2026 மார்ச் 30, திங்கட்கிழமை

விஜய் கட்டி பிடித்த அந்த சிவா யார்?

Editorial   / 2026 மார்ச் 30 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர்கள் அறிமுக விழா, கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் கட்சித் தலைவர் விஜய் பேசிய வார்த்தைகளும், பெரம்பூர் நிர்வாகி சிவாவை அவர் நெகிழ்ச்சியுடன் பாராட்டியதும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
மக்கள் காப்பாளர்கள் அறிமுகம்
 
விழாவில் பேசிய விஜய், "இந்தக் கூட்டத்தை வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் என்று சொல்கிறார்கள். ஆனால், என்னைப்பொறுத்தவரை இது 'மக்கள் காப்பாளர்களை' அறிமுகப்படுத்தும் கூட்டம். நமது வேட்பாளர்கள் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், பெரிய பின்னணி இல்லாதவர்கள் என்று விமர்சிக்கலாம். கூட்டம் சேர்ந்தால் அது ஓட்டாகுமா என்று கேள்வி கேட்கலாம். ஆனால், இங்கு இருப்பவர்கள் அரசியல் தெரிந்தவர்கள்; அனுபவத்தை வைத்துக்கொள்ளையடிப்பவர்கள் கிடையாது," என்று அதிரடியாகத் தொடங்கினார்.
மேலும், "எம்.எல்.ஏ என்பவர் தொகுதி எல்லைக்கான மக்கள் காப்பாளராக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களைத்தான் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்துள்ளேன். இவர்களை வெற்றி பெறச் செய்வது மக்களின் பொறுப்பு," என வேண்டுகோள் விடுத்தார்.
 
இருமுனைப் போட்டி
 
அரசியல் களம் குறித்துப் பேசிய அவர், "இந்தத் தேர்தல் மற்றவர்கள் சொல்வது போன்ற சாதாரணத் தேர்தல் கிடையாது. இது இருமுனைப் போட்டிதான். ஒன்று மக்கள் கூட்டணியான தவெக, இன்னொன்று ஸ்டாலின் அவர்களின் கூட்டணி. மன்னராட்சியிலிருந்து மக்களாட்சியை மீட்பதே எங்கள் நோக்கம்," என்றார்.
 
முக்கிய தேர்தல் வாக்குறுதிகள்:
 
போதைப்பொருளைத் தடுக்கக் கடும் சட்டங்கள்.
பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள்.
12-ஆம் வகுப்புக்குப் பிறகு பி.ஹெச்.டி வரை, பிணையில்லா கல்விக்கடனாக (Collateral Free) 20 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்.
 
யார் அந்த சிவா?
 
நிகழ்ச்சியின் ஒரு கட்டத்தில், வேட்பாளர் அல்லாத ஒருவரை மேடைக்கு அழைத்த விஜய், அவர் தோளில் கை போட்டபடி நெகிழ்ச்சியாகப் பேசினார். "இவர் எனக்காக விட்டுக் கொடுத்துள்ளார். கவலைப்படாதீர்கள், உங்கள் சிவாவை நான் நன்றாகப் பார்த்துக்கொள்வேன்," என்று விஜய் கூறியதும் அரங்கமே 'சிவா சிவா' என முழக்கங்களால் அதிரந்தது.
 
விசாரணையில், அவர் பெரம்பூர் தொகுதிச் செயலாளர் சிவா என்பது தெரியவந்தது. பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிடுவதால், அந்த வாய்ப்பை மனமுவந்து தனது தலைவருக்காக அவர் விட்டுக்கொடுத்தார். இதனைப் பாராட்டியே விஜய் மேடையில் அவருக்கு இந்த கௌரவத்தை அளித்தார்.
வேட்பாளர்களுடன் நெகிழ்ச்சி
 
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் தான் போட்டியிடுவதாக விஜய் அறிவித்தார். ஒவ்வொரு வேட்பாளரையும் மேடையில் அறிமுகப்படுத்தியபோது, அவர்கள் செய்த 'ரஞ்சிதமே' நடன அசைவுகள் மற்றும் வெற்றிச் சமிக்ஞைகளை விஜய்யும் அதே உற்சாகத்துடன் செய்து காட்டி அவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தார். குறிப்பாக, தனது ஓட்டுநரின் மகனுக்கு வேட்பாளர் வாய்ப்பு வழங்கி, எளியவர்களுக்கும் அரசியலில் இடமுண்டு என்பதை விஜய் மெய்ப்பித்துள்ளார்.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .