
பங்களாதேஷ், சிம்பாவே அணிகளுக்கிடையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 132 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடர் பங்களாதேஷில் நடைபெற்று வருகின்றது. சகிப் அல் ஹசனின் சிறந்த சகலதுறை ஆட்டம் பங்களாதேஷ் அணியின் வெற்றிக்கு கை கொடுத்தது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்சில் 433 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்களையும் இழந்தது. இதில் சகிப் அல் ஹசன் 137 ஓட்டங்களையும், தமிம் இக்பால் 109 ஓட்டங்களையும் பெற்றனர். மஹமதுல்லா 56 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் டினஷே பன்யங்கரா, டென்டாய் சட்டாரா, மல்கொம் வொல்லர் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டனர். சிம்பாவே அணி தமது முதல் இன்னிங்சில் 368 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்களையும் இழந்தது. இதில் ஹமில்டன் மசகட்ஷா 158 ஓட்டங்களையும், ரெஜிஸ் சக்கபாவா 101 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சகிப் அல் ஹசன் 5 விக்கெட்களையும், டைஜுல் இஸ்லாம் 3 விக்கெட்களையும், ரூபெல் ஹொசைன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இரண்டாவது இன்னிங்சில் பங்களாதேஷ் அணி 9 விக்கெட்களை இழந்து 248 ஓட்டங்களைப் பெற்று சிம்பாவே அணிக்கு 314 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தது. இதில் மஹமதுல்லா 71 ஓட்டங்களையும், மொமியுனுள் ஹக் 54 ஓட்டங்களையும், ஷுவகடா ஹோம் 50 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். மல்கம் வொலர் , நட்சை சங்வே ஆகியோர் தலா 4 விக்கெட்களைக் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பாடிய சிம்பாவே அணி 151 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஹமில்டன் மசகட்ஷா 61 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் சகிப் அல் ஹசன் 5 விக்கெட்களையும், டைஜூல் இஸ்லாம் 3 விக்கெட்களையும், ஜுபைர் ஹொசைன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக சகிப் அல் ஹசன் தெரிவானார்.