2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

தகுதியே இல்லாத 16 பேர் இடமாற்றம் கோருகின்றனர்

Lenin Raj   / 2026 ஏப்ரல் 09 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் எந்த வகையிலும் நியாயமற்றது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நிலையியல் கட்டளைச்சட்டம் 27/2 இன்கீழ் எழுப்பிய வினாவிற்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துரைக்கையில்: கௌரவ சபாநாயகர் அவர்களே, இந்த மாதத்தில் மாத்திரம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் ஐந்து நாட்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழ்நிலையில் மக்களும் அவதியுறுகின்ற நிலையில், இத்தருணத்தில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது சாதாரண விடயமல்ல.

நாட்டிலோ அல்லது சர்வதேச நாடொன்றிலோ மருத்துவப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டு, வரையறைக்குட்பட்ட ஓராண்டு உள்ளகப் பயிற்சி நெறியினை நிறைவு செய்து, அரச சேவைக்கான தகுதியைப் பெற்றுக்கொண்ட பின்னர் அவர்களுக்கு வழங்கப்படும் முதலாவது நியமனம் தொடர்பில் இடமாற்றச் சபை தலையிட முடியாது. இதுவே அவர்களுக்கான முதலாவது நியமனமாகும்.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை (31 ) அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைமையகத்திற்கு மருத்துவர்கள் குழுவொன்றை அழைத்து, நியமனங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டாம் எனப் பிரச்சினைகளை எழுப்பினார்கள்.

அந்த மருத்துவக் குழுவில் 453 பேர் நியமனம் பெறவிருந்தனர். இவ்வாறு அழுத்தம் கொடுக்கப்பட்ட போதிலும், 436 பேர் தங்களுக்கு இந்த நியமனம் தேவை என விண்ணப்பித்திருந்தனர்.

எஞ்சிய 17 பேரில் 16 பேர் ஓராண்டுப் பயிற்சிக்குப் பின்னர் தமது தகுதியை RHO வை சரியாகப் பூர்த்தி செய்யாதவர்கள். அதில் ஒருவர் மாத்திரமே தகுதி கொண்டவர். ஏனையவர்கள் அரச பணிக்குத் தேவையான இறுதித் தகுதி வரையறைகளை முடிக்காதவர்கள்.

இதற்கமைய, 436 மருத்துவர்களின் கோரிக்கையின் பின்னர் அதற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முற்பகல் முதல் உள்ளகப் பயிற்சி நெறியினை நிறைவு செய்த மருத்துவர்கள், தாம் கடமையாற்றிய இடத்திலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.

எதிர்வரும் 09, 10, 11 ஆகிய மூன்று தினங்களுக்குள் அவர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று கடமையைப் பொறுப்பேற்க முடியும். இதற்கு முன்னரும் இவ்வாறே நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்காத மருத்துவர்களின் நியமனங்கள் இரத்துச் செய்யப்படுவதோடு, அவர்களுக்கான ஊதியமும் நிறுத்தப்படும். தகுதியிருந்தும் விண்ணப்பிக்காத அந்த ஒருவரும், தகுதியற்ற ஏனைய 16 பேரும் அரச மருத்துவ சேவைக்குள் உள்வாங்கப்பட மாட்டார்கள் என்பதே இதன் பொருளாகும்.

இப்பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது அர்த்தமற்றது. இந்தப் பணிப்புறக்கணிப்பானது அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .