்தி செய்யும் பணிகளை துறைமுக அதிகார சபை முன்னெடுக்க  வேண்டும் என்று குறிப்பிட்டோம்.


ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன நிறுவனத்துக்கு வழங்கியுள்ளதால் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் இந்தியாவுக்கு வழங்க வேண்டிய தேவை ஏதோ ஒரு வழியில் காணப்படுகின்றது. ஆகையால் 49வீத உரிமம் இந்தியாவுக்கு வழங்கப்படும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய வளங்களைப் பிற நாட்டுக்கு வழங்குவது முதலீட்டுக்காக மாத்திரமே தவிர,  இறையாண்மையை விட்டுக் கொடுப்பதற்கு அல்ல என்று ஜனாதிபதி தெளிவாக குறிப்பிட்டிருந்தார். எவ்வாறாயினும் எமது கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .