2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

8 விக்கெட்டுகளால் வென்றது இந்தியா

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 29 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3ஆவது போட்டியில், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களின் சிறப்பான பெறுபேறுகளின் உதவியுடன், இந்திய அணி 8 விக்கெட்டுகளால் இலகுவான வெற்றியைப் பெற்றுக் கொண்டது.

மொஹாலியில் இடம்பெற்ற இப்போட்டியில், 134 ஓட்டங்கள் பின்னிலையில் காணப்பட்டு 2ஆவது இனிங்ஸை ஆரம்பித்து, 4 விக்கெட்டுகளை இழந்து 78 ஓட்டங்களுடன் இன்றைய 4ஆவது நாளை ஆரம்பித்த இங்கிலாந்து அணி, 236 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்து, இந்திய அணிக்கு 103 ஓட்டங்களை இலக்காக வழங்கியது.

இதில், ஆரம்பம் முதலேயே அவ்வணியின் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்ட போதிலும், கையில் காயமடைந்த நிலையில் 8ஆம் இலக்கத்தில் களமிறங்கிய இளம் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஹசீப் ஹமீட், தேவையான போது தடுத்தாடியதோடு, பின்னர் விக்கெட்டுகள் விழ விழ, அடித்தும் ஆடியிருந்தார். தனது 3ஆவது போட்டியில் விளையாடிய அவர், 2ஆவது அரைச்சதத்தைப் பூர்த்தி செய்திருந்தார்.

பந்துவீச்சாளர்களில், இந்தியா துடுப்பெடுத்தாடும் போது அரைச்சதம் பெற்றுக் கொடுத்த சுழற்பந்து வீச்சாளர்களான இரவிச்சந்திரன் அஷ்வின் (3), இரவீந்திர ஜடேஜா (2), ஜயந்த் யாதவ் (2) ஆகியோர், விக்கெட்டுகளைச் சரித்துக் கொடுத்திருந்தனர்.

இந்திய அணி தனது இனிங்ஸின் ஆரம்பத்தில், ஓட்டமெதனையும் பெறாத முரளி விஜய் ஆட்டமிழந்த போதிலும், 2ஆவது விக்கெட்டுக்காக 81 ஓட்டங்கள் பகிரப்பட்டு, இந்திய அணியின் வெற்றி உறுதியானது.

இப்போட்டியின் நாயகனாக, சகலதுறைப் பெறுபேறுகளை வெளிப்படுத்திய இரவீந்திர ஜடேஜா தெரிவானார்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, 3 போட்டிகளின் நிறைவில் 2 போட்டிகளை வென்றுள்ள இந்திய அணி, 2-0 என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை வகிப்பதோடு, இந்தத் தொடரை இனி இழக்க முடியாது என்ற நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஸ்கோர் விவரம்...

இங்கிலாந்து: 283/10 (துடுப்பாட்டம்: ஜொனி பெயர்ஸ்டோ 89, ஜொஸ் பட்லர் 43 ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் ஷமி 3/63, ஜயந்த் யாதவ் 2/49, உமேஷ் யாதவ் 2/58, இரவீந்திர ஜடேஜா 2/59.)

இந்தியா: 417/10 (துடுப்பாட்டம்: இரவீந்திர ஜடேஜா 90, இரவிச்சந்திரன் அஷ்வின் 72, விராத் கோலி 62, ஜயந்த் யாதவ் 55, செற்றேஸ்வர் புஜாரா 51 ஓட்டங்கள். பந்துவீச்சு: பென் ஸ்டோக்ஸ் 5/73, அடில் றஷீட் 4/118)

இங்கிலாந்து: 236/10 (துடுப்பாட்டம்: ஜோ றூட் 78, ஹசீப் ஹமீட் ஆ.இ 59, கிறிஸ் வோக்ஸ் 30 ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவிச்சந்திரன் அஷ்வின் 3/81, ஜயந்த் யாதவ் 2/21, மொஹமட் ஷமி 2/37, இரவீந்திர ஜடேஜா 2/62)

இந்தியா: 104/2 (துடுப்பாட்டம்: பார்த்திவ் பட்டேல் ஆ.இ 67, செற்றேஸ்வர் புஜாரா 25 ஓட்டங்கள். பந்துவீச்சு: கிறிஸ் வோக்ஸ் 1/16, அடில் றஷீட் 1/28)

 

ஹமீட்-இன் தொடர் முடிந்தது

முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடும் போது கையில் ஏற்பட்ட காயத்துடன், இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி, இங்கிலாந்து அணியின் இனிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க உதவிய இளம் துடுப்பாட்ட வீரர் ஹசீப் ஹமீட், இந்தியாவுக்கெதிரான இந்தத் தொடரில், மேலதிக பங்கை வகிக்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது கையில் பந்து தாக்கியதன் காரணமாக ஏற்பட்ட உபாதைக்காக, எக்ஸ் கதிர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதோடு, அதன் முடிவுகள், ஐக்கிய இராச்சியத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதிலேயு, அவரது கையில் தகடு ஒன்று வைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனவே அவர், தனது நாட்டுக்கு மீளத் திரும்பவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .