Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 12 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

உலகின் முதல்நிலை டெஸ்ட் அணியாக, உத்தியோகபூர்வமாகத் தெரிவாகியுள்ள இந்திய அணி, ஆடுகளங்களில் தங்கியிருக்காமல், தமது திறமையிலேயே தங்கியிருப்பதாக, அவ்வணியின் தலைவர் விராத் கோலி தெரிவித்துள்ளார்.
இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடரின் 2ஆவது போட்டியில் வென்ற இந்திய அணி, முதலாவது இடத்தை உறுதிசெய்தது. பின்னர், நேற்று இடம்பெற்ற போட்டியில் வென்று, தமது முதலிடத்தை மேலும் உறுதிப்படுத்தியதோடு, முதலாமிடத்துக்கான வெற்றிக் கோலை, உத்தியோகபூர்வமாகப் பெற்றுக் கொண்டது.
இந்தத் தொடரில், இந்திய அணியின் சுழற்பந்த வீச்சாளரான இரவிச்சந்திரன் அஷ்வின், 27 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, மற்றையவரான இரவீந்திர ஜடேஜாவும், சிறப்பாகப் பந்துவீசியிருந்தார். எனினும், அதற்கு ஆடுகளங்களே முக்கிய காரணமன்று என, விராத் கோலி தெரிவித்தார்.
"ஆடுகளங்களைப் பற்றிக் கதைக்க ஆரம்பிப்பார்கள் என, இத்தொடர் ஆரம்பிக்க முன்னரே எமக்குத் தெரியும். எங்களுடைய திறமைகளை நாம் அறிவோம். எந்தவிதமான ஆடுகளங்களிலும், எந்த எதிரணியையும் வெல்லுமளவுக்கு, நாங்கள் சிறப்பாக இருக்க வேண்டுமென நாம் அறிவோம்" என்றார்.
இதற்கு முன்னைய டெஸ்ட் தலைவரான மகேந்திரசிங் டோணி, அதிகமாகச் சுழலும் ஆடுகளங்களைத் தருமாறு, ஆடுகளத் தயாரிப்பாளர்களைக் கோரும் வழக்கத்தைக் கொண்டிருந்ததோடு, அதை நியாயப்படுத்தியும் வந்திருந்தார். எனினும், விராத் கோலி, அதற்கு மாற்றான கருத்தை வெளிப்படுத்தினார்.
"எங்களுடைய திறமையில் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம். எங்களுக்கு மாத்திரம் பொருந்தும் ஆடுகளங்களையோ அல்லது சூழலையோ உருவாக்குவதில் எங்களுக்கு நம்பிக்கை கிடையாது" என, அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இந்தியாவின் சிரேஷ்ட பந்துவீச்சாளரான ஹர்பஜன் சிங்குடனும், விராத் கோலி முரண்பட்டார். கடந்த 8ஆம் திகதி கருத்துத் தெரிவித்த ஹர்பஜன் சிங், முதலாம் நாள் ஆடுகளம், இரண்டாம் நாள் ஆடுகளம் போன்று காணப்படுவதாகவும், போட்டியானது மூன்றரை நாட்களுக்கு மேல் செல்லாது எனவும் தெரிவித்தார்.
அந்தக் கருத்தைச் சுட்டிக்காட்டி, 2ஆம் நாள் முடிவில் கேள்வியொன்றை எழுப்பிய இரசிகரொருவர், தற்போது என்ன கருத்து என வினவினார். அதற்குப் பதிலளித்த ஹர்பஜன், "போட்டியின் ஆடுகளம், சுழற்பந்து வீச்சாளர்களுக்காக உருவாக்கப்பட்டது. ஏற்கெனவே கடுமையாகச் சுழல்கிறது. நியூசிலாந்து அணி, நீண்ட நேரம் துடுப்பெடுத்தாடது" எனப் பதிலளித்தார். அத்தோடு, தனக்கும் அணில் கும்ப்ளேவுக்கும், இவ்வாறான ஆடுகளங்கள் வழங்கப்பட்டிருந்தால், தங்களது விக்கெட் எண்ணிக்கை, மிக அதிகளவில் காணப்படுமெனவும் குறிப்பிட்டார்.
அதுகுறித்து, ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட போது, "அதை யார் சொன்னது?" என்று கோலி வினவினார். "ஹர்பஜன் சிங்" எனப் பதிலளிக்கப்பட்ட போது, "ஓ, சரி" என்று, அந்தப் பதிலை முடித்துக் கொண்டார். சற்றுப் பின்வாங்கிய கோலி, பின்னர் பதிலளித்தார். "ஆடுகளத்தில் பந்து சுழல்வதாக இருந்தாலும், நீங்கள் சிறப்பாகப் பந்து வீச வேண்டும். சுழற்சி என்பது, ஆடுகளத்தால் மாத்திரம் ஏற்படுவதன்று" எனத் தெரிவித்து, பந்துவீசும் முறை பற்றி விளக்கமளித்தார்.
அத்தோடு, உலக இருபதுக்கு-20 தொடரில், இந்திய அணிக்கெதிராக நியூசிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசி, தங்களது அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்ததை ஞாபகமூட்டிய அவர், அதே சுழற்பந்து வீச்சாளர்களே இத்தொடரில் விளையாடினாலும், அவர்களால் விக்கெட்டுகளைக் கைப்பற்ற முடியாமற்போனமை ஏன் எனக் கேள்வியெழுப்பினார்.
7 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
12 Apr 2026
12 Apr 2026