2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளராக வக்கார் யூனிஸ்

A.P.Mathan   / 2014 மே 04 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளராக, அந்த அணியின் முன்னாள் தலைவரும் வேகப்பந்து வீச்சாளருமான வக்கார் யூனிஸ் நியமிக்கப்படுவது உறுதியென பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் நஜாம் சேதி அறிவித்துள்ளார். இரண்டு வருடங்களுக்கான ஒப்பந்தம் வக்கார் யூனுஸுக்கு வழங்கப்படவுள்ளது என தெரிவித்த சேதி, பாகிஸ்தான் அணியின் தெரிவுக் குழுத் தலைவராகவும் அணியின் முகாமையாளராகவும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும் விக்கெட் காப்பாளருமான மொய்ன் கான் நியமிக்கப்பட்டுள்ளதாக சேதி மேலும் தெரிவித்துள்ளார். மொய்ன் கான் ஏற்கனவே தெரிவுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டு இருந்த நிலையில் முகாமையாளர் பதவி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம காலத்தில் விளையாடிய வீரர்கள் இவர்கள் இருவரும் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் இணைந்து செயற்படுவது அணிக்கு நன்மை தரும் என தெரிவித்த சேதி இந்த இணைவு எமது அணிக்கு நல்ல முடிவுகளை தரும் எனவும் தெரிவித்தார்.

டேவ் வட்மோர், பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து பயிற்றுவிப்பாளர் இடம் முழுமை பெறாமல் இருந்து வந்தது. மொய்ன் கான் அந்த இடத்திற்கு நியமிக்கப்பட்டு இருந்த போதும் ஆசியக் கிண்ண தொடர் தோல்வி, உலக ட்வென்டி ட்வென்டி தொடரின் முதல் சுற்று வெளியேற்றம் என்பன மொய்ன் கானின் பதவியை தொடர முடியாமல் செய்தது. இதனை தொடர்ந்து புதிய பயிற்றுவிப்பாளர்களை தேடும் முயற்சியில் களமிறங்கியது பாகிஸ்தான் கிரிக்கெட் சபை.

வக்கார் யூனுஸ் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்ப்படும் அதேவேளை அவருக்கு கீழ் கடமையாற்றவுள்ள பந்து வீச்சு பயிற்றுவிப்பாளர். களத் தடுப்பு பயிற்றுவிப்பாளர், துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர், சுழல்ப் பந்து ஆலோசகர் போன்ற பதவிகளுக்கு நியமிகப்படவுள்ளவர்கள் பற்றிய விபரங்கள் மே மாதம் 6ஆம் திகதி அறிவிக்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் நஜாம் சேதி தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .