Suganthini Ratnam / 2015 ஏப்ரல் 01 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
காலம் எம்மை பிரித்து தூக்கி வீசி அங்கும் இங்குமாக இருந்தோம். அந்த நிலை மாறும் காலம் தற்போது மலர்ந்துள்ளது. இதயத்தின் இரு அறைகளாக தமிழ், முஸ்லிம் மக்கள் இருக்கவேண்டும் என்று கிழக்கு மாகாண விவசாய கால்நடை, கூட்டுறவு, அபிவிருத்தி அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் பழைய மாணவரும் கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளராகவும் பதவி உயர்வு பெற்றுள்ள வைத்திய கலாநிதி எம்.ஏ.எம்.பாஸியை கௌரவிக்கும் நிகழ்வு, நேற்று செவ்வாய்க்கிழமை திருகோணமலை சர்வோதயம் மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'எமது பாடசாலைகள் எமது தாய்மடிக்கு ஒப்பானவை. அந்த நினைவுகள் நாம் கல்லறையில் சங்கமிக்கும்வரை வந்துகொண்டே இருக்கும். அவற்றை நினைவூட்டும் நிகழ்வுகளும் மிகவும் அருமையானவை. நட்பு வெறுமனே பழகுவதால் மட்டும் வருவதல்ல. அது உணர்வுகளின் ஒன்றிப்பால் வருவது. நண்பர்கள் என்றாலே ஒரு உரிமை பிறக்கும். தாய், தந்தைக்கு பிறகு நட்பு என்ற உரிமையே இருக்கின்றது.
அந்த வகையில், நாம் கிழக்கு மாகாணத்தில் இன, மத, பேதமின்றி நட்புடன் தமிழ் பேசும் மக்களாக வாழ்ந்தவர்கள். இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கப் பெற்ற நாள் தொடக்கம் எமது சிறுபான்மை இனங்களின் சுதந்திரம் கொஞ்சம், கொஞ்சமாக இறங்கிக்கொண்டிருந்தபோது, சிறுபான்மை இனங்கள் ஒன்றுசேர்ந்தாலே இந்த நாட்டில் ஒரு மாற்றத்தை கொண்டுவரமுடியும் என்று சிறுபான்மை இனங்களின் ஒற்றுமையை எண்ணியவர் தந்தை செல்வா.
பட்டிப்பளை எனும் எமது தமிழ் பிரதேசத்தை கல்லோயாத் திட்டத்தின் கீழ் பெரும்பான்மை இன மக்கள் குடியேற்றப்பட்டபோது, அங்கு தூங்கிக்கொண்டிருந்த எம்மவர்களை தட்டியெழுப்பியவர் வடக்கில் இருந்து வந்த தந்தை. அன்று அவர் பிரதேசவாதம் பார்க்கவில்லை. அவர் தமிழ் பேசும் மக்கள் என்ற ரீதியில் ஒற்றுமையுடன் எழுங்கள் என்று கூறினார். அதுபோல் நாம் ஒன்றித்து நாடாளுமன்றத்தில் தமிழ் பேசும் மக்களின் குரலாக ஒருமித்துச் சென்றோம். பல போராட்டங்களில் நாம் ஒருமித்து அடம்பன் கொடிபோல் திரண்டுநின்றோம். இதனால், அஞ்சியது சிங்கள அரசு. அதன் பின்பே தமிழ் மொழிக்கு சிறப்பு கிடைத்தது. இதுபோன்று பல விடயங்கள் தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமையினால் கிடைத்தது. ஆனால், காலம் எம்மை பிரித்து தூக்கி வீசி அங்கும் இங்குமாக இருந்தோம்.
அந்நிலை மாறும் காலம் தற்போது மலர்ந்துள்ளது. இதயத்தின் இரு அறைகளாக தமிழ், முஸ்லிம்; மக்கள் இருக்கவேண்டும் என்ற செய்தி எமது சமூகங்களுக்குச் செல்லவேண்டும். தமிழ், முஸ்லிம் சகோதரர்கள் தங்கள் பேதங்களை மறந்து கைகோர்த்து செல்கின்ற கனவை நாம் அனைவரும் காணவேண்டும். அதற்காக முயற்சிக்கவேண்டும்.
நாம் அனைவரும் ஒவ்வொருவகையில் தாய், தந்தையரின் கஷ;டங்களாலேயே வளர்க்கப்பட்டோம். எவ்வாறு இருப்பினும், கல்வி எம்மை உயரத்தில் தூக்கிவைத்தது. அந்த உயர்வை பயன்படுத்தி நாம் எமது சமூகத்துக்கு சேவை புரியவேண்டும். சேவை என்ற ஒன்றுதான் மனிதருக்குத் தேவை. நாம் மற்றவர்களுக்கு கொடுக்கக்கூடியதும் அதுதான். தன்னுடையமனதால் எவன் பெரியவனாக இருக்கின்றானோ, அவன்தான் உண்மையான பணக்காரன் ஆகின்றான்.
நாம் பெற்றிருக்கின்ற படிப்பும் பதவியும் எமது மக்களுக்கு செய்கின்ற சேவையாகத்தான் இருக்கும். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தற்போது கிடைத்திருக்கின்ற அமைச்சுகள் தலையில் சூடிக்கொள்ளும் மகுடங்கள் அல்ல. அவை எமது மக்களுக்கு சேவை செய்வதற்கான கருவிகளே. இந்த நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் தங்கள் சுமைகளில் இருந்து மீண்டு வரக்கூடிய செயற்பாடுகளையே தமிழத்; தேசியக் கூட்டமைப்பு எப்போதும் மேற்கொள்ளும். இந்த நிலையில் இருந்து எப்போதும் பின்வாங்காது' என்றார்.
14 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago