Editorial / 2026 மார்ச் 30 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம். பர்ஸான்
பெண்ணொருவர் தவறவிட்ட தங்க நகைகள், பணம் மற்றும் ஆவணங்கள் அடங்கிய பையை உரியவரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்த ஆட்டோ சாரதிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி - ஹிஜ்ரா நகர், இன்ஷானியா வீதியில் வசிக்கும் 42 வயதுடைய முகம்மது முஸ்தபா இக்பால் எனும் ஆட்டோ சாரதி, கடந்த சனிக்கிழமை (28) காலை 9 மணியளவில் நாவலடியில் இருந்து வாழைச்சேனை நோக்கிப் பயணித்துள்ளார். இதன்போது, ஓட்டமாவடி தேசிய பாடசாலைக்கு அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் கைவிடப்பட்ட நிலையில் ஒரு பணப்பை கிடப்பதைக் கண்டு அதனை எடுத்துள்ளார்.
அப்பையைத் திறந்து பார்த்தபோது, அதனுள் தங்க நகைகள், பணம், கைத்தொலைபேசி மற்றும் முக்கிய ஆவணங்கள் இருப்பதைக் கண்ட அவர், உடனடியாக அவற்றை வாழைச்சேனை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவில் ஒப்படைத்தார்.
விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், பையைத் தவறவிட்ட பெண் பிறைந்துறைச்சேனை, தாஜ்மகால் வீதியைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்தி அவரைத் தொடர்புகொண்டனர். வங்கிக்குச் சென்றுவிட்டு ரிதிதென்னை பகுதியிலுள்ள உறவினர் வீட்டிற்குச் செல்வதற்காகப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோதே அந்தப் பெண் இப்பையைத் தவறவிட்டுள்ளார். பேருந்தில் ஏறி நடத்துனரிடம் பயணச்சீட்டுப் பெற முற்பட்டபோதே பையைத் தொலைத்த அதிர்ச்சிகரமான உண்மை அவருக்குத் தெரியவந்துள்ளது.
அப்பையினுள் சுமார் 14 இலட்சம் ரூபாய் பெறுமதியான 4 பவுன் தங்க நகைகள், 19,420 ரூபாய் பணம் மற்றும் பெறுமதியான ஆவணங்கள் இருந்துள்ளன. எவ்வித எதிர்பார்ப்புமின்றி இப்பொருட்களைப் பொலிஸாரிடம் ஒப்படைத்த இக்பாலின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
சுமார் 22 வருடங்களாக ஆட்டோ சாரதியாக நேர்மையுடன் தொழில் செய்துவரும் இக்பாலின் இந்த உயரிய பண்பைப் பாராட்டி பல்வேறு தரப்பினரும் கௌரவிப்பு நிகழ்வுகளை நடத்தினர்:
வாழைச்சேனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சட்டத்தரணி எம்.எம். முகம்மட் ராசிக் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (29) இரவு ஓட்டமாவடி மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் கௌரவிப்பு இடம்பெற்றது.
திங்கட்கிழமை (30) அன்று அறபா நகர் முகைதீன் அப்துல் காதர் வித்தியாலயம் (அதிபர் எம்.யூ. நளீம் ஸலாமி தலைமையில்), ஓட்டமாவடி தேசிய பாடசாலை (அதிபர் எம்.ஏ. ஹலீம் இஸ்ஹாக் தலைமையில்) மற்றும் கேணிநகர் மதீனா வித்தியாலயம் (அதிபர் எம்.எஸ்.எம். றிஸ்மின் தலைமையில்) ஆகிய பாடசாலைகளில் கௌரவிப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்நிகழ்வுகளின் போது ஆட்டோ சாரதி இக்பாலுக்குப் பொன்னாடை போர்த்தப்பட்டு, நினைவுச் சின்னங்கள் மற்றும் பரிசில்கள் வழங்கிப் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டதுடன், இன்றைய சமூகத்திற்கு அவர் ஒரு சிறந்த முன்மாதிரி என்றும் போற்றப்பட்டார்.




7 hours ago
31 Mar 2026
31 Mar 2026
31 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
31 Mar 2026
31 Mar 2026
31 Mar 2026