2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

சங்கா அதிரடி ; சரே இறுதிப் போட்டிக்கு

Shanmugan Murugavel   / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தின் பிராந்திய அணிகளுக்கிடையிலான 50 ஓவர்கள் கொண்ட மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் தொடரின் இறுதிப் போட்டிக்கு, சரே கழகம் தகுதிபெற்றுள்ளது. குமார் சங்கக்காரவின் அதிரடிச் சதத்தின் உதவியுடன், நொட்டிங்கம்ஷையர் அணிக்கெதிரான போட்டியில், அவ்வணி வெற்றிபெற்றது.

ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில், சரே அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. தனது முதலாவது விக்கெட்டை 6 ஓட்டங்களுக்கே இழந்து தடுமாறிய போது களமிறங்கிய சங்கக்கார, 138 பந்துகளில் 166 ஓட்டங்களைக் குவிக்க, 50 ஓவர்களின் இறுதியில் 5 விக்கெட்டுகளை இழந்து 300 ஓட்டங்களைப் பெற்றது. சங்கக்கார தவிர, கரி வில்சன் (48), பென் ‡போக்ஸ் (42) ஆகியோரும் துடுப்பாட்டத்தில் பங்களிப்பை வழங்கினர்.

பந்துவீச்சில், ஜேக் போல், ஸ்டீவன் முல்லானே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலளித்தாடிய நொட்டிங்கம்ஷையர் அணி, ஓர் ஓட்டத்துக்கு இரண்டு, 16 ஓட்டங்களுக்கு 3 எனத் தடுமாறி, 4 விக்கெட்டுகளை இழந்து 107 ஓட்டங்களுடன் காணப்பட்டது. 5ஆவது விக்கெட்டுக்காக 112 ஓட்டங்கள் பகிரப்பட்ட போதிலும், 41.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 219 ஓட்டங்களுடன் தடுமாறியது. எனினும், கீழ் மத்தியவரிசை வீரர்கள் சிறப்பாக ஆடினர். இறுதியில், 50 ஓவர்களின் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 296 ஓட்டங்களைப் பெற்று, 4 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில், கிரேக் ஸ்மித் (124), டானியல் கிறிஸ்டியன் (54), சமித் பட்டேல் (51), ஸ்டீவன் முல்லானே (ஆட்டமிழக்காது 42) ஆகியோர் சிறப்பாகச் செயற்பட்டனர்.

பந்துவீச்சில், ஜேட் டேர்ண்பக், சாம் குர்றான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக, குமார் சங்கக்கார தெரிவானார்.

இதன்படி, செப்டெம்பர் 19ஆம் திகதி இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில், சரே அணியும் குளோசெஸ்டர்ஷையர் அணியும் மோதவுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .