Shanmugan Murugavel / 2016 நவம்பர் 20 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து பிறீமியர் லீக் போட்டிகளில் நேற்று மாலை இடம்பெற்ற மன்செஸ்டர் யுனைட்டெட் அணிக்கும் ஆர்சனல் அணிக்குமிடையிலான போட்டி, சமநிலையில் முடிவடைந்தது. ஆனால் அந்த முடிவு, இரு அணிகளுக்கும் வெவ்வோறான உணர்வுகளையே ஏற்படுத்தியது.
யுனைட்டெட்டின் சொந்த மைதானமான ஓல்ட் ட்ரபோர்ட்டில் இடம்பெற்ற இப்போட்டியில், பெரும்பாலான நேரத்தில், போட்டியை யுனைட்டெட் அணி கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. முதற்பாதியில் கோல்கள் எவையும் பெறப்பட்டிருக்கவில்லை. ஆனால், அந்தோனியோ வலென்சியாவால் நாச்சோ மொன்றியால், விதிகளுக்கு மாறாகத் தடுத்து நிறுத்தப்பட்டபோது, மத்தியஸ்தர் அன்ட்ரே மரினெரால், யுனைட்டெட் அணிக்கு தண்ட உதை வழங்காமை, அதன் முகாமையாளர் ஜோஸே மொரின்யோவைக் கோபப்படுத்தியிருந்தது.
இரண்டாவது பாதி ஆரம்பித்ததும், போட்டியின் 68ஆவது நிமிடத்தில் ஜுவான் மாட்டா, கோலொன்றைப் பெற்று, 1-0 என்ற கோல் முன்னிலையை, மன்செஸ்டர் யுனைட்டெட்டுக்கு வழங்கினார். அதன் பின்னர், போட்டி முடியும் வரையும், யுனைட்டெட் அணி அந்த முன்னிலையைத் தக்க வைத்துக் கொள்ளும் போன்றே காணப்பட்டது. ஆனால், போட்டியின் 89ஆவது நிமிடத்தில் ஆர்சனல் அணியின் ஒலிவர் ஜிரோட், கோலொன்றைப் பெற்றுக் கொள்ள, 1-1 என்ற நிலையில் கோல் எண்ணிக்கை சமனானது.
இந்தப் போட்டிக்கு முன்னர், ஆர்சனல் அணியின் முகாமையாளர் ஆர்சீன் வெங்கருக்கு எதிராக 11 பிறீமியர் லீக் போட்டிகளுக்கு முகாமை செய்திருந்த மொரின்யோ, அப்போட்டிகளில் தோல்வியைச் சந்தித்திருக்கவில்லை. எனவே, இம்முடிவைத் தொடர்ந்து, அந்த எண்ணிக்கை, 12ஆக அதிகரித்தது. ஆனால், ஓல்ட் ட்ரபோர்ட் மைதானத்தில் வைத்துப் பெறப்பட்ட சமநிலை முடிவு, தோல்வியைப் போன்றதாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது. அதை, மொரின்யோவும் ஏற்றுக் கொண்டார்.
"உண்மையாகவே, இது தோல்வி போன்று உணர்கிறது. ஆர்சனலுக்கு, இது வெற்றி போன்றே தெரியும். ஆகவே நான், ஆர்சனலுக்கு எதிராகத் தோல்வியடைந்துள்ளேன். இறுதியாக, எனக்குத் தோல்வி கிடைத்துவிட்டது" என்று அவர் தெரிவித்தார்.
பிறீமியர் லீக் முடிவுகள்...
மன்செஸ்டர் யுனைட்டெட் 1-1 ஆர்சனல்
மன்செஸ்டர் சிற்றி 2-1 கிறிஸ்டல் பலஸ்
எவேர்ட்டன் 1-1 ஸ்வான்சீ சிற்றி
லிவர்பூல் 0-0 சௌதாம்டன்
ஏ.எப்.சி போர்ண்மெத் 1-0 ஸ்டோக் சிற்றி
சண்டர்லான்ட் 3-0 ஹள் சிற்றி
வட்ஃபோர்ட் 2-1 லெய்செஸ்டர் சிற்றி
டொட்டென்ஹம் ஹொட்ஸ்பர்ஸ் 3-2 வெஸ்ட் ஹாம் யுனைட்டெட்
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago