.jpg)
பாகிஸ்தான் - நியூஸிலாந்து அணிகளுக்கிடையில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் சார்ஜா மைதானத்தில் பகலிரவுக் போட்டியாக இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற 3ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் பாகிஸ்தான் அணி 147 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அதற்கமைய, 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 364 ஓட்டங்களைக் குவித்தது. பாகிஸ்தான் அணி சார்பில் அபாரமாக விளையாடிய அஹமட் ஷெஹ்ஸாட், 120 பந்துகளை எதிர்கொண்டு 2 சிக்ஸர்கள் 12 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 113 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சாளர்கள் சார்பாக மட் ஹென்றி - 3 விக்கெட்டுகளையும், மிச்சல் மக்கிளேனகன், குரே அன்டெர்சன், நதன் மக்லம் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
365 என்ற இமாலய வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, 38.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 217 ஓட்டங்களை மட்டுமே பெற்று, படு தோல்வியடைந்தது.
நியூஸிலாந்து அணி சார்பில் அதிகூடிய ஓட்டமான 46இனை கன்னே வில்லிம்ஸன் பெற்றுக்கொண்டார்.
பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்கள் சார்பில் ஷஹீட் அப்ரிடி மற்றும் ஹரிஸ் ஷொஹைல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், மொஹமட் இர்பான் 2 விக்கெட்டுகளையும், வஹாப் ரியாஸ் மற்றும் அஹமட் ஷெஹ்ஸாட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
போட்டியின் நாயகனாக அஹமட் ஷெஹ்ஸாட் தெரிவானார்.
5 போட்டிகளைக் கொண்ட குறித்த தொடரில் பாகிஸ்தான் அணி 2 இற்கு 1 என்ற நிலையில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.