
இந்தியா கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையானது மேற்கிந்திய கிரிக்கெட் சபையிடம் 400 கோடி இந்திய ரூபாய்களை இழப்பீட்டு தொகையாக கோரவுள்ளது. சட்ட நிபுணர்களுடன் இது தொடர்பாக பேசியுள்ளதாகவும், 21ஆம் திகதி அவர்களின் திட்டம் கிடைத்ததும் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் சஞ்சய் பட்டேல் தெரிவித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவிற்கு 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், 3 டெஸ்ட் போட்டிகள், ஒரு 20-20 போட்டி என்பனவற்றில் பங்குபற்ற சென்று இருந்தது. இருப்பினும் மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கும் முகாமைத்துவத்திற்கும் இடையில் ஏற்ப்பட்ட பிரச்சினை காரணமாக வீரர்கள் போட்டிகளில் பங்குபற்ற முடியாது என அறிவித்தனர். அதனையடுத்து மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை இந்தியாவிற்கான தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தது.
இந்த தொடரில் இருந்து மேற்கிந்திய தீவுகள் அணி விலகியதன் மூலம் 17 போட்டி நாட்களின் வருவாய் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு இல்லாமல் போயுள்ளது. இலங்கை அணி 5 போட்டிகளில் விளையாடுவதன் மூலம் 12 நாட்களுக்கான நிரைப்புகை செய்யும் 400 கூடி ரூபாய் பணத்தை இந்தியா கிரிக்கெட் சபை கோரவுள்ளது. இரு அணிகளுக்குமான போட்டிகளின் ஒரு நாளுக்கான வருவாயாக 33 கோடி ரூபாய் கணக்கிடப்பட்டுள்ளது. இதேவேளை ஒளிபரப்பு உரிமைக்கான தொகையின் இழப்பையும் இந்திய கிரிக்கெட் சபை சந்திக்கவேண்டிய நிலை உள்ளது. ஒரு போட்டிக்காக தொலைக்காட்சி நிறுவனம் அண்ணளவாக 43 கோடி ரூபாய்களை செலுத்துகின்றது.
மேற்கிந்திய கிரிக்கெட் சபை எடுத்த இந்த முடிவின் மூலம் இரு சபைகளுக்குமான உறவு பாதிக்கப்படும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு சபையின் உறுப்பினர்கள் சிலர் இந்தியா, இனி மேகிந்திய தீவுகளுக்கு செல்லக்கூடாது என கூறி வருகின்றனர். அத்துடன் ஐ.பி.எல் போட்டிகளில் மேற்கிந்திய வீரர்களை விளையாட அனுமதி அளிக்கக்கூடாது என்ற கருத்துகளும் வெளியிடப்பட்டுள்ளன.