2026 மார்ச் 27, வெள்ளிக்கிழமை

பாழ்கிணற்றுப் படுகொலை: ’’ சட்டத்தரணிகள் ஆஜராகக் கூடாது’’ :கண்டனப் போராட்டம்

Editorial   / 2026 மார்ச் 27 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ரீ.எல். ஜவ்பர்கான்

மட்டக்களப்பு, நெல்லிக்காடு பகுதியில் இடம்பெற்ற கொடூரக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் நீதிமன்றில் முன்னிலையாகக் கூடாது என வலியுறுத்தியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைக் கோரியும்   மட்டக்களப்பு நகரில் பாரிய கண்டன ஆர்ப்பாட்டம்   வெள்ளிக்கிழமை (27) முன்னெடுக்கப்பட்டது.

வெல்லாவெளி 40ஆம் கிராம மக்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். அதே கிணற்றிலிருந்து மற்றொரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் மட்டக்களப்பில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த பாரிய கொள்ளை மற்றும் கொலைகளின் பின்னணியை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. இது தொடர்பாக மூவர் உட்பட ஆறு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 23ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டவர்களில், மூவரை நான்கு நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்கவும், ஏனைய இருவரை மார்ச் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு இன்று (27) மீண்டும் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையிலேயே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

காந்தி பூங்காவிலிருந்து பழைய கச்சேரி (மாவட்ட செயலகம்) வரை பேரணியாகச் சென்ற போராட்டக்காரர்கள்:

“இக்கொடூரக் குற்றச்செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர்களுக்கு ஆதரவாக எந்தவொரு சட்டத்தரணியும் நீதிமன்றில் முன்னிலையாகக் கூடாது”, “குற்றவாளிகளுக்கு உச்சகட்டத் தண்டனை வழங்கப்பட வேண்டும்”.“பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகளைத் தடுக்க பொலிஸார் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்” ஆகிய  கோரிக்கைகளை முன்வைத்தனர்.

"கொலைக்குற்றவாளிகளுக்குத் துணை போகாதே!", "பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும்!", "பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீது கை வைக்காதே!" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு பொதுமக்கள் கோஷங்களை எழுப்பினர்.

மாவட்ட செயலகத்தின் முன்பாகத் திரண்ட மக்களைச் சந்தித்த மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், அவர்களுடன் கலந்துரையாடினார். இதன்போது, இனிவரும் காலங்களில் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதை நீதித்துறை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, அரசாங்க அதிபரிடம் போராட்டக்காரர்களால் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், ஞானமுத்து ஸ்ரீநேசன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத் ஆகியோருடன் பிரதேச சபைத் தவிசாளர்கள், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .