2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

விஜய்க்கு விழுந்த முதல் அடி

Editorial   / 2026 ஏப்ரல் 07 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் (மே) 4-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 30-ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது.

முதல் நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (கொளத்தூர்), த.வெ.க. தலைவர் விஜய் (பெரம்பூர்), நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் (காரைக்குடி) ஆகியோர் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். நேற்றுடன் முடிவடைந்த கால அவகாசத்தில் மொத்தம் 7,600-க்கும் மேற்பட்டோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இன்று காலை 11 மணிக்குத் தொடங்கிய வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையில் பல முக்கிய தலைவர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், த.வெ.க. தலைவர் விஜய் (பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு), துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சீமான், பிரேமலதா விஜயகாந்த், பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், புஸ்ஸி ஆனந்த், ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ மற்றும் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சேகர்பாபு, கே.என்.நேரு உள்ளிட்டோரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் த.வெ.க. தலைவர் விஜய்யின் மனுவுக்கு பா.ம.க. உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விஜய் தனது பிரமாணப் பத்திரத்தில் சொத்து வரி செலுத்திய விவரங்களைக் குறிப்பிடவில்லை எனக் கூறி, அவரது மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுயேச்சை வேட்பாளர்களான தேவராஜன் மற்றும் முரளி வினோத் ஆகியோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பிரமாணப் பத்திரத்தில் அவரது மனைவியின் பெயரில் உள்ள 37 நிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிடவில்லை.வருமான வரி கணக்கில் காட்டப்படாத 1 கோடி ரூபாய் ரொக்கம் அவரிடம் உள்ளதாகக் குற்றச்சாட்டு.2 கோடி ரூபாய் வைப்பு நிதிக்கு வரும் 84 லட்சம் ரூபாய் வட்டியைக் குறிப்பிடவில்லை. மொத்தம் 14 கோடி ரூபாய் வருமானத்தை மறைத்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

இதன் காரணமாக, தேர்தல் கண்காணிப்பாளர் விக்ரம் குமார் சிங் வரும் வரை காத்திருக்குமாறு கூறி, தேர்தல் அலுவலர்கள் அவரது மனுவை நிறுத்தி வைத்துள்ளனர்.

இதேபோல் ஆர்.கே. நகர் த.வெ.க. வேட்பாளர் மரிய வில்சன், மயிலாப்பூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் பாலு மற்றும் விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் உள்ளிட்டோரின் வேட்புமனுக்களும் பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வேட்புமனுக்களைத் திரும்பப் பெற விரும்புவோர் வரும் 9-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .