Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 13 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து அணியின் பங்களாதேஷ் தொடரிலிருந்து, இங்கிலாந்தின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான தலைவர் ஒய்ன் மோர்கன் விலகியமையைத் தொடர்ந்து, அத்தொடருக்கான தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜொஸ் பட்லர், ஒய்ன் மோர்கனைப் புகழ்ந்துள்ளதோடு, அவரே ஒருநாள் சர்வதேசப் போட்டி அணியின் உண்மையான தலைவர் எனவும் தெரிவித்துள்ளார்.
மோர்கனின் விலகல் குறித்து, இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர்கள் சிலர், கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். மிகப்பெரிய தவறொன்றை மோர்கன் செய்திருப்பதாக மைக்கல் வோணும், அவரது தலைமைத்துவத்தின் பலத்தை இது குறைக்குமென நாசர் ஹுஸைனும் தெரிவித்திருந்தனர்.
ஆனால், மோர்கனுக்கு ஆதரவு வெளியிட்டுள்ள பட்லர், "இந்த முடிவு, எங்கள் அணியைப் பிளவுபடுத்தாது. நாங்கள் மிகவும் இறுக்கமான உறவைக் கொண்டுள்ள அணி, நாங்கள் அவ்வாறே இருப்போம். நாமெல்லோரும் சிறந்த நண்பர்களாக இருக்கிறோம், நாங்கள் அவ்வாறே இருக்க விரும்புகிறோம். இவ்வாறான ஒன்று, எங்களுக்குள் பிளவுபடுத்தும் ஒன்றாக வருவதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்று தெரிவித்தார்.
அடுத்தாண்டு இடம்பெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளை வெல்வதை இலக்காகக் கொண்டு செயற்படவுள்ளதாகத் தெரிவித்த பட்லர், "ஒருநாள் சர்வதேசப் போட்டி அணியின் தலைவராக, ஒய்ன் மோர்கனே இருக்கிறார். அவர் தயாராக இருக்கும்போது, தலைமைப் பதவியை அவர் மீண்டும் பெறுவார் என நான் எதிர்பார்க்கிறேன். அவரே, இவ்வணியின் தலைவர். அவரின் கீழ், அற்புதமான முன்னேற்றங்களை அடைந்துள்ளோம்" என, மோர்கனைப் புகழ்ந்தார்.
அண்மைக்காலத்தில், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் மிகச் சிறப்பான முன்னேற்றங்களை அடைந்துள்ள இங்கிலாந்து அணி, சில வாரங்களுக்கு முன்னரேயே, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிக ஓட்டங்களைப் பெற்ற அணி என்ற உலக சாதனையைப் படைத்திருந்தது. அந்த முன்னேற்றங்களுக்கு, ஒய்ன் மோர்கனே பிரதான காரணமெனவும் பட்லர் தெரிவித்தார். "இந்த மாற்றங்களுக்கு, ஒய்ன் மோர்கனே, பிரதான காரணங்களுள் ஒன்றாக - இல்லாவிடில் பிரதான காரணமாக - அமைந்துள்ளார். அவர் அறிமுகப்படுத்தியுள்ள நாங்கள் விளையாடும் பாணியை, தொடர்ந்தும் விளையாட வேண்டுமென நான் எண்ணுகிறேன். கடந்த 18 மாதங்களாக அவர், அற்புதமான பணியை ஆற்றியுள்ளார். அவர் திரும்பி வந்ததும், தலைமைப் பதவியை மகிழ்ச்சியுடன் திரும்ப வழங்குவேன்" என, பட்லர் குறிப்பிட்டார்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago