A.P.Mathan / 2015 ஜனவரி 19 , மு.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்கா - மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையில் நேற்று ஜொஹன்னர்ஸ்பேர்க் மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டியில், தென்னாபிரிக்க அணி 148 ஓட்டங்களால் மேற்கிந்தியத்தீவுகள் அணியை வெற்றிகொண்டது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி, முதலில் தென்னாபிரிக்க அணியை துடுப்பெடுத்தாடும்படி பணித்தது. அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் அசத்தல் ஆட்டத்தின் மூலம், 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 439 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதன்மூலம், சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிகூடிய ஓட்டங்களைக் குவித்த இரண்டாவது அணி என்ற பெருமையை தனதாக்கிக்கொண்டது தென்னாபிரிக்கா. முதலிடத்தில் இலங்கை அணி 443 ஓட்டங்களைப் பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ஹஸிம் அம்லா, ரிலி ரொஸோவ் ஆகியோர் அபாரமாக துடுப்பெடுத்தாடி சதங்களைப் பெற்றுக்கொண்டனர். இருவரும் இணைப்பாட்டமாக 38.3 ஓவர்களில் 247 ஓட்டங்களைக் குவித்தனர். ரிலி ரொஸோவ் - 128 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின்னர் ஹஸிம் அம்லாவுடன் ஜோடி சேர்ந்த ஏபி டி வில்லியர்ஸ், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பெற்ற அதிவேக அரைச்சதம், சதம் மற்றும் அதிகூடிய சிக்ஸர்கள் என்ற சாதனையை தனதாக்கிக் கொண்டார். 16 பந்துகளை எதிர்கொண்டு 5 ஆறு ஓட்டங்கள், 3 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக அரைச்சதத்தினைப் பெற்றுக்கொண்டார். இதன்மூலம், சனத் ஜயசூரியவின் அதிவேக சதம் என்ற சாதனையை முறியடித்தார். அதன் பின்பும் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய வில்லியர்ஸ், 31 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 10 ஆறு ஓட்டங்கள், 8 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக சதத்தினைப் பூர்த்திசெய்தார். இதன்மூலம் அதிவேக சதம் பெற்றவர் என்ற சாதனையையும் தனதாக்கிக்கொண்டார். 59 நிமிடங்கள் மாத்திரம் களத்தில் நின்று, 44 பந்துகளில் 16 ஆறு ஓட்டங்கள், 9 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 149 ஓட்டங்களைப் பெற்று வில்லியர்ஸ் ஆட்டமிழந்தார். தென்னாபிரிக்க அணி, 50 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 439 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
மேற்கிந்தியதீவுகள் அணியின் பந்து வீச்சாளர்களான ஜெரேம் டெய்லர் மற்றும் அன்ரே ரஸ்ஸல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
440 என்ற இமாலய வெற்றி இலக்கினை நோக்கித் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி, 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 291 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 148 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவிக்கொண்டது.
மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் டிவெய்ன் ஸ்மித் 64 ஓட்டங்களையும் டினேஸ் ரம்டின் 57 ஓட்டங்களையும் அதிகூடியதாகப் பெற்றுக்கொண்டனர்.
தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சாளர்களான மோர்னி மோகல் மற்றும் வேர்னொன் பிளேன்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக ஏபி டி வில்லியர்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.
குறித்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2 போட்டிகளில் தென்னாபிரிக்க அணி வெற்றிபெற்று முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
04 Apr 2026