Editorial / 2021 ஜனவரி 13 , மு.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகேஸ்வரி விஜயனந்தன்
கொரோனா வைரஸ் தொற்றின் நிலைமை சரியாகும் வரையிலும், மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறாதெனத் தெரிவித்த அமைச்சரவை இணைப்பேச்சாளர் உதய கம்மன்பில, நாடு மீண்டும் வழமைக்குத் திரும்பும் போது, மாகாண சபைத் தேர்தல் குறித்து மீளாய்வு செய்து, அரசாங்கம் தனது முடிவை அறிவிக்கும் என்றார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (12) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'சுகாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு, மாகாண சபைத் தேர்தலை நடத்தாதிருக்கக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கொவிட்-19 நோய்த் தாக்கத்தால் பல சவால்கள் தற்போது எழுந்துள்ளன. அவற்றை வெற்றி கொள்ள, அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது' என்றார்.
13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக, நல்லிணக்கச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு குறித்து, இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்திய உறுதிப்பாட்டைக் காப்பாற்ற வேண்டும் என, இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் வலியுறுத்தி இருந்தார் எனத் தெரிவித்த உதய கம்பன்பில எனினும், அது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை என்றார்.
'அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் குறித்து, அரசியல் சமூகமட்டத்தில் இருவேறுபட்ட கருத்துகள் உள்ளன. ஆகையால், இவ்விரண்டு விவகாரங்கள் தொடர்பில், புதிய அரசியலமைப்புக் குறித்து நியமிக்கப்பட்ட 9 பேர் அடங்கிய குழுவினர் ஆளும், எதிர்த்தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க உள்ளனர். சிறந்த அரசியலமைப்பு உருவாக்கத்தில் அனைத்துத் தரப்பினரது கருத்துகள் தொடர்பில் ஆராய்வது கட்டாயமாகும்' என்றார் .
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .