இலங்கை, தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையில் காலி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தென் ஆபிரிக்கா அணி 153 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகள் அடங்கிய இந்த தொடரின் முதற்ப் போட்டியியிலேயே தென் ஆபிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது. இலங்கையில் வைத்து தென் ஆபிரிக்கா அணி பெற்றுள்ள மூன்றவது வெற்றி இதுவாகும்.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் தென் ஆபிரிக்கா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 455 ஓட்டங்களைப் பெற்றது. இதில் டீன் எல்கர் 103 ஓட்டங்களையும், JP டுமினி 100 ஓட்டங்களையும், பப் டு பிலேசிஸ் 80 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் டில்ருவான் பெரேரா 4 விக்கெட்களையும், சுரங்க லக்மால் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். இலங்கை அணி தமது முதல் இன்னிங்சில் 292 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அஞ்சலோ மத்தியூஸ் 89 ஓட்டங்களையும், உப்புல் தரங்க 83 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் டேல் ஸ்டைன் 5 விக்கெட்களையும், மோர்னி மோர்க்கல் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இரண்டாவது இன்னிங்சில் தென் ஆபிரிக்கா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 206 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணிக்கு 370 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தது. தென் ஆபிரிக்காவின் துடுப்பாட்டத்தில் AB DE வில்லியர்ஸ் 51 ஓட்டங்களையும், பப் டு பிலேசிஸ் 37 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீசில் டில்ருவான் பெரேரா 4 விக்கெட்களையும், ரங்கன ஹேரத் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இலங்கை அணி தமது இரண்டாவது இன்னிங்சில் சகல விக்கெட்களையும் இழந்து 216 ஓட்டங்களைப் பெற்றது. இதில் குமார் சங்ககார 76 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் டேல் ஸ்டைன் 4 விக்கெட்களையும், மோர்னி மோர்க்கல் 4 விக்கெட்களையும் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக டேல் ஸ்டைன் தெரிவு செய்யப்பட்டார்.