
இந்திய அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையின முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 48 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. போட்டியின் ஐந்தாவது நாளான இன்று, ஐந்து விக்கெட் இழப்பிற்கு 290 என்ற நேற்றைய தனது ஓட்டங்களுடன் இரண்டாவது இன்னிங்ஸை முடித்துக்கொண்ட அவுஸ்திரேலிய அணி, இந்திய அணியைத் துடுப்பெடுத்தாட அழைத்தது.
363 என்ற இலக்குடன் இந்திய அணி துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது. அணியின் ஓட்ட எண்ணிக்கை 16 ஆக இருந்தபோது ஷிகர் தவானும், 57 ஆக இருந்தபோது புஜாராவும் ஆட்டமிழக்க இந்திய அணி சங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டது. அடுத்து ஜோடி சேர்ந்த முரளி விஜய், விராட் ஹோலி இருவருமாக அணியின் ஓட்ட எண்ணிக்கையை 242 வரை வேகமாக உயர்த்தினர். இந்தவேளையில் இந்திய அணிக்கான வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருந்தது.
99 ஓட்டங்களைப் பெற்றிருந்தவேளை முரளி விஜய், லியோனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்துவந்த ரஹானே ஓட்டமெதையும் பெறாமலும், ரோஹித் சர்மா 6 ஓட்டங்களுடனும், ரித்திமன் சஹா 13 ஓட்டங்களுடனும் அடுத்தடுத்து லியோனின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, இந்திய அணி பெரும் சரிவைச் சந்தித்தது.
அணியின் ஓட்ட எண்ணிக்கை 304 ஆக இருந்தபோது 141 ஓட்டங்களைப் பெற்றிருந்த விராட் ஹோலியும் லியோனின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அவுஸ்திரேலிய அணியின் வெற்றி உறுதியானது. பின் வரிசை வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேற 3 விக்கெட் இழப்பிற்கு 242 ஓட்டங்கள் என்ற நிலையிலிருந்த இந்திய அணி, 315 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து தோல்வியடைந்தது.
இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தின்போது 34.1 ஓவர்கள் பந்துவீசி, 152 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களைக் கைப்பற்றிய லியோனின் அபாரப் பந்துவீச்சு, 48 ஓட்டங்களாலான டெஸ்ட் வெற்றியை அவுஸ்திரேலிய அணிக்குப் பெற்றுக்கொடுத்தது. இந்தப் போட்டியில், சுழல்பந்துவீச்சாளரான லியோன், மொத்தமாக 12 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் பெற்றுக்கொண்டார்.
இந்திய அணியின் சுழல்பந்துவீச்சாளரான கார்ன் ஷர்மா 4 விக்கெட்களை மாத்திரமே வீழ்த்தியிருந்தார். ஏற்கனவே, அணியில் இவரது தெரிவு பல்வேறு விவாதங்களை எழுப்பியிருந்த நிலையில், இந்தப் பெறுபேறு, அடுத்துவரும் போட்டிகளில் இவரது இடத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
நான்கு போட்டிகள் கொண்ட அவுஸ்திரேலிய இந்திய அணிகளுக்கிடையிலான இந்த டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எதிர்வரும் 17 ஆம் திகதி, பிரிஸ்பேர்ணில் ஆரம்பமாகவுள்ளது.